தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pirandai Health Benefits: முதுகு வலி, கழுத்து வலி தீர்வு..! பல்வேறு நோய்களை விரட்டும் பிரண்டை ஆரோக்கிய நன்மைகள்

Pirandai Health Benefits: முதுகு வலி, கழுத்து வலி தீர்வு..! பல்வேறு நோய்களை விரட்டும் பிரண்டை ஆரோக்கிய நன்மைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 09, 2024 05:16 PM IST

முதுகு வலி, கழுத்து வலி தீர்வு தருவதுடன் பல்வேறு நோய்களை விரட்டும் பிரண்டை ஆரோக்கிய நன்மைகள், அதன் வகைகள், மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்

பிரண்டை வகைகள்

ஏரளமான வகைகளில் பிரண்டையானது கிடைக்கிறது. வழக்கமான பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பிரண்டையில் நான்கு இனங்கள் இருக்கின்றன.

இந்த பிரண்டை வயல் வேலி ஓரங்கள், மலையடிவாரம், புதர் மண்டிய இடங்களிலும் அதிகமாக வளரக்கூடியதாக உள்ளது. இதன் இலைகள் வட்ட வடிவில் இருக்கும். பிரண்டையில் நான்கு பட்டையுடன் கூடிய சதுர பிரண்டை அதிக அளவில் வளர்ந்து காணப்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

பண்டைய காலத்தில் இருந்து உணவில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றாக பிரண்டை இருந்து வருகிறது. பிரண்டையுடன் புழுங்கல் அரிசி, உப்பு, ஓமம், மிளகாய் வத்தல் சேர்த்து பிரண்டை வத்தல் செய்யும் முறை காலம் காலமாக இருந்து வருகிறது.

பிரண்டை மருத்துவ குணங்கள்

அனைத்து வகை பிரண்டைகளும் மருத்து குணங்கள் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரண்டையில் அமிரோன், சிட்டோசிரால், அமைரின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதில் மூன்று பட்டையுடன் கூடிய முப்பிரண்டை அரிய வகை பிரண்டையாக உள்ளது. இதனை காயகல்ப மூலிகை என்றும் அழைப்பதுண்டு. மருந்துடன், இதை சேர்த்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சித்தர்கள் பயன்படுத்தி வந்ததாக குறிப்புகளும் உள்ளன.

சாதரண பிரண்டையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால். மூலதினவு, மூல ரத்தம், வயிறு சார்ந்த பிரச்னை, கபம், ரத்த போக்கு ஆகியவை போகும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சிலந்திகடி, பித்தம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக களிப்பிரண்டை இருந்து வருகிறது. அதேபோல் மந்தம், சீதக்கட்டு, இரைப்பு வீக்கம், வாதம் போன்றவற்றை போக்க தீம்பிரண்டையும், மார்பு நோய், கபத்தை நீக்க புளிப்பிரண்டை உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரண்டை ஆரோக்கிய நன்மைகள்

வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், மாதவிலக்கு கோளாறுகள், ஆஸ்துமா, ரத்த மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் தீரும் எனக் கூறப்படுகிறது.

பிரண்டையைத் துவையல் உடல் சுறுசுறுப்பு பெறவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை நரம்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.

அஜீரணம், பசியின்மை, இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரண்டை துவையல் சிறந்த மருந்தாக இருக்கும். மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்குப் பிரண்டை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது எனக் கூறப்படுகிறது.

எலும்புகள் சந்திக்கக் கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கி விடும். இதன் காரணமாக ஏற்படும் முதுகுவலி, கழுத்து வலி காரணமாக தலையை அசைக்க முடியாமலும் அவதிப்பட நேரிடலாம். இந்தப் பாதிப்பில் இருந்து இருந்து விடுபட பிரண்டை துவையல் சாப்பிடலாம்.

வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்து விடும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். பிரண்டையை நெய் விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்