Home Remedies for Warts: என்னது இதனைச் செய்தால் மருக்கள் உதிர்ந்து விடுமா…
வீட்டு வைத்திய முறையைப் பயன்படுத்தி உடலில் ஏற்படும் மருக்களைப் போக்கும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.
உடலில் வரக்கூடிய மருக்கள் சிலருக்குத் தொந்தரவு பலருக்கு மன உளைச்சல். எச்பிவி வைரஸின் வகைகளைப் பொறுத்து மருக்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு மருக்கள் உருவாகின்றன. இதற்காக மக்கள் பல மருத்துவங்களைக் கையாண்டு வருகின்றனர்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த சிக்கல்கள் ஆரம்பித்து விடுகின்றன. இந்த சிக்கலை வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.
தேயிலை மர எண்ணெய்
தொடர்ந்து மருக்கள் மீது நீர்த்த தேயிலை மர எண்ணெய்யைப் பயன்படுத்தும் போது அவை உதிர்ந்து விடும். மருக்கள் மீது இந்த எண்ணெய்யை சில மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெய்யுடன் மூன்று துளிகள் தேயிலை மர எண்ணெய்யைக் கலந்து காட்டன் துணியைப் பயன்படுத்தி மருக்களின் மீது வைத்து எடுக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்யலாம்.
ஆஸ்பிரின்
சாலிசிலிக் என்ற அமிலம் ஆஸ்பிரின் மருந்துகளில் உள்ளது. இந்த மாத்திரைகளைப் பொடியாக நறுக்கி மாவு போல் தண்ணீரில் கலந்து மருக்கள் மீது தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலை எழுந்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மருக்கள் உதிர்ந்து விடும்.
நெயில் பாலிஷ்
நகங்களை அழகுபடுத்தப் பெண்கள் பயன்படுத்துவது இந்த நெயில் பாலிஷ். இதனை இரண்டு அல்லது மூன்று அடுக்கு வரை மருக்களின் மீது வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மருக்களுக்குச் செல்லும் ஆக்சிஜன் விநியோகத்தை அது குறைக்க உதவுகிறது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.
வைட்டமின் ஈ மற்றும் சி
வைட்டமின் ஈ மாத்திரைகளில் இருக்கும் எண்ணெய்யை மருவின் மீது தடவ வேண்டும். அதை அப்படியே கட்டி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் எழுந்து குளித்து விட வேண்டும். தொடர்ந்து இதுபோல இரண்டு வாரங்கள் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வைட்டமின் சி மாத்திரைகளைப் பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் கலந்து மருக்களின் மீது தொடர்ந்து தடவி வந்தால் நாளடைவில் மருக்கள் உதிரும்.
கற்றாழை
பொதுவாகவே கற்றாழை சருமத்திற்குச் சிறந்த நிவாரணி ஆகும். கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மருக்கள் மீது தொடர்ந்து தடவி வந்தால் படிப்படியாக அது வலுவிழந்து உதிர்ந்து விடும். மேலும் அதனால் உண்டாகும் எரிச்சல், சரும சிக்கல்களை நீக்கி முகத்தைப் பொலிவாக மாற்றிவிடும்.