Pregnancy Foods: கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிட்டால் இந்த குறைபாடு வராதா? ஆய்வில் தகவல்
Pregnancy Foods: கர்ப்ப காலத்தில் மீன் உட்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு மன இறுக்கம் எனும் ஆட்டிசக் குறைபாடு ஏற்படும் அபாயம் குறைவதற்கும் இடையில் வலுவான தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உணவு மற்றும் மனநிலை ஆகியவை நேரடியாக வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கு பெண்களின் உடல் மற்றும் மன நலனை பாதுகாப்பது இன்றியமையா காரியம் ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறின் அபாயத்தைக் குறைக்க, ஒரு சமீபத்திய ஆய்வு கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் அன்றாட உணவில் ஒரு சிறப்பு உணவைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அந்த ஆய்வின் படி கர்ப்பமாக இருக்கும் போது மீன் சாப்பிடுவது, ஆட்டிசத்தின் அபாயத்தைத் தடுப்பதில் பங்காற்றுவது நிரூபணம் ஆகியுள்ளது. இருப்பினும், இயற்கை உணவுப் பொருளுக்குப் பதிலாக மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது அதே விளைவைக் கொடுக்கவில்லை.
இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள டிரெக்சல் பல்கலைக்கழகத்தின் ஏ.ஜே. ட்ரெக்சல் ஆட்டிசம் நிறுவனம் நடத்தியுள்ளது. இது குறித்து ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி மற்றும் ஹார்வர்ட் பில்கிரிம் ஹெல்த் கேர் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் பேராசிரியரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான டாக்டர். எமிலி ஓகென் கூறுகையில், ‘கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவதால் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார். இது குறைப்பிரசவத்தின் அபாயத்தைக் குறைக்கவும், அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.
உட்கொள்ள வேண்டிய மீனின் அளவு
கர்ப்பிணிப் பெண்கள் வாரத்திற்கு 200 கிராம் முதல் 300 கிராம் அளவு கடல் உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஆய்வ அறிவுறுத்தியது. இது கருவின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் மன இறுக்கம் எனும் ஆட்டிசம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
ஆய்வு
மீன் உட்கொள்வதற்காக 10,800 கர்ப்பிணிப் பெண்களிடமும், மீன் எண்ணெயை உட்கொள்வதற்காக 12,646 கர்ப்பிணிப் பெண்களிடமும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இருப்பினும், ஆய்வில் பங்கேற்றவர்களில் கால் பகுதியினர் மீன் சாப்பிடவில்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. இது இதயம், மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மீன், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் இலை காய்கறிகள் அல்லது மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றில் காணப்படுகிறது.
மன இறுக்கம் குறையும் அபாயம்
கர்ப்ப காலத்தில் மீன் உட்கொள்வதற்கும் மன இறுக்கம் குறைவதற்கும் இடையிலான உறவு பெண் குழந்தைகளில் வலுவாக இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் ஒமேகா -3 சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது ஆட்டிசம் குறைப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்