Health Tips: கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம் எது? நிபுணர் டிப்ஸ்!
கருப்பு கொண்டைக்கடலையில் ஆரோக்கியத்துக்கு உகந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதை சாப்பிடுவதற்கான சரியான நேரத்தை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சமச்சீரான உணவுகளை சாப்பிட வேண்டும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.
எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில உணவுப்பொருட்களை தவறான நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
கருப்பு கொண்டைக்கடலையில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் ஏராளம். இதில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. கருப்பு கொண்டக்கடலையை வேக வைத்து சுண்டலாக சாப்பிடலாம் அல்லது குழம்பிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு கருப்பு கொண்டக்கடலையை சாப்பிடும் பொழுது வயிற்று உப்புசம், வாயு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று வலியும் ஏற்படலாம். போதுமானவரை கருப்பு கொண்டக்கடலையை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கருப்புக் கொண்டைக்கடலையின் அதிகபட்ச நன்மைகளை பெற அதை எந்த நேரத்தில் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான சூர்யா மாணிக்கவேலிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம்-
நிபுணரின் கருத்துப்படி கருப்பு கொண்டைக்கடலையை காலை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். இது புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். மேலும் கருப்பு கொண்டைக்கடலையை காலையில் சாப்பிடுவதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்து புத்துணர்ச்சியுடன் செயல்படலாம்.
காலையில் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். இது எடை இழப்புக்கும் உதவும். ஏனெனில் காலையில் உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருக்கும். இந்த காலை பொழுது கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கலோரிகளை குறைக்கலாம்.
கொண்டைக்கடலையில் கடினமான கார்போஹைட்ரேட்கள், புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
காலையில் எழுந்தவுடன் இரவு முழுவதும் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடலாம். இது ஆரோக்கியத்துக்கு அதிக நன்மைகளை தரும். இருப்பினும் செரிமான மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் இதை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செரிமானம் சார்ந்த பிரச்னைகள் உடையவர்கள் கருப்பு கொண்டக்கடலையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
கருப்பு கொண்டக்கடலையை காலையில் சாப்பிடும் பொழுது அது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். எனவே இது போன்ற உணவுகளின் மூலம் தேவையற்ற பசி ஆர்வம் அல்லது உணவு உட்கொள்ளலை குறைக்கலாம்.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
டாபிக்ஸ்