தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Murder Case Against Indian Fisherman: மாலுமி மரணம்! இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு

Murder case Against Indian Fisherman: மாலுமி மரணம்! இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 27, 2024 05:25 PM IST

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீதும் கடற்படை மாலுமி மரணம் தொடர்பாக லகொலை வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு
இலங்கை கடற்படையினர் கைது செய்த 10 இந்திய மீனவர்கள் மீது கொலை வழக்கு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது, படகுகளை கைப்பற்றும் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கடற்படை மாலுமி ஒருவரின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலுமி உயிரிழப்பு

கடற்படையின் கடற்படை சிறப்பு படகு படைப்பிரிவின் மாலுமி ஒருவர் "இந்திய விசைப்படகு பறிமுதல் செய்யப்படும் போது நிகழ்ந்த மோதலில் படுகாயமடைந்தார்" என்று இலங்கை கடற்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "படுகாயமடைந்த கடற்படை வீரர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, கைதான மீனவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்கு எதிராக அறிக்கை தாக்கல்

10 இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கோரி காங்கேசன்துறை போலீசார், யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் 'பி' அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்படை வீரர் ஒருவரின் மரணம் மற்றும் கடற்படை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் எனகைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த கடற்படை வீரரின் பிரேத பரிசோதனையை யாழ்ப்பாணம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் மாலுமியின் மரணம், முதுகெலும்பில் ஏற்பட்ட சேதத்தின் விளைவாக நிகழ்ந்த விபத்து என்று பரிசோதனையில் தீர்மானிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதில் மரணமடைந்த 40 வயதான மாலுமியின் இறுதிச்சடங்கு வடமேல் மாவட்டமான குருநாகலில் நடந்தது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் பிரச்னை

இந்தியா, இலங்கை இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்னை சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இலங்கை பிராந்திய எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதியான பாக் ஜலசந்தி, இரு நாட்டு மீனவர்களுக்கும் வளமான மீன்பிடி தளமாகும்.

இரு நாட்டு மீனவர்களும் கவனக்குறைவாக ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.

இந்த ஆண்டில் இதுவரை 200க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 விசை படகுகளை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 240 இந்திய மீனவர்கள் மற்றும் 35 விசை படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.