Tuberculosis : வாவ் ஆய்வு – காசநோயை கண்டுபிடிக்கும் AI தொழில்நுட்பம் – மருத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்!
மும்பையில் உள்ள Qure.ai நிறுவன தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு qXR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காசநோய் கண்டறிவதை எக்ஸ்-ரே பதிவில் ஆராய்ந்தால் ஒரு நிமிடத்திற்குள் அதிகம் பேருக்கு காசநோய் இருப்பதை கண்டறிய முடியும் எனும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில், 2019-21ம் ஆண்டு செய்த ஆய்வில் எக்ஸ்-ரேவை பயன்படுத்தாமல் போனால், 43 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்படாமல்போனது ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
காசநோயை ஆரம்பத்திலேயே எளிதில் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு ஆய்வுகளை பயன்படுத்தினால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. காசநோய் ஒழிப்பில் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவது மிக முக்கியம்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் செயற்கை நுண்ணறிவு (qXR) மூலம் காசநோய் கண்டறிவதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் நோய் கண்டறியும் தேவைகளை செயற்கை நுண்ணறிவுத் திட்டம் (qXR) பூர்த்திசெய்துள்ளதால், உலக சுகாதார நிறுவனமும், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.
இந்திய அரசு இதுகுறித்து இன்னமும் கொள்கை முடிவு ஏதும் எடுக்காத நிலையில், அத்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கிறது.
மத்திய காசநோய் பிரிவும், சுகாதார தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் அனுமதிக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் எக்ஸ்-ரே பதிவுகளை ஆராய்வது ஆரம்பத்திலேயே காசநோய் பாதிப்பை கண்டறிய உதவும்.
வியட்நாமில் 2014-17ல் மூலக்கூறு ஆய்வுகள் மூலம் காசநோய் பாதிப்பை உறுதிசெய்யும் திட்டத்தால், 2018ம் ஆண்டு நுரையீரலைத் தாக்கும் காசநோய் தாக்கம் குறைந்திருப்பது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மூலம் எக்ஸ்-ரே பதிவுகளை ஆராய்ந்து காசநோய் பாதிப்பை உறுதிபடுத்துவது எளிதாகவும், திறன் மிக்கதாகவும் இருப்பதால் மூலக்கூறு ஆய்வுகளின் தேவை குறைந்து, காசநோய் தாக்கமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசநோயை எளிதில் கண்டறிய செயற்கை நுண்ணறிவு-qXR தொழில்நுட்பம், தற்போது 50 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவில், 24 மாநிலங்களில்,150 இடங்களில் இத்தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் பெருமளவில் இத்தொழில்நுட்பம் பயன்பாட்டில் இல்லை என்பது குறையாகவே உள்ளது.
சென்னையில் 6 இடம்பெயரும் ஊர்திகளிலும் (Mobile vans), கேரளாவில் ஒரு இடத்தில் மட்டுமே இத்தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.
2022ல் மும்பையில் செய்த ஆய்வில் 30 சதவீதம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது வேறு காரணங்களுக்காக எக்ஸ்-ரே எடுக்கும்போது தெரியவந்துள்ளது. காசநோய் பாதிப்பை கண்டறிவதற்கு பதிலாக, வேறு காரணங்களுக்கு வழக்கமாக எக்ஸ்-ரே எடுப்பதால் 13 சதவீதம் கூடுதல் காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் திட்டம் மூலம் (qXR) காசநோயை கண்டறியும் திட்டத்தின் வாயிலாக எக்ஸ்-ரே பதிவுகளை ஆராய்ந்து முடிவிற்கு வருவதன் மூலம், மூலக்கூறு ஆய்வுகள் மூலம் காசநோய் பாதிப்பு உறுதிபடுத்தப்படுவது 18-27 சதவீதம் அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் காசநோய் பாதிப்பை செயற்கை நுண்ணறிவுத் திட்டம் மூலம் (qXR) வீடுகளுக்கே சென்று, My Beam எனும் திட்டத்தின் மூலம் மிகக் குறைந்த கதிர்வீச்சை பயன்படுத்தி, (வழக்கமான எக்ஸ்-ரே எடுப்பதால் ஏற்படும் கதிர்வீச்சு தாக்கத்தைக் காட்டிலும், தேவையான புள்ளி விவரங்களை,1/20-1/30 குறைந்த கதிர்வீச்சின் தாக்கத்திலே) உறுதிபடுத்த முடியும் என்பதால், இந்தியாவின் காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் இத்தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் இதன் பயன்பாடு விரைவில் அதிகரிக்கலாம் எனத் தோன்றுகிறது.
நன்றி - மருத்துவர். புகழேந்தி
டாபிக்ஸ்