தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கருத்தடை சாதனம் அணியாமல் இணைந்தால் கருத்தரிக்காமல் இருக்க 'சேப்டி' நாட்கள் உண்டா

கருத்தடை சாதனம் அணியாமல் இணைந்தால் கருத்தரிக்காமல் இருக்க 'சேப்டி' நாட்கள் உண்டா

I Jayachandran HT Tamil
Mar 12, 2023 12:33 PM IST

பாதுகாப்பாற்ற முறையில் உறவு கொண்டால் கருத்தரிக்காமல் தவிர்க்க முடியுமா என பெரும்பாலான தம்பதியருக்கு உள்ள சந்தேகத்துக்கான விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம்.

கருத்தரிக்காமல் உறவுக்கான வழிகள்
கருத்தரிக்காமல் உறவுக்கான வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இல்லறத்துக்கு நல்லறம் இனிய தாம்பத்தியம். தாம்பத்தியம் சிறக்க வேண்டுமென்றால் ஈடுபாட்டோடு கூடிய உறவாகும். எங்கே தேவையில்லாமல் கருத்தரித்து விடுவோமோ என்ற அச்சத்துடனே இதில் ஈடுபட்டால் தாம்பத்தியம் இனிக்காது. எனவே உறவு கொண்டாலும் கருத்தரிக்காமல் இருக்கும் பாதுகாப்பான நாட்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள தம்பதியர் முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில் மாதவிடாய் முடிந்து முதல் 1-7 நாட்கள் கிட்டத்தட்ட பாதுகாப்பான நாட்கள் எனலாம். 8ஆவது நாளில் இருந்து 19ஆவது நாள் வரை பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் வாய்ப்பிருப்பதால் அப்போது பாதுகாப்பாற்ற உறவு உசிதமல்ல. எனவே அந்த நாட்களில் கருத்தடை சாதனங்கள் அணியாத உறவை அல்லது கருத்தரிப்பை தவிர்க்க உறவு கொள்வதையே தவிர்க்க வேண்டும்.

ஆண்களுக்கு அவர்களது வாழ்முழுவதும் விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. ஆனால் பெண்களுக்கோ 40-50 வயதுக்குள்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது குறையத்தொடங்கி ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. இதைத்தான் மெனோபாஸ் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மெனோபாஸ் காலத்தில் பெண்கள் கருத்தரிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை சீராக மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அந்த மாத்தில் 4-5 நாட்களில் தான் பொதுவாகக் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுவது இயற்கை. மாதவிடாய் முடிந்த 10-14ஆவது நாட்களுக்குள் கருமுட்டை வெளியாகும். ஆனால் கருமுட்டை வெளியாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடுவதால் அதில் ரிஸ்க் உள்ளது. அப்படிப்பார்த்தால் மாதவிடாய் முடிந்த முதல் 7 நாட்கள் தான் சேப்டி நாட்கள் எனலாம்.

மருத்துவரீதியாகக் கூறப்போனால் உண்மையில் அப்படிப்பட்ட சேப்டி நாட்கள் எல்லாம் கிடையவே கிடையாது. சீரற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள் எப்போது வேண்டுமானாலும் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. மாதவிடாய் முடிந்தோ அல்லது தொடங்குவதற்கு முந்தைய நாட்களிலோ கூட கருத்தரிக்கலாம். இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் கருத்தடை சாதனங்களை அணிந்து கொள்வது நல்லது.

25 வயதுக்குள்பட்ட பெண்கள் தி மோஸ்ட் ஃபெர்ட்டைல் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இவர்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் எளிதாகக் கருத்தரிக்கும் வாய்ப்பைக் கொண்டவர்கள் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

சில பெண்களின் உடலில் விந்தணுக்கள் 7 நாட்கள் வரை கூட தங்கியிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் மாதவிடாய்க்கு பிந்தைய நாட்களிலும் கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதில் சீரற்ற மாதவிடாய் ஏற்படுபவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புள்ளது.

நீங்கள் கருத்தரிக்க விரும்பாவிட்டால் கருத்தடைச் சாதனங்களை அணிந்து கொள்வதே சிறந்த வழி என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிலர் நினைக்கின்றனர், உறவுக்குப் பின் பெண்கள் உடனடியாக பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்துவிட்டால் விந்தணுக்கள் சிறுநீருடன் வெளியேறிவிடும் என்று. ஆனால் அந்த கருத்து தவறாகும். சிறுநீர் வெளியேறும் யுரித்ரா என்ற துளை வேறு. விந்தணுக்கள் செல்லும் யோனிப்பாதை வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை. யோனிக்குள் விரல்களையோ அல்லது தண்ணீர் குழாய்களை விட்டோ விந்தணுக்களை வெளியேற்ற முயன்றால் காயம் ஏற்படுவதற்கு மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

ஆண்கள் வெளியேற்றும் விந்தில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் உள்ளன. அதில் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டோதான் சினைப்பையை சென்றடையும்.

சிலர் உறவின்போது உச்சகட்டம் வரும்போது ஆணுறுப்பை எடுத்துவிட்டால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்றும் கருதுகின்றனர். இதுவும் முற்றிலும் தவறாகும். ஏனென்றால் உறவுக்கு ஆண் தயாரானவுடனேயே அவரது உறுப்பில் சிறிய அளவில் திரவம் ஒன்று சுரக்கும். அது உறவின்போது ஏற்படக்கூடிய உராய்வின் வேதனையைக் குறைப்பதற்காக சுரக்கின்றது. ஆனால் பாருங்கள். அந்த திரவத்தில்கூட பல்லாயிரக்கணக்கான விந்தணுக்கள் உள்ளன. எனவே இந்த முயற்சியும் பலிக்காது.

உறவின்போது விந்தணுக்கள் யோனிப்பாதையின் தொடக்கத்தில் பட்டால்கூட அது சினைப்பையை நோக்கி நகரத் தொடங்கிவிடும்.

ஆக மொத்தம் ஒரு ஆறுதலுக்காகச் சொல்ல வேண்டுமென்றால் பெண் மாதவிடாய்க்குப் பின்னர் 1-7 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. ஆனாலும் உறுதி சொல்ல முடியாது. எனவே தேவையற்ற கருத்தரிப்பை விரும்பாதவர்கள் கருத்தடைச் சாதனங்களை அணிந்து கொள்வதே நல்லது.

அப்படி பாதுகாப்பற்ற உறவு நடந்திருந்தால் அவசரகால உத்தியாக மருந்துக் கடைகளில் விற்கும் ஐ-பில் எனப்படும் மாத்திரையை வாங்கி பெண்கள் சாப்பிடலாம். உறவுகொண்ட 72 மணிநேரத்துக்குள் இதைச் செய்ய வேண்டும். ஆனால் இதுபோன்ற செயலைச் செய்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் பின்னாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆணுறையில் விருப்பம் இல்லையென்றால் பெண்கள் காப்பர் டி சாதனம் அணியலாம். இதனால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. ஆனால் பயப்படத் தேவையில்லை.

மாலா-டி போன்ற கருத்தடை மாத்திரைகள் உள்ளன.

ஆண்கள் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையான வாசக்டமியை செய்து கொள்ளலாம். விரும்பினால் அதை சரி செய்து மீண்டும் குழந்தை பிறக்கும் வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ளலாம்.

பெண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சையும் உள்ளது. இது 99.9 சதவீதம் சிறப்பான பலனைத் தரும்.

பெண்களுக்கான தாற்காலிக கருத்தடை ஊசி உள்ளது. ஆண்டுக்கொருமுறை செலுத்திக் கொள்ள வேண்டும். அதில் பின்விளைவுகள் ஏற்படலாம். கருத்தரிக்க மிகக் குறைந்த வாய்ப்பும் உள்ளது.

எனவே பாதுகாப்பான உறவே குடும்ப சூழ்நிலைக்கு நல்லது.

WhatsApp channel