Mudakathan Chutney: மூட்டு வலியே வராதுங்க.. ஈஸியா செய்யலாம் முடக்கத்தான் கீரை சட்னி!
Mudakathan Keerai Chutney: முடக்கத்தான் கீரை சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சத்தான உணவுகளோடு ஒரு காலத்தில் இயற்கையோடு பின்னிப் பிணைந்து மனிதர்களான நாம் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். தற்போது தொழில்நுட்ப மயமான இந்த உலகத்தில் அவசரமாகச் செல்லும் நாம் அந்த அளவிற்கு உணவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதேபோல் அவசர தேவைக்கு ஏற்ப என்ன உணவு கிடைக்கின்றதோ அதைச் சாப்பிட்டு விட்டு வாழ்க்கை பரபரப்பாகச் சென்று கொண்டு இருக்கின்றது. அன்றாடம் நான் சாப்பிட்ட உணவுகளையே பாரம்பரிய உணவுகள் எனப் பெயர் வைத்து அரிதாகப் பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
எளிதாகக் கிடைக்கக்கூடிய இந்த உணவுகளை நாம் பயன்படுத்தாமல் இருப்பது மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட சத்தான மூலிகை உணவுகளில் ஒன்று தான் முடக்கத்தான். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கீரையை நமக்குப் பிடித்தது போல் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி புதுமையான முறையில் முடக்கத்தான் கீரையை வைத்து சட்னி செய்து நமது உணவோடு சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். அப்படி முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை ஒரு கட்டு
கொத்தமல்லி ஒரு கட்டு
துருவிய தேங்காய் ஒரு கப்
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 10
புளி மூன்று கிராம்
இஞ்சி இரண்டு கிராம்
பூண்டு இரண்டு பல்
தாளிப்பு பொருட்கள்
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் இரண்டு
கருவேப்பிலை ஒரு கொத்து
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லியைத் தண்ணீரில் கழுவி நன்கு அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடேற்ற வேண்டும். சூடான அந்த எண்ணெயில் இஞ்சி, பூண்டு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்டவற்றைச் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் சின்ன வெங்காயம், புளி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றைச் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு துருவி வைத்துள்ள தேங்காயை அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின்னர் தனியாக வைத்துள்ள முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அதனோடு வதக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு ஆற வைக்க வேண்டும்.
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். தனியாகச் சின்ன கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்க வேண்டும். அரைத்து வைத்திருக்கக்கூடிய முடக்கத்தான் கீரை சட்னியில் அந்த தாளிப்பைக் கொட்ட வேண்டும். அவ்வளவுதான் முடக்கத்தான் கீரை சட்னி ரெடி.
இந்த சட்னியைச் சாதத்தோடு சேர்ந்து பிசைந்து சாப்பிடலாம், இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளுக்கு சைட் டிஷ் - ஆக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்