ஆரோக்கியமான, சுவையான 3 சிறுதானிய உணவுகள் செய்முறையை பாருங்கள்
ஆரோக்கியமான, சுவையான 3 சிறுதானிய ரெசிபிக்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
காலங்காலமாக சிறுதானியப் பயறுகளை விளைவித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். தமிழ்நாடு பொதுவாக வறட்சியான பகுதி நிறைந்துள்ளதால் வானம் பார்த்த பூமியாக விளங்கியது. சிறுதானியங்களை விளைவிக்க நிறைய தண்ணீர் தேவையில்லை. மழைபெய்தால் போதும் காட்டு வெள்ளாமையாக சிறுதானியங்களை விளைவித்துவிடலாம். அப்படிப்பட்ட சல்லிசான சிறுதானியங்களில் அளவுக்கதிகமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் வகைவகையான சுவையான பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்
ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம்.
இதில் இன்று கம்பு கஞ்சி, ராகி லட்டு, ராகி தோசை ஆகியவற்றை செய்வது பற்றி பார்க்கலாம்.
கம்பு கஞ்சியை செய்யும்போது ரொம்பவும் தண்ணீர் சேர்க்காமல் சிறிது கெட்டியாகச் செய்து மெதுவாக நன்றாக மென்று சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளின் ரத்தச் சர்க்கரை திடீரென உயராது. உணவும் விரைவில் செரிக்கும்.
கம்பு கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்
ஊறவைத்த கம்பு -1 கப்
ஊறவைத்த பாசி பருப்பு - 1/2 கப்
நெய் - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு 2
துருவிய இஞ்சி - 1½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை
ஊறவைத்த கம்பின் நீரை வடித்த பின்னர், அதை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளலாம்.
இப்போது ஒரு பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானவுடன் சீரகம், கிராம்பு, இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இதனுடன் கம்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து, நன்கு கலந்து 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
வதக்கிய கலவையில் 4 கப் தண்ணீர் ஊற்றி, கொதி வரும் போது குக்கரை மூடிவும். 4-5 விசில் விட்டு கஞ்சியை வேகவைக்கவும். பரிமாறும் போது நெய் சேர்த்தால் கூடுதல் ருசியுடன் இருக்கும்.
ராகி லட்டு செய்யத் தேவையான பொருட்கள்-
ராகி மாவு - 1/4 கப்
பொடித்த வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
முதலில், ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும், பின் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.
இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, துருவிய தேங்காய் சேர்த்து புட்டு மாவு போல் 20 நிமிடம் ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
பின் வெந்த மாவை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
அடுத்ததாக இதில் பொடித்த வெல்லம் மற்றும் நெய் சேர்த்து கலக்கவும்.
கைகளில் சிறிதளவு நெய் தடவி, அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டவும். நீங்கள் விரும்பினால் இதில் முந்திரியும் சேர்த்துக்கொள்ளலாம்.
ராகி தோசை செய்யத் தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1 கப்
ரவை - 1 கப்
அரிசி மாவு - ½ கப்
தயிர் -½ கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் -1
கறிவேப்பிலை 5-6
கொத்தமல்லி இலைகள் -சிறிதளவு
வெங்காயம் -1
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3½ கப்
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு, ரவை மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
இதனுடன் தயிர் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்க்கவும். பிறகு சீரகம், கருப்பு மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.
தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு தோசை கல்லை சூடு செய்து தோசைகளை சுட்டெடுக்கலாம். தோசை வேகும் போது அதனை சுற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றினால் தோசை மொறுகளாக வரும்.
இதை சாம்பார், தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.
டாபிக்ஸ்