இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் இமயமலை அத்திப்பழம்
இமயமலை பகுதியில் இருக்கும் அத்திபழத்துக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாகவும், அவை சிறந்த வலி நிவாரணியாக செயல்படுவதாகவும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இமயமலை காடுகளில் கிடைக்கும் அத்திப்பழத்தை, பேடு என்று அழைக்கிறார்கள். இது செயற்கை வலி நிவாரணிகளான ஆஸ்பிரின், டிக்லோஃபெனாக் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எலிகளிடம் நடத்திய பரிசோதனைக்குப் பிறகு இந்த அத்திப்பழத்துக்கு வலி நீக்கும் தன்மை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லவ்லி பல்கலைகழகம் (எல்பியூ) இதுதொடர்பாக சர்வதேச அளவில் குழு ஒன்றை உருவாக்கி ஆய்வில் ஈடுபட்டது. இமயமலை பகுதிகளில் கிடைக்கும் அத்திப்பழத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகளும், தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் தன்மையும், காயத்தால் ஏற்படும் தொற்றுகளை ஆறவைக்கும் குணநலமும் இருப்பது போன்ற கருத்துகளை குறிப்பு எடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டது.
இமயமலை பகுதி அத்திபழத்தின் சாறுகளை வைத்து எலிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் பழத்தினால் ஏற்படும் வலி நிவாரண விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஃபிகஸ் பல்மடா என்று அறிவியில் ரீதியாக அழைக்கப்படும் இந்த அத்திபழத்தில் சேராலென், ருடின் என்று இருவகையான முக்கிய கூறுகள் இடம்பிடித்துள்ளன.
இதில், வலியின்போது ஏற்படும் சைக்ளோஆக்சிஜனேஸ்-2 (COX-2) என்ற நொதியை தடுக்க சோரலென் உதவுகிறது. இதே பணியைத்தான் டிக்லோஃபெனாக் என்ற வலி நிவாரணி செய்கிறது. அதேபோல் மார்பின் செய்யும் பணிகளை அத்திப்பழத்தில் இடம்பிடித்துள்ள ருடின் செய்கிறது.
இதைடுத்து, இமயமலை பகுதி அத்திப்பழம் பொதுவாக மாறுபட்ட டோஸ்கள் சாத்தியமான வலி நிவாரண விளைவுகளை தருகிறது எனவும், குறிப்பிட்ட நிலையில் ஒரு கிலோவுக்கு 400 மில்லிகிராம் அளவு பயன்படுத்தினால் விளைவை தருகிறது எனவும் மருத்துவ இதழில் இந்த ஆய்வு குறித்து கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்த ஆய்வு குழுவில் இடம்பிடித்துள்ள லவ்லி பல்கலைகழகத்தின் இணை பேராசிரியர் தேவேஷ் திவாரி கூறும்போது, "இமயமலை பகுதி அத்திபழங்களுக்கு இயற்கயாகவே வலிகளை நிவாரணப்படுத்தும் குணம் உள்ளதா என்பதை வெளிப்படுத்துவதே எங்கள் ஆய்வின் முதன்மை நோக்கம். பாரம்பரியமாக இந்த பழத்தை பின்பகுதியில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணமாக கிராமிய பகுதிகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் இதுவரை வலி நிவாரணியாக அத்திப்பழம் பயன்படுவது குறித்து எந்தவிதமான ஆய்வுகளின் முடிவும் வெளிவந்ததில்லை" என்றார்.
வலி நிவாரணத்துக்கும், அழற்சிகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளாக ஓபியேட்ஸ், என்சாய்ட்ஸ் (ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்) உள்ளன. ஆனால் இவை இரண்டும் நச்சுத்தன்மை, குடலில் தொந்தரவு, கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் மருத்துவ குணமிக்க இந்த அத்திப்பழத்தில் பல்வேறு விதமான ரசாயணங்கள் இயற்கையாகவே இருப்பதால், அவை சிறப்பான வலி நிவாரணியாக செயல்படுகிறது.
இந்த ஆய்வுக்குழுவில் உத்தரகண்ட் மாநிலம் குமாவோன் பல்கலைக்கழகம், குஜராத்தின் கண்பத் பல்கலைக்கழகம், கிரேட்டர் நொய்டா ஷார்தா பல்கலைக்கழகம், இத்தாலியின் மெஸ்ஸினா பல்கலைக்கழகம், இரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் ஷாகித் பெஹெஷ்டி பல்கலைகழங்களில் இடம்பிடித்தன.
எதிர்காலத்தில் இமயமலை அத்திபழத்தின் மருத்துவ நன்மைகளின் விளைவுகளை ஆராய மனிதர்களை வைத்து சோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த பழத்தினால் ஏற்படும் நன்மைகள் ஆராயப்பட்டுள்ள நிலையில், எதிர்கால ஆய்வுகளில் அதன் செயல்திறனை மேம்படுத்துவற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.