Tips for Glowing Skin: சூப்பர் பளபளப்பான சருமத்துக்கு செமயான 24 டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tips For Glowing Skin: சூப்பர் பளபளப்பான சருமத்துக்கு செமயான 24 டிப்ஸ்!

Tips for Glowing Skin: சூப்பர் பளபளப்பான சருமத்துக்கு செமயான 24 டிப்ஸ்!

I Jayachandran HT Tamil
May 02, 2023 05:53 PM IST

சூப்பர் பளபளப்பான சருமத்துக்கு செமயான 24 டிப்ஸ்களோடு கால்வெடிப்புக்கான நிவாரணத்தையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பளபளப்பான சருமம்
பளபளப்பான சருமம்

வறண்ட சருமம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு மன உளைச்சலைத் தரக்கூடியது. இதற்கு என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்காக சில டிப்ஸ். இதற்காக ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். இதில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று பயப்படவும் தேவையில்லை.

1.ஆப்பிள்

ஆப்பிள் முழுவதுமே வறண்ட சருமத்துக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. ஆப்பிளைத் தோலை நீக்கிவிட்டு, அதைத் துண்டு துண்டாக நறுக்கி, பாலில் போட்டுக் கொதிக்க வையுங்கள். கெட்டியாகத் தயிர் போல ஆகிவிடும். அதை நன்றாக ஆற வைத்து தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து முகத்தில் பூசி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு கழுவினால் முகம் பொலிவு பெறும்.

பால் இல்லாமல் இன்னொரு வழியும் இருக்கிறது. அதே போல ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல ஆக்கி அதையும் மேற்குறிப்பிட்ட முறையில் அரை மணி நேரம் முகத்தில் போட்டு பின்பு கழுவலாம். இரண்டு வழிகளிலும் வறண்ட சருமத்தைப் போக்க முடியும். உங்களுக்கு எந்த வகை வசதியாக இருக்கிறதோ அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

2.மோர்

வெறும் மோர் போதுமா வறண்ட சருமத்தைப் போக்க? என்ற சந்தேகம் இருக்கிறதா? நிச்சயம் மோர் பலனளிக்கும். தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம். இதிலென்ன சிக்கலென்றால் தயிரைக் கடைந்து மோர் எடுப்பதுதான் கொஞ்சம் கடினம்.

3.தக்காளி

தக்காளி பெரும்பாலும் எண்ணெய் சருமத்தைக் கொண்டவர்களுக்கே பலனளிக்கும். இருப்பினும், வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இதைச் சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரியப் பலனை உணர்வீர்கள்.

4.வெள்ளரி

சூட்டைத் தணிக்க வெள்ளரிதான் பெஸ்ட். சூட்டையே தணிக்கும் வெள்ளரி, வறண்ட சருமத்திற்குப் பொலிவு தராதா என்ன? வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தைப் பளபளப்பாக்கி விடும்.

5.தக்காளி மற்றும் வெள்ளரி

தக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். எப்படி என்றால் சாறாகப் பிழிந்து..! இவை இரண்டையும் நன்றாக அரைத்து சாறாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவினால் வறண்ட சருமம் சரியாகியிருக்கும்.

6.முல்தானி மட்டி

முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.

7.மஞ்சள்

மஞ்சள் தேய்த்துக் குளிப்பது ஒருபுறம், தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ வேண்டும்.

8.வெண்ணெய்

வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.

9.அரிசி மாவு

அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

10.ஆவார கலவை

ஆவாரம் பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து நீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்துவிட்டு பின்பு நன்கு கழுவினால், வறண்ட சருமம் மாறும்.

11.பச்சை முட்டை

பச்சை முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதனுடன் தேனைக் கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பின்பு நன்கு சோப்பு போட்டுக் கழுவிவிட வேண்டும். ஏனென்றால், தேனும் முட்டையும் முழுமையாகச் சருமத்தை விட்டு நீங்க வேண்டும்.

12.வாழைப்பழம்

நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து, க்ரீம் போல மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவடையும்.

13.சந்தனம்

சந்தனக்கட்டையை உரசியோ, அல்லது சந்தனக் கட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யுடனோ, பால் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலக்கி, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் கழுவ வேண்டும்.

14.உருளைக் கிழங்கு சாறு

தயிரை நன்கு கலக்கி அதனுடன் உருளைக்கிழங்கை அரைத்துப் பிழிந்து சாறாக்கிக் கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தைக் கொஞ்சம் சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். அப்படிச் செய்தால் வறட்சி நீங்கும்.

15.எண்ணெய்கள்

எண்ணெய்களில் இருக்கும் ஈரப்பதம், தோலின் வறட்சியைப் போக்கும் இயல்புடையது. அதற்காக எல்லா எண்ணெய்யையும் பயன்படுத்த முடியாது. சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்க சில எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணெய்

சூரிய காந்தி எண்ணெய்யில் ஈரப்பதம் அதிகம். கலப்படமற்ற சூரியகாந்தி எண்ணெய்யைத் தோலில் தடவுவதன் மூலம், வறட்சியைப் போக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்துக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், தோலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரித்து இயற்கையாகவே வறட்சியை எதிர் கொள்ளும் இயல்பைச் சருமத்துக்குக் கொடுக்கும். தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெய்யை வறண்ட சருமத்தின் மீது தடவிக் கொண்டு தூங்கலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்யை வறண்ட சருமத்தின் மீது தடவி, நன்றாக மஸாஜ் செய்துவிட்டு பின்பு குளிக்க வேண்டும். இதனால், உடல் குளிர்ச்சி அடைவதுடன், தோலின் வறட்சித் தன்மையும் நீங்கும்.

ஆமணக்கு எண்ணெய்

மற்ற எண்ணெய்களைப் போலவே இதனையும் பயன்படுத்தலாம். ஆனால் கொஞ்சம் குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் கொழுப்பும், ஈரப்பதம் அளிக்கும் இயல்பும் பிற எண்ணெய்களைக் காட்டிலும், இதில் கொஞ்சம் அதிகம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை முகத்தில் தடவி, மஸாஜ் செய்து விட்டுக் குளித்தால், தோலில் உள்ள வறட்சி தன்மை நீங்கி, பொலிவு பெறும்.

16.பன்னீர்

வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தப்படும் பன்னீரை, முகத்தில் நேரடியாகத் தடவலாம். பன்னீரை முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து, பின்பு கழுவினால், சரும வறட்சி நீங்கும்.

17.வினிகர்

வினிகரை நன்கு அரைத்த ஆப்பிளுடன் சேர்த்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் கழுவினால் முகத்திலுள்ள வறட்சி நீங்கிவிடும்.

18.ஓட்ஸ் குளியல்

ஓட்ஸ் பவுடரை, நீரில் கலந்து குளிக்கும்போது, தோலில் உள்ள வறட்சி நீங்கும். தினசரி செய்யாமல் வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை வரை இப்படிக் குளிக்கலாம். பலனையும் காணலாம்.

19.பால்

அதிகமாகப் பால் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரித்து, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும், பாலையோ, பாலாடைக் கட்டியையோ சருமத்தில் தடவுவதன் மூலமும் வறட்சியைத் தவிர்க்க முடியும்.

20.தேன்

தேன் பல்வேறு குணாதசியங்களைக் கொண்டது. உடலுக்கு ஈரப்பதம் அளிக்க, அழற்சியால் ஏற்படும் தோல் மாற்றங்களைக் குணப்படுத்த, காயம் ஏற்பட்ட பகுதிகளைக் குணப்படுத்த இப்படி பல்வேறு அம்சங்களைக் கொண்டது தேன்.

தேனை, முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து நன்கு கழுவுவதன் மூலமும், உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் வறண்ட சருமத்தைக் குணப்படுத்த முடியும்.

21.கற்றாழை

கற்றாழையில் உள்ள திரவ பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சில நிமிடங்கள் உலர வைத்து பின்பு நன்கு கழுவுவதன் மூலம் வறண்ட சருமத்தைப் போக்க முடியும். கற்றாழையைச் செடியிலிருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தலாம்.

22.வேப்பிலை

எளிதில் நமக்குக் கிடைக்கக்கூடிய, வேப்பிலையை, நன்கு அரைத்து அத்துடன் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போல் ஆக்கி முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவிவிட்டால், பொலிவு பெற்ற சருமத்தைப் பார்க்கலாம். இதில் ஒரு சிக்கல், கசப்பு சுவையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

பால் கிடைக்காதவர்கள் வேப்பிலையை நீருடன் சேர்த்து அரைத்து அதைப் பயன்படுத்தலாம். பால் கட்டாயமில்லை.

23.வெந்தயம்

வெந்தயத்தையோ அல்லது அதன் இலைகளையோ நன்கு அரைத்து, அத்துடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவலாம். இதற்கும் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும் இயல்பிருக்கிறது.

24.குடிநீர்

குடிநீருக்குச் சரும வறட்சியைப் போக்கும் இயல்பு இருக்கிறதா? என்ற சந்தேகமே வேண்டாம். அதிகம் நீரைக் குடியுங்கள். உடல் குளிர்ச்சியே பாதி சரும வறட்சியை போக்கிவிடும். உடலில் உள்ள நீர்ச்சத்து, தோலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

என்ன வெறும் முகத்துக்கான டிப்ஸ்களாக இருக்கிறதே என்ற யோசனையா? கால் பாதங்களில் வறட்சியின் காரணமாக வெடிப்பைச் சந்திப்பவரா நீங்கள்?

இதோ உங்களுக்கான டிப்ஸ்,

நீர் நேரத்தைக் குறைக்க வேண்டும்

அது என்ன நீர் நேரம் என்கிறீர்களா? இந்தியச் சூழலில் பெண்கள் சமையல், துணி துவைப்பது என அதிக நேரம் நீருடன் செலவிடவேண்டியிருக்கிறது. இந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு, நீரை விட்டு விலகியிருக்க வேண்டும். தோலில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்ப் பசை தண்ணீருடன் சென்றுவிடுவதால், சரும வறட்சி ஏற்படுகிறது.

குளியலின்போது

நீண்ட நேரம் குளிப்பதைத் தவிருங்கள். அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் கால்கள் நீரில் இருக்கக் கூடாது. இதனால் இயற்கையாக இருக்கும் எண்ணெய் மறைந்து தோல் வறண்டுவிடும். சூடான நீரில் குளிப்பவர்கள் அதை நிறுத்தி விட்டு குளிர்ந்த நீருக்கு மாறிக்கொள்ளுங்கள்.

மருதாணி

மருதாணி இலைகளை நன்கு அரைத்து காலில் தடவி உலரவைத்து பின்பு கழுவினால் வறட்சி ஏற்படாது. வெடிப்பு பாதிப்பு கொண்டவர்கள், மருதாணியின் சாற்றை அதில் விடலாம்.

பப்பாளி

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதைப் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் மருதாணி வைப்பது போலவே, தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை

தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

இயற்கையாகவே சில பெண்களுக்கு வறண்ட சருமம் காணப்படும். அவர்களுக்குச் சரும வறட்சியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்காது. அதற்காக வருந்தாமல், மேற்குறிப்பிட்ட முறைகளில் ஒன்றை முறையாகச் செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.