Tasty Recipe: விருதுநகர் புழுங்கல் அரிசி மாவு புட்டு
விருதுநகர் புழுங்கல் அரிசி மாவு புட்டு கேள்விப்பட்டுள்ளீர்களா? இது அந்த ஊரின் ஸ்பெஷல் ரெசிபி.
மகர நோன்பு அன்று அனைவரின் வீட்டிலும் எங்கள் ஊரில் கண்டிப்பாக இந்த புட்டு செய்வார்கள்.
மாவு மில்லில் அரைத்து வந்த உடனேயே இந்த புட்டு பிடிக்க வேண்டும் என்பதால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும், நண்டு சிண்டு உட்பட அமர்ந்து ஒரு பிடி பிடிப்பார்கள்.
குழிக்கரண்டி, சிறிய கிண்ணம், ஏன் ஆரஞ்சு பிழியும் மூடி என கற்பனைக்கு ஏற்றவாறு பிடிப்போம்.
புட்டு தயாரானதும் பாரு என் புட்டு உடையாம அழகா வந்து இருக்கு என்று மற்ற குழந்தைகளிடம் போட்டி போடுவோம்.
இவ்வாறான செய்முறைகள் குழந்தைகளை மிகவும் ஈர்க்கும். செய்து பாருங்களேன் உங்கள் குழந்தைகளுடன்...
விருதுநகர் புழுங்கல் அரிசி மாவு புட்டு செய்யத் தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
துருவிய தேங்காய் - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி விட்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற விடவும்.அதற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு துணி அல்லது துணிப்பையில் கட்டி தண்ணீர் நன்கு வடியுமாறு ஒரு மணி நேரம் தொங்க விடவும் .
ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஒரு துணியில் நன்றாக பரப்பி விட்டு அரை மணி நேரம் வீட்டுக்கு உள்ளே நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். அரிசியைத் தொட்டால் ஈரப்பதம் இருக்க வேண்டும் ஆனால் தண்ணீர் சொட்டக் கூடாது. அதுவே சரியான பதம்.
நாம் குறைவான அளவே செய்வதால் மிக்ஸியிலே அரைத்து விடலாம். ஏனென்றால் மாவு மில்லில் குறைந்தது ஒரு கிலோ ஈர அரிசி தான் அரைப்பார்கள். ஒரு கிலோ அரிசியில் செய்கிறீர்கள் என்றால் மாவு மில்லில் அரைத்து வாங்கிக் கொள்ளலாம். மிக்ஸியில் ஓரளவே மென்மையாக அரைக்க முடியும்.
எவ்வளவு மென்மையாக அரைக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.மாவு மில்லில் அரைத்தால் நன்றாக மென்மையாக வரும். மாவு மில்லில் அரைத்த மாவை பெரிய கண் சல்லடையில் (ரவை சல்லடை) சலித்துக் கொள்ளவும்.மாவு அரைத்த உடனேயே இந்த புட்டு செய்ய ஆரம்பித்து விட வேண்டும்.
மாவு அரைத்த உடனே அது சூடாக இருக்கும். அந்த சூட்டோடு நாம் சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்ப்பதால் மூன்றும் நன்றாக கலந்து பிடிக்க வரும்.
அதனால் மிக்ஸியிலோ அல்லது மாவு மில்லிலோ அரைத்த உடனேயே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.அரைத்த மாவு, சர்க்கரை, துருவிய தேங்காய் ஆகிய மூன்றையும் நன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்து விடவும். இந்த கலவையை கையில் எடுத்து பிடித்தால் பிடிக்க வர வேண்டும். உதிர்த்தினால் உதிர்ந்து விட வேண்டும். அவ்வாறு வந்தால் நாம் சரியான பதத்தில் செய்து இருக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த கலவையை வேண்டும் என்கிற வடிவத்தில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
ஒரு குழிக்கரண்டியின் உள்ளே கலவையை வைத்து பின் திருப்பி தட்டலாம் அல்லது ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து பின் திருப்பி தட்டலாம்.இப்போது பிடித்து வைத்துள்ள புட்டை ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஆவி வரும் வரை அதிக தீயில் வைத்து விட்டு, ஆவி வந்ததும் தீயை குறைத்து வேக விட்டு எடுக்கவும்.
சுவையான புழுங்கல் அரிசி புட்டு தயார்!
டாபிக்ஸ்