Fasion: குள்ளமான பெண்கள் புடவையில் உயரமாக தெரிய என்ன செய்ய வேண்டும்?
புடவையில் உயரமாக தெரிய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதுமே குட்டையாக இருக்கும் பெண்கள் சேலை கட்டும்போது தோன்றும் பிரச்னை என்னவென்றால் இதில் நாம் உயரமாகத் தெரிவோமா இல்லையா என்பதுதான். அத்துடன் சற்று குண்டான உடல் வாகு இருந்தால் இன்னும் சங்கடமாக இருக்கும்.
குட்டையாக இருப்பவர்களுக்கு சேலை உயரம் வேறு ஒரு பிரச்னையாக இருக்கும். பட்டுப்புடவை கட்டும்போது மேல்புற பார்டரை வயிற்றுக்குள் செருகும்போது பொம்மென்று வயிறு வேறு பெரிதாகக் காண்பிக்கும்.
சிலர் தங்களை சற்று எடுப்பாகக் காட்டவேண்டும் என நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் லோஹிப் கட்ட முடியாது. எனவே குட்டையாக இருப்பவர்களுக்கு சேலை எப்போதும் தலைவலிதான்.
ஆனால் தங்கள் கட்டும் சேலைகளின் டிசைன்கள், நிறங்களைக் கொண்டு அவர்களது உயரத்தை சற்றே அதிகமாக காட்டுவதற்கான வழிமுறைகள் உள்ளன.
உயரம் குறைவான பெண்கள் பெரிய பார்டர் இருக்கும் புடவைகளை அணியக்கூடாது. இது அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாகக் காட்டும். மாறாக, சிம்பிளான மெல்லிய பார்டர் கொண்ட புடவைகளை அணிவது சிறந்த தோற்றத்தைத் தரும்.
பட்டுப்புடவை கட்டவேண்டும் என நினைப்பவர்கள் மைசூர் சில்க்கைத் தேர்ந்தெடுத்தால் அதன் இயல்பான மெல்லிய சரிகை பார்டர் தோற்றத்தை சிறப்பாக்கிக் காட்டுவதோடு உயரமாகவும் காண்பிக்கும்.
பிரிண்ட்கள் மற்றும் டிசைன்கள் கொண்ட புடவைகள் உயரம் குறைவான பெண்கள் பெரிய பெரிய பிரிண்ட்கள் மற்றும் டிசைன்கள் இருக்கும் புடவைகளை அணியக்கூடாது. இது உடல் தோற்றத்தைச் சிறியதாக காட்டும். அதற்கு பதிலாகச், சிறிய பிரிண்ட்கள் இருக்கும் புடவையைத் தேர்வு செய்யவும். இவை உயரமாக இருப்பது போன்ற மாயத்தை உருவாக்கி அவர்களை உயராகக் காட்டும்.
அதேபோல் பட்டுப்புடவை எடுக்கும்போதும் சிறிய புட்டா போட்ட சேலைகளை எடுத்தால் உயரம் குறைவாகத் தெரிய மாட்டீர்கள்.
எடை குறைந்த லேசான துணிகள் உடலை நீளமாகக் காட்டும். எனவே, உயரம் குறைவான பெண்கள் சிஃப்பான், ஜார்ஜெட், சில்க் போன்ற லேசான துணியில் தயாரிக்கப்பட்ட புடவைகளை அணிய வேண்டும். அவை அவர்களது உடலில் பாவி எடுப்பாகவும் காட்டும். இந்த வகையான புடவையில் உயரமாகத் தெரிவார்கள்.
செங்குத்தான கோடுகளைக் கொண்ட புடவைகள்
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், செங்குத்தான கோடுகளைக் கொண்ட டிசைன் புடவைகளை கட்டினால் உயரமாக தெரிவார்கள். செங்குத்து கோடுகள் உயரமாக இருப்பது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கி அவர்களை உயரமாக காட்டும்.
கச்சிதமான பிளவுஸ்களை அணியுங்கள். மிகவும் தளர்வான பிளவுஸ்களை அணிய வேண்டாம். இது தவிர, பிளவுஸின் நீளமும் மீடியமாக இருக்க வேண்டும். பிளவுஸ் எப்போதுமே மிகவும் நீளமாகவோ அல்லது சின்னதாகவோ இருக்கக் கூடாது. மெகா ஸ்லீவ்ஸ் ஜாக்கெட்கள் அணிந்தால் சரியாக இருக்கும்.
சரியான நெக் டிசைன்களைத் தேந்தெடுங்கள். குட்டையான கழுத்தை கொண்டவர்கள் லாங் நெக் டிசைன் கொண்ட பிளவுஸ்களை அணியக்கூடாது. V- வடிவ நெக் டிசைன்கள், சதுரம் மற்றும் ஸ்வீட்ஹார்ட் எனப்படும் பின்புறம் முழுவதுமாக மூடி முன்புறம் லோவாக இருக்கும் நெக் டிசைன் பிளவுஸ்கள் கழுத்துக்கு நீண்ட மற்றும் மெலிதான தோற்றத்தைத் தரும். உயரமாகவும் காட்டும்.
குறிப்பாக கருப்பு நிற புடவை உங்களை எப்போதும் ஏமாற்றாது. உடலை ஒல்லியாக காட்டுவது மட்டுமல்லாமல் தோற்றத்தையும் உயரமாகவும் காட்டும்.
எனவே, இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உயரம் குறைவான பெண்கள் புடவையில் தங்களை உயரமாக காட்டிக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்