Elaneer Halwa: அடடே இளநீர்லயும் அல்வா செய்யலாமா?-அது எப்படின்னு பாருங்க!
Cooking Recipes: இளநீர் அல்வா குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் இதை சாப்பிட கொடுக்கலாம்.
உடலில் உள்ள சூட்டை போக்கி குளிர்ச்சி தரும் இளநீர். கோடை காலத்தில் இதை குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் மினரல்கள் இதில் நிறைந்து உள்ளன.
இளநீரில் கொட்டிக் கிடக்கும் நன்மைகளை பார்ப்போம்.
நன்மைகள்:
1. மலசிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.
2. சிறுநீர் எரிச்சலை சரி செய்யும்.
3. கார உணவுகளை சாப்பிட்ட பிறகு இளநீர் குடித்தால் காரத்தன்மையை போக்கும்.
இந்த இளநீர் வைத்து பல விதமான ரெசிப்பிகள் செய்யலாம். இளநீர் அல்வா, இளநீர் பாயாசம், இளநீர் இட்லி மற்றும் இளநீர் சர்பத் போன்றவற்றை செய்யலாம். இந்தக் கட்டுரையில் இளநீர் அல்வா செய்வது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.
இளநீர் அல்வா செய்யத் தேவையான பொருட்கள்
சோள மாவு- 1 கப்
இளநீர் தண்ணீர்- 2 கப்
இளநீர் வழுக்கை- தேவையான அளவு
சர்க்கரை- 2 கப்
நெய்- தேவையான அளவு
முந்திரி, பாதாம்- பொடியாக நறுக்கியது
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
தண்ணீர்- 1 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் இளநீர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பாதாமை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் தண்ணீர் சேர்த்து அதில் வறுத்து வைத்த பாதாம் மற்றும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கலந்து விடவும். தண்ணீர் கொதித்த பின் அதில் கரைத்து வைத்த கலவையை சேர்த்து விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அது கெட்டி ஆன பின்னர் நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதம் வந்த பிறகு அதில் முந்திரி, ஏலக்காய் தூள், இளநீர் வழுக்கை சேர்த்து கலந்த பின் இறக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான இளநீர் அல்வா தயார்.
குழந்தைகளுக்கு செய்து கொடுங்க. மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்