Weight Loss Breakfast: ஊட்டச்சத்துக்களுடன், உடல் எடை குறைப்பு! 2 இன் ஒன் பலனை தரும் காலை உணவு
ஊட்ச்சத்துக்கள் நிறைந்து, உடல் எடை குறைப்பு உதவும் காலை உணவாக தினை சார்ந்த ரெசிப்பிகள் இருக்கின்றன. இவை உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை தருவதோடு எடை இழப்புக்கும் உதவி புரியும் 2 இன் ஒன் பலனை தரும் காலை உணவாக உள்ளது.
காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக அவசியமான உணவாகும். சத்தான காலை உணவை உட்கொள்வது, நாள் முழுவதும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவுகிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் காலை உணவு உதவுகிறது.
எனவே உங்களது காலை உணவை ஆரோக்கியமானதாக தேர்வு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளையும், பலன்களையும் பெறலாம். காலை உணவுக்கு தினை சார்ந்த் ரெசிபிகள் உடல் எடை குறைப்பு முதல் உடல் செயல்பாடுகளில் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது.
தினையில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பசையம் இல்லாத தானியமாக அவை இருப்பதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை தருவதோடு, பசியை கட்டுப்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எடை இழப்புக்கு வழவகுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் செய்கிறது.
எடை குறைப்புக்கு தினை உணவுகள் எவ்வாறு உதவுகின்றன
நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் முழுமையான உணர்வை தருகிறது. இதனால் கலோரி உட்கொள்ளல் குறைகிறது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், குளுக்கோஸை மெதுவாக ரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. அத்துடன் நிலையான ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க செய்கிறது.
தினையில் உள்ள புரதம் தசை வளர்ச்சியை ஆதரித்து, தசையில் ஏற்படும் பழுதுகளை சரி செய்கிறது. உணவின் வெப்ப விளைவை ஊக்குவிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பி ஊட்டச்சத்து அடர்த்தி மிக்கதாக உள்ளது.
தினையில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கிறது. மலச்சிக்கல், வயிறு உப்புசம் ஆவதை தடுக்க உதவுகிறது
எடைக்குறைப்புக்கு உதவுவதுடன், உடலுக்கு தேவையான ஊட்டத்துகளை தருவதோடு காலையில் சாப்பிடக்கூடிய தினை சார்ந்த ரெசிப்பிகள் சிலவற்றை பார்க்கலாம்
தினை கஞ்சி
தேவையான பொருள்கள்
தினை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
பாதாம் பால் - 1 கப்
தேன் அல்லது மேப்பிள் சிரப் - 1 டிஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1/2 டிஸ்பூன்
ஏதேனும் பழங்கள் (பெர்ரி, வாழைப்பழங்கள் போன்றவை)
செய்முறை
தினையை குளிர்ந்த நீரில் ஊறவைத்து கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இளம் சூட்டில் 20 நிமிடங்கள் தினை மென்மையாகும் வரை கொதிவாக்கவும். நன்கு கொதி வந்தவுடன் பாதாம் பால், தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து கிளறவும். இறுதியாக அதன் மேல் பழங்கள் சேர்த்து பரிமாறலாம்.
தினை உப்புமா
தேவையான பொருள்கள்
தினை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
வெங்காயம் நறுக்கியது - 1
கேரட் துண்டுகளாக்கப்பட்டது - 1
பட்டாணி - 1/2 கப்
கடுகு - 1 டிஸ்பூன்
சீரகம் - 1 டிஸ்பூன்
எண்ணெய் - 1 டிஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது அளவு
உப்பு தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - அரை டிஸ்பூன்
செய்முறை
தினையை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் கேரட், பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இவற்றில் தினை சேர்த்து, நன்கு கிளறிய பின் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி, தினை மென்மையாகும் வரை 10-15 நிமிடங்கள் சமைக்கவும். பரிமாறும் முன் எலுமிச்சை சாற்றை தெளிக்கலாம்.
தினை மற்றும் பருப்பு தோசை
தேவையான பொருள்கள்
தினை - 1 கப்
துவரம் அல்லது பாசி பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டிஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்பு
எண்ணெய்
செய்முறை
தினை, பருப்பு மற்றும் வெந்தய விதைகளை கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் அதை மிருதுவாக அரைத்து, உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.
நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி, மாவை ஊற்றி, மெல்லிய வட்டமாகப் பரப்பி விளிம்புகளை சுற்றி எண்ணெயை ஊற்றி பொன்னிறமான பின் புரட்டி, மறுபுறம் சமைக்கவும். இதை சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
தினை சாலட்
தேவையான பொருட்கள்
வேக அல்லது சுட வைத்த தினை - 1 கப்
வெள்ளரி நறுக்கியது - 1
தக்காளி நறுக்கியது - 1
வேகவைத்த கொண்டைக்கடலை - 1/4 கப்
சீஸ் - 1/4 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 டிஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டிஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
மிளகு தேவைக்கு ஏற்ப
புதினா - சிறிது அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சமைத்த தினை, நறுக்கிய வெள்ளரி, தக்காளி மற்றும் வேகவைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர் சீஸ், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.
நன்கு கிளறி புதிய மூலிகைகளால் அலங்கரிக்கவும். சத்தான தினை சாலட்டை குளிரவைத்து பரிமாறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.