Uterine Fibroid Causes: கருப்பை கட்டி எதனால் வருகிறது? தடுப்பது எப்படி?
பெண்களுக்கு கருப்பை கட்டி எதனால் வருகிறது? தடுப்பது எப்படி? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கருப்பை நார்த்திசுக்கட்டி அல்லது ஃபைப்ராய்டு என்பது ஒரு பெண்ணின் கருப்பையில் அல்லது அதன் மீது வளரும் அசாதாரண வளர்ச்சியாகும்.
பெரும்பாலும் கருப்பையில் உருவாகும் கட்டிகள் தீங்கற்றவையாகவும், புற்றுநோய் அல்லாத கட்டிகளாகவும் இருக்கின்றன. இருப்பினும் ஒரு சில பெண்களுக்கு இந்த கட்டிகள் பெரிதாகி தீவிர வயிற்று வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு நிறைந்த மாதவிடாய் போன்ற நிலைகளை உருவாக்கலாம்.
இந்த கட்டிகள் வருவதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறையை பேரியாட்ரிக் மருத்துவர் மற்றும் உடல் பருமன் ஆலோசகரான டாக்டர் கிரண் ருகாதிகர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
ஹார்மோன்கள்-
ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கும் பெண்களுக்கு, குறிப்பாக அவர்களுடைய இனப்பெருக்க வயதில் கருப்பை கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கருப்பைகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. அவை ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் கருப்பை புறணியை மீண்டும் உருவாக்குகின்றன. ஹார்மோன் மாற்றங்களால் கருப்பை கட்டிகள் வளர்ச்சி அடையலாம்.
குடும்ப வரலாறு-
தாய், சகோதரி அல்லது பாட்டிக்கு கருப்பை கட்டிகள் பாதித்த வரலாறு உள்ள பெண்களுக்கும் கருப்பை காட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடல் பருமன்-
கொழுப்பு செல்கள் அதிக ஈஸ்ட்ரோஜனை உருவாக்குகின்றன, மேலும் ஹார்மோன்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் கருப்பை கட்டிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.
கர்ப்பம்-
கர்ப்ப காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் கருப்பை கட்டிகள் உருவாகி, அவை வேகமாக வளரலாம்.
வைட்டமின் D குறைபாடு-
சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுவது கருப்பை கட்டிகள் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். மேலும் பச்சை காய்கறிகள், பழங்கள் அல்லது பால் பொருட்களை போதுமான அளவு எடுத்து கொள்ளாத நிலையிலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கருப்பை கட்டிகள் உருவாகலாம்.
கருப்பை கட்டிகளை தடுப்பது எப்படி?-
இறைச்சி மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கவும். பச்சை காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் கிரீன் டீ போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.
உடல் எடையை சரியான வரம்புக்குள் வைத்திருப்பது கருப்பை கட்டிகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும்.
மனஅழுத்தத்தை விட்டு விலகி இருக்கவும். இதற்கு யோகா, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளுடன் உங்களுக்கு விருப்பமான விஷயங்களையும் செய்யலாம்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வைட்டமின் D கருப்பை கட்டிகளின் அபாயத்தை குறைக்க உதவும். இதற்கு சூரிய ஒளியில் சிறிது நேரம் வெளிப்படுவதுடன் வைட்டமின் D நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம்.
ஆரோக்கியமான எடை, நல்ல உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மூலம் கருப்பை கட்டிகள் உட்பட பல நோய்களை தடுக்கலாம்.
டாபிக்ஸ்