Healthy Diet: எலும்புக்கு வலுதரும் உளுந்து புட்டும் சுவையான முட்டைகோஸ் போண்டாவும் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet: எலும்புக்கு வலுதரும் உளுந்து புட்டும் சுவையான முட்டைகோஸ் போண்டாவும் செய்முறை

Healthy Diet: எலும்புக்கு வலுதரும் உளுந்து புட்டும் சுவையான முட்டைகோஸ் போண்டாவும் செய்முறை

I Jayachandran HT Tamil
Jun 17, 2023 10:15 PM IST

எலும்புக்கு வலுதரும் உளுந்து புட்டும் சுவையான முட்டைகோஸ் போண்டாவும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சுவையான முட்டைகோஸ் போண்டா
சுவையான முட்டைகோஸ் போண்டா

உளுந்து புட்டு செய்யத் தேவையானவை:

தோல் நீக்கிய உளுந்து - 1கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

தேங்காய் துருவல் - 2கப்

பனங்கற்கண்டு பொடி - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

உளுந்து புட்டு செய்முறை:

உளுந்தையும், அரிசியையும், தனித்தனியாக வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே ஆறவைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு புட்டு மாவு பதத்துக்கு பொறுபொறுவென திரித்து கொள்ளவும்.

அந்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்து விட்டு, பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து புட்டு செய்யும் பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதில் தேங்காய் துருவலையும் சேர்த்து விரவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் புட்டுக் குழலில் மாவை போட்டு ஆவியில் வேக விடவும். வேகும் போதே நல்ல வாசனையாக இருக்கும். வெந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கற்கண்டு தூள் சேர்த்து

சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

இந்தப் புட்டு இனிப்பாக இருந்தாலும் ஒரு மாறுதல் சுவைக்காக மொறு, மொறுப்பாக முட்டைகோஸ் போண்டா செய்து சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும். இவையிரண்டும் மாலை வேளையில் செய்து தந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முட்டைகோஸ் போண்டா செய்யத் தேவையானவை

துருவிய முட்டைகோஸ்- ஒருகப்

தோல் சீவிய உருளைக்கிழங்கு- 1

பச்சை மிளகாய்- இரண்டு

கருவேப்பிலை- ஒரு கைப்பிடி

கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

நறுக்கிய பெரிய வெங்காயம் -1

கடலை மாவு- கால் கப்

அரிசிமாவு - கால் கப்

உப்பு- சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவைக்கேற்ப

தேங்காய் துருவல்- கால் கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

முட்டைகோஸ் போண்டா செய்முறை:

முதலில் துருவிய முட்டைகோஸ் ஒருகப் எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி அதையும் துருவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், ஒருகைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இந்த காய்கறிகளை எல்லாம் மொத்தமாக சேர்த்த பிறகு, கால் கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை இவையெல்லாம் நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பக்கோடா போடும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மிதமான தீக்கு மாற்றிவிட்டு உருட்டி வைத்த போண்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் எடுத்து கொள்ளவும்.

சுவையான முட்டைகோஸ் போண்டாவை தக்காளி அல்லது பச்சை மிளகாய் சாஸ் , வெங்காயச் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

உளுந்து புட்டு செய்திருப்பதால் அதற்கு காம்பினேஷனாக தந்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.