Chilli Garlic Paratha: வீட்டிலேயே செய்யலாம் சுவையான சில்லி கார்லிக் பரோட்டா
சுவையான சில்லி கார்லிக் பரோட்டா செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பூண்டு மிகவும் பிடிக்கும் என்றால் ஒரு முறை இந்த மாதிரி சுவையான சில்லி கார்லிக் பரோட்டா செய்து பாருங்கள். சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
சில்லி கார்லிக் பிரட் அல்லது நூடுல்ஸ் பிரியர்களுக்கு, நிச்சயமாக இந்த சில்லி கார்லிக் பரோட்டாவும் ரொம்ப பிடிக்கும். பூண்டை வைத்து பூண்டு சட்னி, பூண்டு பொடி, பூண்டு சாதம், பூண்டு ஊறுகாய் என எது செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். பூண்டிற்கு என தனித்துவமான சுவையும் மணமும் நிறைந்திருக்கும். உங்களுக்கும் இது போன்ற பூண்டு ரெசிபிக்கள் பிடிக்கும் என்றால் இந்த சில்லி கார்லிக் பரோட்டாவையும் கட்டாயமாக செய்து ருசித்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு செய்வதாக இருந்தால் சில்லி ஃப்ளேக்ஸ் இன் அளவை குறைத்துக் கொள்ளலாம். இந்த ரெசிபி செய்வதற்கு பூண்டை துருவி பயன்படுத்தினால் சுவை அற்புதமாக இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த சில்லி கார்லிக் பரோட்டாவை வெறும் 20 நிமிடத்தில் செய்திடலாம். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
சில்லி கார்லிக் பரோட்டா செய்யத் தேவையான பொருட்கள்-
கோதுமை மாவு - ஒன்றரைகப்
பூண்டு பல் 10-12
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆரிகேனோ - ½ டீஸ்பூன்
சில்லி ஃபிளக்ஸ் - 1 டீஸ்பூன்
சில்லி கார்லிக் பரோட்டா செய்முறை-
முதலில் பூண்டை தோல் உரித்து துருவிக் கொள்ளவும்.
உருக்கிய வெண்ணெயுடன் துருவிய பூண்டு, சிறிதளவு உப்பு, ஆரிகேனோ மற்றும் சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு மாவு பிசைந்து கொள்ளவும்.
மாவை 20 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் ஒருமுறை பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும். இதன் மீது தயாராக வைத்துள்ள பூண்டு வெண்ணெய் கலவையை தடவவும்.
நீங்கள் விரும்பினால் இதன் மீது சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவிக் கொள்ளவும்.
இப்போது காகித விசிறி செய்வது போல சப்பாத்தியை மடித்து சுருட்டி வைக்கவும்.
இதை சற்று தடிமனான பரோட்டாக்களாக திரட்டி, இருபுறமும் நன்கு வெந்து பொன் நிறமாகும் வரை வேக விடவும்.
பூண்டின் மணம் வீடு எங்கும் வீச, சுவையான இந்த பரோட்டாக்களை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்