Reduce Face Fat: முகத்தில் உள்ள அதிக கொழுப்பை குறைக்கும் எளிய வழிகள்
முகத்தில் உள்ள அதிக கொழுப்பை குறைக்கும் எளிய வழிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முகம்தான் பெண்களின் அழகுக்கு லட்சணம். இதனால்தான் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள பெரிதும் மெனக்கெடுகின்றனர். முகத்தோல் கச்சிதமாக இருந்தால்தான் பொலிவாக இருக்கும். கொழுப்பு நிறைந்திருந்தால் முகம் புஸ்ஸென்று உப்பலாகக் காட்சியளிக்கும். அது முக அழகைக் கெடுக்கும். இந்தக் கொழுப்பை எளிய வழிமுறைகளில் குறைக்கலாம்.
முகத்தில் கொழுப்பு சேரும் பொழுது அது வயதான தோற்றத்தை கொடுக்கும். இதனால் பல பெண்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டும் எடையை குறைத்து விட முடியாது. இடுப்பு, கை, கால்களில் மட்டும் கொழுப்பை நீக் முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது உங்கள் முழு உடலும் ஈடுபடும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பையும் நிச்சயமாக குறைக்கலாம்.
நீங்கள் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் பொழுது, உடலின் எல்லா பகுதியிலிருந்தும் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் வெளியேறும். சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இதை எளிதாக்கலாம். ஏனெனில் குறைந்த கலோரி உள்ள உணவை நீங்கள் சாப்பிட்டு உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது அதிக கலோரிகள் எரிக்கப்படும். உங்களுடைய தேவையை விட குறைவான அளவு கலோரிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது, ஆற்றலுக்காக உடலில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புகள் பயன்படுத்தப்படும்.
உடல் எடையை குறைக்க முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை பின்பற்றுங்கள். முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும் சில எளிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
முகத்தை மசாஜ் செய்யவும்-
காலையில் எழுந்தவுடன் முகத்தை மசாஜ் செய்யவும். நேராக நிற்கும்போதோ அல்லது உட்கார்ந்து இருக்கும்போதோ உங்கள் விரல் நுனியால் கழுத்தின் முனைகளை 2-3 நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு மசாஜ் செய்வதால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை மேம்படும்.
அடுத்ததாக கன்னம், நெற்றி, கண்களை சுற்றி உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தினமும் சில நிமிடங்கள் இவ்வாறு மசாஜ் செய்வதால் முகத்தில் நல்ல மாற்றங்களை பார்க்கலாம்.
சர்க்கரையை தவிர்க்கவும்-
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் எந்த ஒரு உணவுப் பொருளையும் வாங்குவதற்கு முன் அதன் லேபிள்களை சரி பார்க்க மறக்காதீர்கள். இது போன்ற அதிக கலோரி உள்ள உணவுகள் உங்கள் வயிற்றை நிரப்பாது, மாறாக பசி ஆர்வத்தை தூண்டி அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரையை தவிர்க்க வேண்டும்.
நல்ல தூக்கம்-
ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கவும், ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம். நல்ல தூக்கம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அதேசமயம் போதுமான தூக்கம் இல்லாத போது முகம், உடல் மற்றும் அதன் பாகங்களில் வீக்கம் ஏற்படும். உடலின் திரவ சமநிலையை சீராக வைத்துக் கொள்ள நல்ல தூக்கம் அவசியம்.
அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும்-
உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதால் நீர் தேக்கம் ஏற்படும். அதிக சோடியம் உள்ள உணவை சாப்பிடும் பொழுது, அதிகப்படியான சோடியத்தை சமநிலைப்படுத்த உடல் தண்ணீரை தக்க வைத்துக் கொள்கிறது. இதனால் வீக்கம் ஏற்படலாம். இதனால் முகமும் வீக்கத்துடன் காணப்படலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்ளலை குறைப்பதன் மூலம் உடலின் நீர் சமநிலையை பராமரிக்கலாம்.
உடற்பயிற்சி-
தினமும் உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்கள் முழு உடலும் ஈடுபடும். உடற்பயிற்சி செய்வதால் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கலாம் இதனுடன் அதிக கலோரிகளையும் எரிக்க முடியும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை தவிர நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீர் இழப்பை தடுக்கலாம். மேலும் உடலில் உள்ள நச்சுக்களையும் அகற்றலாம்.
டாபிக்ஸ்