Lunch Box Recipe: ஒரு வாரத்துக்கு உங்கள் குழந்தைகள், கணவருக்கான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி
ஒரு வாரத்துக்கு உங்கள் குழந்தைகள், கணவருக்கான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், அலுவலகத்துக்குச் செல்லும் கணவருக்கும் மதியம் என்ன உணவு செய்வது என்ற குழப்பம் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரு வாரத்துக்கான மதிய உணவு ரெசிபிகளை இங்கு பார்க்கலாம்.
சாதம் வகைகள்
1) வெஜிடபிள் பிரியாணி
தேவையானபொருட்கள் :
அரிசி - 4 கப்
வெங்காயம் - 10
உருளைக்கிழங்கு - 8
காரட் - 12
பச்சைப் பட்டாணி - 2 கப்
காலிஃபிளவர் - ஒன்று (சிறியது)
நெய் - 2 கப்
எலுமிச்சம் பழம் - 2
ஜாதிபத்திரி - 6 இலைகள்
இஞ்சி - 2 அங்குலம்
தேங்காய்த் துருவல் - அரை தேங்காய்
பச்சை மிளகாய் - 4
பூண்டு பற்கள் - 12
கறிமசால் பட்டை - 4 அங்குலம்
கிராம்பு - 8
ஏலக்காய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானது
வெஜிடபிள் பிரியாணி செய்முறை :
அரிசியை கழுவி சுத்தம் செய்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடேறியதும் அதில் அரிசியைப் போட்டு பொரிக்கவும். பொரிந்ததும் எட்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும். உப்பு கலந்த நீரில், உருளைக் கிழங்கு, பட்டாணி, காரட், காலிஃபிளவர் ஆகியவற்றை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது நெய் விட்டு அடுப்பிலேற்றி அதில் வெங்காயத் துண்டு களையும், ஜாதிபத்திரியையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதோடு இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிமசால் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா சிறிது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வும். பிறகு வேக வைத்துள்ள காய்கறிகள் வெந்த நீர் எல்லாம் சேர்த்து கிளறவும். நீர் அம்சம் எல்லாம் சுண்டியதும் அடுப்பை விட்டு இறக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய்யைவிட்டு அதில் வெந்த சாதம், வெஜிடபிள் மசாலாக்கள் எல்லாம் ஒன்று கலந்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளவும்.
2) வெஜிடபிள் புலாவ்
தேவையானபொருட்கள் :
அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
மசால் பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 6
மிளகு - 8
காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உப்பு - போதுமானது
முந்திரிப் பருப்பு - 6
கிஸ்மிஸ் - சிறிது
நெய் - சிறிது
வெஜிடபிள் புலாவ் செய்முறை :
வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பி லேற்றி அதில் மிளகு, மசால்பட்டை, துண்டு துண்டாக நறுக்கிய வெங்காயம் ஆகிய வற்றைச் சேர்த்து சிவப்பு நிறமாக மாறும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். ஏற்கனவே தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைத்துள்ள அரிசியை அப்போது அதோடு சேர்த்துக் கிளறி ஐந்து நிமிடம் வேகவிடவும். அதன் பிறகு காரட் மற்றும் பீன்சை துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். கொதிக்கும் நீர் ஐந்து கப் சேர்த்து நன்கு கிளறவும். அரிசி நன்கு வெந்ததும் வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து உப்பையும் போட்டு கிளறவும். கடைசியாக கிஸ்மிஸ் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
3) தக்காளி_சாதம்
தேவையான பொருட்கள் :
அரிசி - 5 கப்
தக்காளிச் சாறு - 2 கப்
குடை மிளகாய் - 20
நெய் - 9 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
கறிமசால் பட்டை - 8 துண்டு
ஏலக்காய் - 8
கிராம்பு - 8
மிளகு - 12
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் பவுடர் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலம்
மல்லி பவுடர் - 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - அரை கப்
மல்லிக்அரைரை - ஒரு சிறு கட்டு
உப்பு - 4 தேக்கரண்டி
தக்காளி சாதம் செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலம்பி நீரில் ஊறப்போடவும். வெங்கா யத்தை துண்டுகளாக நறுக்கி நெய்யில் பாதியை வாணலியில் விட்டு அடுப்பிலேற்றி அதில் வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். அது நன்கு வதங்கியான தும் துண்டுகளாக்கிய கறிமசால்பட்டை, பொடி செய்த ஏல அரிசி, கிராம்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். ஊறிய அரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு இந்தக் கலவையில் அரிசியையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு மல்லி பவுடர், உப்பு மற்றும் மஞ்சள் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு அதில் எட்டு கப் தண்ணீர் சேர்த்து மேலும் பதினைந்து நிமிடம் வேகவிடவும். துண்டுகளாக நறுக்கிய இஞ்சி, முந்திரிப் பருப்பு, மல்லிக்அரைரை ஆகியவற்றை சிறிது நெய் விட்டு வதக்கி அதோடு தக்காளிச் சாற்றையும், சிறிது உப்பையும் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பச்சை மிளகாயை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள விதைகளை நன்கு வதக்கவும். பிறகு அதில் தக்காளிச் சாற்று கலவையைச் சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்று கலந்து சரியான பதம் வரும்வரை தொடர்ந்து கிளறி அடுப்பை விட்டு இறக்கிக் கொள்ளவும்.
4) காலிஃபிளவர் சாதம்
தேவையானபொருட்கள் :
சிறு காலிஃபிளவர் - 2
அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 4
நெய் - 4 மேஜைக்கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை பழம்
உப்பு - போதுமானது
தேங்காய்த் துருவல் - அரை தேங்காய்
பச்சை மிளகாய் - 12
பூண்டு பற்கள் - 2
கிராம்பு - 8
ஏலக்காய் - 8
கறிமசால் பட்டை - ஓர் அங்குலம்
காலிஃபிளவர் சாதம் செய்முறை :
காலிஃபிளவரை துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து விடவும். அரிசியை தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிட்டு பாதி வெந்தான தும் அடுப்பைவிட்டு இறக்கிவிடவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகிய எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், மசாலாக்கள் எல்லாம் பாதி வெந்த நிலையில் உள்ள சாதத்துடன் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறி நன்கு வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கிக் கொள்ளவும்.
5) எலுமிச்சை சாதம்
தேவையானபொருட்கள் :
அரிசி - 4 கப்
எலுமிச்சம் பழம் - 8 (பெரியது)
முந்திரிப் பருப்பு - 2 கப்
தேங்காய்த் துருவல் - ஒரு தேங்காய்
மஞ்சள் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 1அரை கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 20
எலுமிச்சை சாதம் செய்முறை :
அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாதி வெந்தானதும் அடுப்பைவிட்டு இறக்கி தண்ணீரை வடித்து விடவும். அதோடு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து சேர்க்கவும்.
பிறகு மஞ்சள் பவுடர், தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு போதுமான உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகைப் போட்டு அது பொரிந்ததும் முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் ஆறவைத்து பின் லஞ்ச் பாக்ஸில் அடைக்கவும்.
6) தேங்காய் சாதம்
தேவையானபொருட்கள் :
பச்சை அரிசி - 2 கப்
தண்ணீர் - 5 கப்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 8
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 4 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 20
நெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
நிலக்கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
தேங்காய் சாதம் செய்முறை :
சாதத்தை முதலில் தயாரித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். தேங்காய்த் துருவலை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காது இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து பருப்பு, முந்திரிப் பருப்பு, துண்டுகளாக கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும். பிறகு ஏற்கனவே வறுத்தவற்றை சாதத்துடன் சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பை பொடித்து தூவி கிளறவும். வறுத்த தேங்காய் துருவலை கடைசியாக சேர்த்து கிளறவும். விருப்பமானால் கறிவேப்பிலை, , நிலக்கடலைப் பருப்பும் சேர்க்க லாம்.
7) புளியோதரை
தேவையானபொருட்கள் :
பச்சை அரிசி - 2 கப்
தண்ணீர் - 5 கப்
புளி - எலுமிச்சம் பழம் அளவு
மிளகாய் வற்றல் - 15
மல்லி பவுடர் - 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 8 தேக்கரண்டி
உளுந்து பருப்பு - 8 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
காயம் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - போதுமானது
மஞ்சள்பொடி - சிறிது
புளியோதரை செய்முறை :
புளியை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரைக்கவும். மிளகாய் வற்றல், காயம், கடலைப் பருப்பில் பாதி, உளுந்து பருப்பில் பாதி மற்றும் மல்லி, வெந்தயம் ஆகியவற்றை வறுத்து உரலில் எல்லாவற்றையும் போட்டு இடிக்கவும். சாதத்தை தட்டில் கொட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பிலேற்றி கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளிதம் செய்து அதில் கரைத்த புளியை கொட்டிக் கிளறி கெட்டிப்பட்டதும் அடுப்பைவிட்டு இறக்கி சாதத்தில் சேர்த்து பிசைந்துகொள்ள வும். பிரியமுள்ளவர்கள் இதோடு பொரித்த வெள்ளை எள், கறிவேப்பிலை, நிலக்கடலைப் பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்