Medicinal diet: வயிறு, வாய்ப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை
வயிறு, வாய்ப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கீரையின் அடர் பச்சை நிறத்தில், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கு குறைவில்லாத இந்த அற்புதமான தோசை ரெசிபியை நிச்சயம் செய்து பாருங்கள்.
மண்ணில் விளையக்கூடிய அற்புத மூலிகையான கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் மணத்தக்காளி கீரை கூடுதல் ஸ்பெஷல். மலச்சிக்கலை நீக்குவது முதல் குடல் புண்களை ஆற்றுவது வரை இதில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன.
பெண்களின் கருப்பையை வலுப்படுத்தவும், ஆண்களின் உயிர் அணுக்களின் தரத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் மணத்தக்காளி கீரையை சாப்பிடலாம். மணத்தக்காளி கீரையை கொண்டு கூட்டு, பொரியல் அல்லது சூப் வைத்து குடிக்கலாம். கீரையை இது போன்ற முறைகளில் எடுத்துக்கொள்ள கடினமாக இருந்தால், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தோசை ரெசிப்பியை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.
மணத்தக்காளி கீரை தோசை செய்யத் தேவையான பொருட்கள்-
தோசை மாவு -2 கப்
மணத்தக்காளி கீரை - 1கப்
சின்ன வெங்காயம் 8-10
பூண்டு -5
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - ½ டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மணத்தக்காளி கீரை தோசை செய்முறை-
கீரையை சுத்தம் செய்து தடிமனான தண்டு பகுதியை நீக்கி இலைகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
இஞ்சி, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து வைக்கவும்.
பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
இதனுடன் மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளி கீரை மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து வதக்க வேண்டும். கீரை சுருங்கி, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
கீரைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சூடு தணிந்த பின், வதக்கிய கலவையை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம் அதிகமாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம்.
அரைத்த கீரையை எடுத்து வைத்துள்ள தோசை மாவுடன் கலக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி மாவை மெல்லியதாக சுற்றி ஊற்றி, நல்ல பொன்னிறமாக மொறுகள் ஆகும் வரை வேக விட்டு பரிமாறலாம். கீரை சேர்த்தாலும் இந்த தோசை மொறுகளாக அட்டகாசமாக இருக்கும்.
கீரையை சாப்பிடாதவர்கள் கூட இந்த தோசையை நிச்சயம் விரும்பி சாப்பிடுபவர்கள். இந்த செய்முறையை பின்பற்றி மற்ற கீரை வகைகளிலும் தோசை செய்ய முடியும். ஆரோக்கியமான இந்த கீரை தோசையை நீங்களும் செய்து பாருங்கள். உணவே மருந்து!
டாபிக்ஸ்