பாஸ்மதி ரைஸ்ல நீளமா உதிரி உதிரியா பக்குவமா செஞ்ச வெஜிடபிள் பிரியாணி!
பாஸ்மதி அரிசியில் நீளமா உதிரி உதிரியா பக்குவமா வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் சாப்பிடும் உணவை ரசித்து, ருசித்து பொறுமையாக சாப்பிட்டு பாருங்கள் வாழ்க்கை இன்னும் அழகாகும். நமது மனநிலையை மாற்றி மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய உணவுகளில் பிரியாணியும் ஒன்று. பொதுவாக அசைவ பிரியாணிகள் மட்டுமே சுவை நிறைந்ததாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் ஒரு சில பிரியாணி பிரியர்களுக்கு குஸ்கா கூட தேவாமிர்தமாக இருக்கும். அசைவ பிரியாணி மட்டுமல்ல வெஜிடபிள் பிரியாணியை கூட சுவை நிறைந்ததாக செய்ய முடியும்.
பிரியாணி செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் மசாலா, அரிசி மற்றும் தண்ணீரின் அளவு போன்ற ஒரு சில விஷயங்களை கவனித்தால் போதும் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் கூட சுலபமாக பிரியாணி செய்திடலாம். இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள வெஜிடபிள் பிரியாணி ரெசிபி மிகவும் சுலபமானது. இந்த செய்முறையை பின்பற்றினால் நீங்களும் ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கக்கூடிய அதே சுவையில் ஒரு அற்புதமான பிரியாணியை செய்திடலாம்.
பாஸ்மதி அரிசி வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள -
பாஸ்மதி அரிசி - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
பிரியாணி மசாலா பொடி - 3 டீஸ்பூன்
உப்பு தேவையான - அளவு
காய்கறி கலவை - 2 கப்
முந்திரி - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
கொத்தமல்லி இலை - ½ கப்
புதினா இலைகள் - ½ கப்
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டேபிள் ஸ்பூன்
பாஸ்மதி அரிசி வெஜிடபிள் பிரியாணி செய்முறை-
அரிசியை கழுவி சுத்தம் செய்து 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுதிற்கு பதிலாக ஃபிரெஷ் ஆன இஞ்சி மற்றும் பூண்டையும் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம்.
ஒரு பிரஷர் குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதில் பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்ததாக தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். இதனுடன் பிரியாணி மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மசாலாவுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, காளான் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை இதை சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதி வர ஆரம்பித்தவுடன் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்புகளை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் விசில் தானாக அடங்கிய பின்னர், வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.
சுவையான இந்த வெஜிடபிள் பிரியாணி ரெசிபியை நீங்களும் தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்