Morning Quotes : வெற்றி, லட்சியம், இலக்குகளை அடைய மாணவர்கள் எந்த விஷயங்களை கைவிடவேண்டும்?
Morning Quotes : வெற்றி, லட்சியம், இலக்குகளை அடைய மாணவர்கள் எந்த விஷயங்களை கைவிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வெற்றி என்பது ஒருவருக்கு தனி அடையாளத்தைத் தரும். ஒருவர் வெற்றியாளராக வேண்டுமெனில் அதற்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நேர்மறை எண்ணங்கள் தேவை என பல விஷயங்களை நாம் கூறிக்கொண்டே செல்ல முடியும். அதேபோல் வெற்றியாளர்கள் சில விஷயங்களை தகர்க்க வேண்டும். அது என்னவென்று தெரியுமா? அதை தெரிந்துகொண்டு நீங்கள் தவிர்த்தால் வாழ்வில் வெற்றியாளராகிவிடலாம். விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து, தன்னம்பிக்கையுடன் முன்னேறும் உங்களை பின்னோக்கி இழுக்கும் காரணிகள் என்னவென்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தோல்விதான் வெற்றியின் முதல்படி என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றாலும், தோல்வியைக்கொண்டுவரும் காரணிகளை நாம் விலக்குவது மிகவும் அவசியம். அவற்றை களைத்துவிட்டு, முழு முயற்சி செய்து தோற்றாலும் கவலைகொள்ளக் கூடாது. வெற்றி கிட்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பள்ளி படிக்கும்போது வெற்றி என்பது உங்களின் கடின உழைப்பு மற்றும் அறிவுத்திறனால் மட்டும் வருவதில்லை. உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை தவிர்ப்பதாலும் வரும் ஒன்றாகும். எனவே நீங்கள் இந்த எதிர்மறை நடவடிக்கைகளை களைத்துவிட்டால் போதும், உங்களால் உங்களின் முழுத்திறனையும் அறிந்துகொள்ள முடியும். அவை என்னவென்று தெரிந்துகொள்ள இதோ வழிகள்.
தாமதம்
உங்களுக்கு வழங்கப்படும் ப்ராஜெக்ட்கள் மற்றும் அசைன்மென்ட்களை கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடுவது. இதனால் நீங்கள் இறுதி நேரத்தில் அவசர அவசரமாக செய்ய நேரிடும். இதனால் உங்களுக்கு மனஅழுத்தம், உங்களின் வேலையில் தரம் இல்லாமல் போவது என ஏற்படும். எனவே நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டவுடனே வேலைகளை செய்யத்துவங்கி, வழங்கப்படும் காலக்கெடுவுக்குள் அல்லாமல், நம்பிக்கையுடன் திறனை அதிகரிக்க செயல்பட்டால் அது உங்களுக்கு நல்லது.
நேர மேலாண்மை
நீங்கள் எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து போதிய நேரத்தை படிப்பதற்கு ஒதுக்கவில்லையென்றாலோ அல்லது கொடுத்த வேலையை முடிக்கவில்லையென்றாலோ அது உங்களுக்கு கேடு விளைவிக்கும். எனவே மாணவர்கள் தங்களின் நேரத்தை சரியான அட்டவணையிடவேண்டும். போதிய அளவுக்கு நேரத்தை ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இரண்டுக்கும் ஒதுக்கவேண்டும்.
படிப்பு நேரத்தில் பல வேலைகள்
டீவி பார்த்துக்கொண்டே படிப்பது அல்லது ஃபோன் பார்த்துக்கொண்டு படிப்பது ஆகியவை உங்களின் கவனத்தை சிதறடிக்கும் தன்மைகொண்டவையாகும். இவை நீங்கள் படிப்பதை கிரகிக்க நேரம் கொடுக்காது. உங்களால் படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. எனவே மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி அவர்களின் அட்டவணைகளை பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்.
உங்கள் மீதான அக்கறையை தவிர்த்தல்
உணவு, உறக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர்ப்பது உங்களின் உடல் மற்றும் மனநலன் இரண்டையும் எதிர்மறையாக பாதிக்கும். எனவே மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவேண்டுமெனில், நன்றாக படிக்கவும் வேண்டுமெனில் அவர்கள் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்வது கட்டாயம்.
கடைசி நேரத்தில் படிப்பது
அன்றாட பாடங்களை தினமும் வீட்டில் வந்து படித்து முடித்துவிடவேண்டும். அவ்வப்போது அவற்றை மீண்டும், மீண்டும் படித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த பாடங்கள் மறக்காது எப்போதும் நினைவில் இருக்கும். மாறாக தேர்வு நேரத்தில் மட்டுமே படித்தால் அது உங்களுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். குறுகிய நேரத்திற்கு மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளச் செய்யும். எனவே உங்களை பாடத்தை நீங்கள் அடிக்கடி படிக்கும்போதுதான், அது உங்களுக்கு ஆழ்ந்த புரிதலை உறுதிப்படுத்துகிறது. இதனால் நீங்கள் தேர்வில் சிறப்பாக எழுதவும் முடியும்.
உதவி தேவைப்படும்போது அமைதியாக இருப்பது
நீங்கள் குழப்பத்தில் இருக்கும்போது அமைதியாக இருப்பது அல்லது மாட்டிக்கொள்வது நாள்பட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு உதவி தேவைப்படும்போது நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினரிமோ அல்லது ஆசிரியர்களிடமோ கோரவேண்டும். இதனால் உங்களுக்கு குழப்பமான விஷயங்களில் தெளிவு கிடைக்கும்.
தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது
நீங்கள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவது உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும். நீங்கள் கவனிக்கும் நேரத்தையும் குறைக்கும். தொழில்நுட்பம் உங்களுக்கான ஒரு சிறந்த கற்றல் கருவியாக இருக்கமுடியும். எனவே மாணவர்கள் அவர்களுக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டு, அர்த்தமுள்ள வேலைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
எனவே இந்த கெட்ட பழக்கங்களை நீக்குவது முதலில் நல்லது. இவற்றை செய்தாலே உங்களுக்கு சிறப்பான அடித்தளம் கிடைக்கும். எதிர்கால வெற்றிக்கு, வாழ்நாள் முழுவதும் நீங்கள் கற்பதற்கும் இந்தப்பழக்கங்கள் மிகவும் நல்லது.
தொடர்புடையை செய்திகள்