வாயுத்தொல்லை, அஜீரணத்தை போக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாயுத்தொல்லை, அஜீரணத்தை போக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு!

வாயுத்தொல்லை, அஜீரணத்தை போக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு!

I Jayachandran HT Tamil
Apr 06, 2023 08:37 PM IST

Healthy Diet: வாயுத்தொல்லை, அஜீரணத்தை விரட்டியடிக்கும் செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு
செட்டிநாடு நாட்டுப்பூண்டு குழம்பு

இந்தப் பூண்டை இரண்டு எடுத்து சுட்டு சாப்பிட்டால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே கலகலவென வாயு பிரிந்து விடும். செரிமானப் பிரச்னைகள் தீர்ந்து விடும். பச்சையாக ஐந்தாறு பற்கள் பூண்டை நறுக்கி வாயில்போட்டு தண்ணீர் குடித்து முழுங்கிவிட்டாலும் இதே நன்மைகள் உண்டு.

அப்படிப்பட்ட சிறப்பான நாட்டுப்பூண்டை வைத்து குழம்பு செய்தால் மிகச்சிறந்த ஆரோக்கியத்தைப் பெறலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழம்பு செய்வதற்கு நல்ல நாட்டுப் பூண்டாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். வெள்ளை வெளேர் என சுண்ணாம்பில் கழுவப்பட்ட சீனப் பூண்டுகளை வாங்கினால் அந்தளவுக்கு மருத்துவக் குணங்கள் இருக்காது.

இனி செட்டிநாடு ஸ்டைல் நாட்டுப்பூண்டு குழும்பு செய்வது குறித்து பார்க்கலாம்.

நாட்டுப்பூண்டுக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள் :

நாட்டுப்பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க :

கடுகு – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

செட்டிநாட்டு நாட்டுப் பூண்டுக் குழம்பு செய்முறை :

புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு ரெடி.

சுடச்சுட சாதத்துடன் பிரட்டி சாப்பிட்டால் சுவைக்கு நிகரில்லை.

சாதம் மட்டுமல்லாமல் சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், கேப்பைக்கூழ், கம்பங்கூழ் போன்றவற்றுக்கும் தொட்டுக்கொள்ள இந்த பூண்டுக் குழம்பு பிரமாதமாக இருக்கும்.

பழைய சாதத்துக்கும் சைடு டிஷ்ஷாக வைத்துச் சாப்பிடலாம்.

கர்ப்பிணிகள் வாய்கசப்புக்கு சிறிது தொட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். குமட்டல், வாந்தி அடங்கும்.

முதியவர்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்கு விடுதலை கிடைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.