TN Forest : புவிவெப்பமடைதல், மண்வளம் குறைவால் மோசமாக பாதிக்கப்படும் தமிழக காடுகள் - தீர்வுகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tn Forest : புவிவெப்பமடைதல், மண்வளம் குறைவால் மோசமாக பாதிக்கப்படும் தமிழக காடுகள் - தீர்வுகள் என்ன?

TN Forest : புவிவெப்பமடைதல், மண்வளம் குறைவால் மோசமாக பாதிக்கப்படும் தமிழக காடுகள் - தீர்வுகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Mar 13, 2024 10:49 AM IST

TN Forest : "பசுமைமாறாக் காடுகளைக் காட்டிலும், மண் அதிக கார்பனை சேமிக்கும் திறன் கொண்டுள்ளது என்பதால், புவிவெப்பமடைதல் பிரச்னையை குறைக்க மண்வளத்தை காக்கும் திட்டங்களுக்கு, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்க உடனடியாக முன்வர வேண்டும்".

TN Forest : புவிவெப்பமடைதல், மண்வளம் குறைவால் மோசமாக பாதிக்கப்படும் தமிழக காடுகள் - தீர்வுகள் என்ன?
TN Forest : புவிவெப்பமடைதல், மண்வளம் குறைவால் மோசமாக பாதிக்கப்படும் தமிழக காடுகள் - தீர்வுகள் என்ன?

Centre for Climate Change and Disaster Management – CCCDM அண்ணா பல்கலைக்கழக ஆய்வு முடிவுகளே அவை.

"Climate Risk Assessment in Forestry Sector - Tamilnadu" என்ற தலைப்பில் தமிழக உயர்வன அதிகாரிகளுக்கு 11.3.24 அன்று சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் 1985-2014 இடைப்பட்ட காலத்தில் (ஆரம்பகட்ட புள்ளிவிவரம்), 1,881 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகள்,13,394 சதுர கி.மீ. இலையுதிர் காடுகள், 4,292 சதுர கி.மீ. முள்காடுகள் இருப்பது புள்ளிவிவரங்களாக உள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமக நிகழ்ந்த வெப்ப உயர்வும், மழைப்பொழிவு குறைவும் 2050ம் ஆண்டில், பசுமைமாறாக் காடுகள் 32 சதவீதம் குறைந்தும் (2050ல் 1,280.80 சதுர கி.மீ. மட்டுமே பசுமைமாறாக் காடுகள் இருக்கும்), இலையுதிர்காடுகள் 18 சதவீதம் குறைந்தும் (2050ல் 10,941.79 சதுர கி.மீ. இலையுதிர்காடுகள் மட்டுமே இருக்கும்) போக காரணமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் முள்காடுகள் 2050ல் 71 சதவீதம் உயர்ந்தும் (2050ல் 7,344.70 சதுர கி.மீ. முள்காடுகள் இருக்கும்) காணப்படும் என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் (இங்கு வனப்பரப்பு அதிகமிருந்தும், மண்வளம், காடுகள் அழிவதை அரசு கண்டுகொள்ளவில்லை) தான், அடுத்து வரும் சில ஆண்டுகளில் பசுமைமாறாக் காடுகளும், இலையுதிர் காடுகளும் 2050ல் மிக மோசமான பாதிப்பை சந்திக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

50.67 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகளும், 24.25 சதுர கி.மீ. இலையுதிர் காடுகளும் நீலகிரியில் அழிந்து போகும்.

கோயம்புத்தூர் - 50.41 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகள், 24.05 சதுர கி.மீ. இலையுதிர் காடுகள்,

திண்டுக்கல் - 33.56 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகள், 54.39 சதுர கி.மீ. இலையுதிர்காடுகள்,

திருநெல்வேலி - 26.57 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகள், 94.04 சதுரகி.மீ. இலையுதிர்காடுகள்,

ஈரோடு - 1.63 சதுர கி.மீ. பசுமைமாறாக் காடுகள்,182.83 சதுர கி.மீ. இலையுதிர்காடுகள்,

2050ல், தமிழகத்தில் அழிந்துபோகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும், கிருஷ்ணகிரியில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்துவரும் சில ஆண்டுகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் காடுகளின் பாதிப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

காடுகளின் அழிவிற்கு முக்கிய காரணம் - "வீட்டு உபயோகப் பொருட்கள் செய்ய அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டது தான்" என CCCDM இயக்குநர் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். 

காடுகளின் மண்வளம் குறித்தும் CCCDM - அண்ணா பல்கலைக்கழகம் 560 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ததில், மண்ணில் உள்ள கார்பன் (Soil Organic Carbon) அளவு 0.8 சதவீதம் என மிகக் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

காடுகளின் செழிப்பை காக்க, குறைந்தபட்சம் கார்பன் அளவு 1 சதவீதம் என இருக்க வேண்டும். இதில் கொடுமை என்னவெனில், தமிழகத்தின் சில வனப்பகுதிகளில், மண்ணில் கார்பன் அளவு 0 சதவீதம் ஆக உள்ளது என்பதே.

தமிழகக் காடுகளின் மண்வளம் இவ்வளவு மோசமாக இருந்தால் அரசின் செயற்கையான காடுகளை உருவாக்கும் திட்டத்தால் (Afforestation) எந்த பயனும் இருக்காது.

தமிழகத்தில் பசுமைமாறாக் காடுகள், பாதி பசுமைமாறாக் காடுகளில் மண்ணில் கார்பன் அளவு 5 முதல் 15 சதவீதம் என வளமாகத் தான் உள்ளது.

எனவே, தமிழக அரசு 10.49 லட்சம் ஹெக்டேரில் உள்ள முள்காடுகளுக்கும், 5.31 லட்சம் எக்டேரில் உள்ள இலையுதிர்காடுகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வளப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 3.16 லட்சம் எக்டேர் வனப்பரப்பின் மண்வளம் சீர்கெட்டுள்ளது. அந்த காடுகளின் மண்வளத்தை மேம்படுத்த 59,891 டன் உரங்கள் தமிழக அரசுக்கு தேவைப்படும்.

தமிழகத்தின் முதன்மை வனபாதுகாப்பு அதிகாரி (ஸ்ரீநிவாஸ் ரெட்டி), "தமிழகத்தின் காடுகளில் மண்ணில் உள்ள கார்பன், நைட்ரஜன் வளம் கணிசமாக குறைந்திருந்தும், தமிழக அரசு அதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காடுகளை காக்கும் நோக்கில் செயல்படும் சில நிபுணர்கள், "தமிழக அரசு, மண் வளத்தைக் காக்க உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பசுமைமாறாக் காடுகளைக் காட்டிலும், மண் அதிக கார்பனை சேமிக்கும் திறன் கொண்டுள்ளது என்பதால், புவிவெப்பமடைதல் பிரச்னையை குறைக்க மண்வளத்தை காக்கும் திட்டங்களுக்கு, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்க உடனடியாக முன்வர வேண்டும்".

இயற்கை வேளாண்மையும் (செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்வளத்தை மோசமாக பாதிக்கின்றன), கீதாரி சமூகத்தின் கால்நடை மேய்ச்சல் நடைமுறைகளையும் அரசு ஊக்குவிப்பது, காடுகளின் செழிப்பை மேம்படுத்துவதுடன், கால்நடைகளின் எச்சத்தில் கரிமவளம் அதிகமிருப்பதால் அது மண்வளத்தை காக்கும் என்பதுடன், வளரும் புவிவெப்பமடைதல் பிரச்னைக்கு, அது தீர்வாகவும் அமையும். கீதாரி சமூகமும் பலன்பெறும். தமிழக அரசு செவிசாய்க்குமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.