Manipur: மணிப்பூர் கலவரத்தால் சுமார் 1500 பேர் நாகலாந்தில் தஞ்சம்!
மைத்தேயி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையேயான ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் அம்மாநிலத்தை சேர்ந்த சுமார் 1,500 பேர் அண்டை மாநிலமான நாகலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடி இனத்தவர்களுக்கும், பழங்குடிகள் அல்லாத இனத்தவருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. இரண்டு பிரிவினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதன் எதிரொலியாக தொலைபேசி மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மணிப்பூர் மாநிலம் வந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு சென்று தொடர்ந்து ஆலோசனை நடத்திய நிலையில் அம்மாநிலத்தில் இதுவரை இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் அண்டை மாநிலமான நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய உள்துறை ஆணையர் அபிஜித் சின்ஹா , “நாகாலாந்து அரசாங்கம் இன்னும் துல்லியமான தரவுகளை சேகரிக்கவில்லை. இருப்பினும், கிடைக்கப்பெறும் அறிக்கைகளின்படி, மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கிய மைத்தேயி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையேயான ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வடகிழக்கு மாநிலத்தில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர சுமார் 10,000 இராணுவம் மற்றும் துணை இராணுவப் பணியாளர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.