ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்க்க இந்த 8 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
உடல்ஆரோக்கியத்தை கெடுக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை எப்படித் தவிர்ப்பது என்பதற்கு 8 வழிமுறைகளை இந்தச் செய்தியில் அறியலாம்.
குப்பை உணவுகள் என்று அழைக்கப்படும் ஜங்க்ஃபுட் உணவுகளின் பிரியர்கள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. உண்மையில் பெயருக்கேற்றபடி இது குப்பை உணவுகள் தான் கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் உப்புகள் என்று இனிப்பும் புளிப்பும் காரமுமாய் தயாரிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் வகையில் நாவை அடிமையாக்குகின்றன. வயிறு நிரம்பியிருந்தாலும் கூட சாப்பிட்டு கொண்டே இருக்க செய்யும் இந்த உணவை நிறுத்த ஒரே வழி உங்கள் மூளையை கட்டுக்குள் கொண்டு வருவதுதான். இது சவாலானதே என்றாலும் கூட தொடர்ந்து பயிற்சி செய்தால் இது சாத்தியம் தான். உங்கள் மூளையை வசப்படுத்த இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
உங்களைப் புரிந்து கொள்ளுங்கள்
தீமைகள் என்பதை புரிந்து கொள்வதை விட முக்கியமானது எதுவும் இல்லை. நீங்கள் எதற்கு அதிகம் ஏங்குகிறீர்கள் என்பதை நீங்கள் மட்டுமே உணர முடியும். குறிப்பாக உணவு பொருள்களில் இனிப்பா, துரித உணவா, எண்ணெய் மிகுந்த உணவா என்பதை உணரும் போதே அதன் தீமைகளையும் மனதில் கொண்டு வந்தால் இதை விரும்புவது குறைய தொடங்கிவிடும்.
குறிப்பாக நண்பர்களுடன் இந்த உணவுகள் இருக்கும் இடத்துக்கு செல்ல வேண்டாம். இது உங்கள் மனக்கட்டுப்பாட்டை மீற செய்யும். இனிப்பு பிடித்தால் பழங்கள், கொட்டைகள் மற்றும் முழு கோதுமை பொருள்கள் கலந்தவற்றை பயன்படுத்துங்கள். பிடித்த உணவை பார்ப்பதை தவிர்த்தாலே ஏக்கம் குறைந்துவிடும்.
உணவை வெறுக்க திட்டமிடுங்கள்
எந்த குறிக்கோளை அடைவதற்கும் ஒரு திட்டம் தேவை. அதனால் குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து விலகி இருக்க விரும்பினால் நீங்கள் மளிகை கடைக்கு செல்லும் போது பட்டியலுடன் செல்லுங்கள். ஏனெனில் கடைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் கண்களை ஈர்க்கலாம். அதனால் தேவைப்படுவதை விட மற்றதை வாங்கும் நிலைக்கு உங்கள் மனநிலை தள்ளப்படலாம். அதனால் பட்டியலிடுவதை மட்டும் வாங்குங்கள். மேலும் உடனடி சமையல் , பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் என்று செல்வதை விட வீட்டில் சமைக்கும் உணவை பிடித்தது போல் சுவாரஸ்யமாக்குங்கள்.
மனதில் உருப்போட்டுகொண்டே இருங்கள்
ஆல் இஸ் வெல் என்பது போன்று குப்பை உணவு வேண்டாம் என்பதை உருப்போட்டு கொண்டே இருங்கள். முதலில் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் ஃப்ரிட்ஜ்ஜுக்குள் இருப்பதை வெளியேற்றுங்கள்.
நீங்களாக முயற்சிக்காதவரை எந்த வகையிலும் உங்களால் இதை நிறுத்த முடியாது. புதிய ஒன்றில் உங்கள் மனதை ஈடுபடுத்துங்கள். ஜிம் அல்லது யோகா என்று ஈடுபடும் போது மனம் அதை மட்டுமே சிந்திக்க கூடும். பிறகு துரித உணவு குறித்து யோசிக்கவே மாட்டீர்கள்.
மென்று சாப்பிடுங்கள்
சாப்பாட்டை மென்று சாப்பிட்டால் நேரம் அதிகரிக்கும் உணவு குறைவாகவே உள்ளே செல்லும் என்பது தெரியுமா?
அது எந்த உணவாக இருந்தாலும் சரி நீங்கள் உணவை மெல்லும் நேரம் உண்ணும் மொத்த நிமிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஏனெனில் ஆய்வின் படி சாப்பிடதொடங்கிய 20 நிமிடங்களில் வயிறு நிரம்பியதற்கான சமிக்ஞை காட்டும் அதனால் உணவை மென்று சாப்பிடுவதை காலப்போக்கில் கற்றுகொள்வீர்கள். இதனால் உணவு எடுப்பதும் குறையலாம்.
சிறிய தட்டும் வண்ணமில்லா உணவும்
உணவு விற்பனை நிறுவனங்களின் சூட்சுமமே கலர் கலரான வண்ணங்களில் தட்டுகளில் உணவை நிரப்பி வைப்பதுதான். குறிப்பாக ஆரஞ்சு நிற வண்ணங்கள் கண்களில் பார்த்தாலே பசியை தூண்டக்கூடும். மேலும் அதிக உணவை வயிற்றுக்குள் தள்வதை ஊக்குவிக்கும். உங்கள் உணவில் செயற்கை நிறமில்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.
சிறிய தட்டுகளில் உணவை நிரப்பி எடுத்துகொண்டால் குறைந்த உணவே உங்கள் வயிற்றை திருப்திபடுத்திவிடும். கண்களும் பசியாறும்.
சுவையை கூட்டுங்கள்
துரித உணவுகளிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் மட்டுமா சுவைகள் இருக்கும். வண்ண நிறமும், வடிவமைப்பும், சொல்லொணா சுவையும் உங்கள் ஆரோக்கிய உணவிலும் பிரதிபலிப்பதை கவனியுங்கள். குறிப்பாக ஒவ்வொரு வேளையும். மூன்று வேளை உணவுகளிலும் இயற்கை வண்ணங்களையும், அனைத்து சுவைகளும் இனிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு என்று நீக்கமற எடுத்துகொண்டால் நாவின் சுவை மொட்டுகளை திருப்திபடுத்தலாம். ஆரோக்கியமாகவே.
நொறுக்குத்தீனிகள் குறித்த விழிப்புணர்வு
துரித உணவுகளாகட்டும், நொறுக்குத்தீனிகளாகட்டும் எதுவாக இருந்தாலும் நீங்கள் அதை சுவைப்பதில் காட்டும் ஆர்வத்தை விட அதன் தயாரிப்பு முறைகளில் ஆர்வம் காட்டுங்கள். இது எளிது இதன் தயாரிப்பு வீடியோக்களில் சேர்க்கப்படும் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு சாயங்கள் மோசமான பாதிப்பை உண்டாக்கும் இராசயனங்கள். பார்க்க பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து விடுபடுவீர்கள்.
நாட்களை தள்ளிபோடுங்கள்
உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? துரித உணவு எடுத்துகொள்ளும் நாட்கள் என்று வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என திட்டமிடுங்கள். ஆனால் அதை செயல்படுத்துவதை தள்ளி போடுங்கள். இது நிச்சயம் உங்களை குப்பை உணவுகளிலிருந்து தள்ளி வைக்க செய்யும்.
இவையெல்லாம் செய்தால் குப்பை உணவிலிருந்து விலகி இருக்க முடியுமா என்று கேட்கலாம். ஆனால் பழக பழக உங்கள் மனமும் மூளையும் உங்கள் சிந்தனையை மாற்றி அமைக்கும். எளிதாக இந்த மோசமான பழகத்திலிருந்து வெளியேறமுடியும். நீங்கள் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகளும் கூட.
தூக்கத்தில் மரணத்தை விளைவிக்கும் ஸ்லீப் ஆப்னியா பற்றி அறிய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://tamil.hindustantimes.com/lifestyle/sleep-apnea-kills-people-in-sleeping-131647772336643.html