தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Global Warming : புவி வெப்பமடைதல் அச்சுறுத்தல் – உலக நாடுகள் செய்ய வேண்டியது என்ன? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை!

Global Warming : புவி வெப்பமடைதல் அச்சுறுத்தல் – உலக நாடுகள் செய்ய வேண்டியது என்ன? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை!

Priyadarshini R HT Tamil
Dec 03, 2023 11:00 AM IST

Global Warming : சிஎஸ்இ ஆய்வின்படி, இந்தாண்டு முதல் 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு (Disaster) இருந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது. முன்பெல்லாம் வளிமண்டலத்தில் ஒரு லிட்டர் நீர் இருந்ததாகக்கொண்டால், தற்போது 2 லிட்டர் நீர் இருப்பதால், மழைப்பொழிவு குறைந்த நேரத்தில் அதிகம் பெய்து வருகிறது.

Global Warming : புவி வெப்பமடைதல் அச்சுறுத்தல் – உலக நாடுகள் செய்ய வேண்டியது என்ன? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை!
Global Warming : புவி வெப்பமடைதல் அச்சுறுத்தல் – உலக நாடுகள் செய்ய வேண்டியது என்ன? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை!

ட்ரெண்டிங் செய்திகள்

1990ல் இருந்து புவிவெப்பமடைதல் காரணமாக உருவான வெப்ப அலையின் காரரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பது 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

1980-2010 வரை வெப்ப உயர்வின் காரணமாக வேளாண் உற்பத்தி பாதிப்பிற்கு உள்ளாகி 127 மில்லியன் மக்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

ஐ.நா. அமைப்பு 2023ம் ஆண்டு, இதுவரை உலக வரலாற்றில் வெப்பம் மிகுந்த ஆண்டாக உலக வானிலை மையம் பதிவுசெய்ததை சுட்டிக்காட்டுகிறது. (கடந்த 174 ஆண்டுகள் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த பின் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது)

2023 அக்டோபரில் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. (2016 – 1.29 டிகிரி செல்சியஸ், 2020ல் 1.27 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகம் இருந்தது)

கரியமிலவாயுவின் அளவு தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளது. 2023 மே மாதத்தில் அது 424 பிபிஎம் ஆக அதிகரித்துள்ளது. 300 பிபிஎம்மில் இருந்து அது அதிகரித்துள்ளது. தாண்டக்கூடாத அளவான 1.5 டிகிரி செல்சியஸ்க்கு அருகில் (1.4 டிகிரி செல்சியஸ்) அளவை நாம் நெருங்கிவிட்டோம்.

உலக வானிலை மைய இயக்குநர் பெட்டேரி டாலஸ் கூறுகையில், ‘இந்தாண்டு பசுமைக்குடி வாயுக்களின் வெளியீடு அதிகரித்துள்ளது. உலக வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகி அவற்றின் இருப்பு குறைந்து வருகிறது’என கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகள் வெப்பம் மிகுந்த ஆண்டுகளாக தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது. இந்தியளவில் பிரதமர் ‘வளர்ச்சிக்கும், சூழல் காப்பதிலும் சமச்சீர்தன்மையை இந்தியா பெற்றுள்ளது’ எனக் கூறினாலும், டெல்லியில் இயங்கும் Centre for Science and Environment படி அது உண்மையா? எனும் கேள்வி எழுகிறது.

சிஎஸ்இ ஆய்வின்படி, இந்தாண்டு முதல் 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு (Disaster) இருந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது. முன்பெல்லாம் வளிமண்டலத்தில் ஒரு லிட்டர் நீர் இருந்ததாகக்கொண்டால், தற்போது 2 லிட்டர் நீர் இருப்பதால், மழைப்பொழிவு குறைந்த நேரத்தில் அதிகம் பெய்து வருகிறது.

இந்திய வானிலை மையத்தின் செய்தி புவிவெப்பமடைதல் அதிகமாவதை உறுதிபடுத்துகிறது. தற்போதைய குளிர்காலத்தில் வெப்பம் மிகுந்தும், பனி அலை குறைவாகவும் இருக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

உலகளவில் புவிவெப்பமடைதல் அதிகமாவதால், பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய ஆதாரமாகத் திகழும், வெப்ப மண்டல மழைக்காடுகள், வெப்ப மண்டல கடற்பரப்பு பெரும் பாதிப்பிற்கு ஆளாகும் என்றும், COP28 மாநாட்டில் இதுகுறித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உடனடி செயல்பாடுகள் இல்லையெனில், உயிரினங்கள் (மக்கள் உட்பட) பெரும் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்றும், லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் பால் விக்னால் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் புவிவெப்படைதல் குறைப்பு குறித்து கவலைகொள்ளத் தேவையில்லையா?

தமிழகத்தின் மின்தேவை கடந்த 10 மாதங்களில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கால்பங்கு மின் ஆற்றலை பயன்படுத்தும் சென்னையில் மின்தேவை 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் மின்தேவையை பூர்த்திசெய்ய புவிவெப்பமடைதலை அதிகரிக்கும் நிலக்கரி மின்உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்து இந்தோனேசியாவிடமிருந்து 5 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருப்பது எப்படி சரியாகும்? சென்னையில் 2020ல் காற்று மாசுபாடு காரணமாக 11,000 தடுக்கப்படக்கூடிய இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

சென்னை மணலியில் இயங்கிவரும் பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் பூஜ்ஜிய திரவக்கழிவுகள் வெளியிடுவது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம் பெட்ரோலிய நிறுவனங்கள் அதை நிறைவேற்ற முயலும் முயற்சிகள் குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோலிய நிறுவனங்கள் சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தும்,அதைப்பற்றி துளியும் கவலைப்படாத தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டித்ததிலிருந்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் யார் நலன்களைக் காக்க இயங்குகிறது எனும் முக்கிய கேள்வி எழுகிறது.

தமிழக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் ஜனநாயகரீதியான போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக அரசு துளியும் அக்கறையின்றி செயல்படுவது சரியா?

பரந்தூர் விமான நிலையப் பகுதியில் 2605 ஏக்கர் பரப்பு ஈரநிலங்கள் என்பதும், அவை 81-216 டன் கார்பனை/ஏக்கர், உள்வாங்கும் தன்மை கொண்டது என்பதையும், அதிகரித்து வரும் புவிவெப்பமடைதல் சூழலையும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா?

இந்தியாவில் புவிவெப்பமடைதல் காரணமாக 2022ல் ஏற்பட்ட இழப்பீடு 8 சதவீதம் GDP. சுருக்கமாக, புவிவெப்பமடைதலைக் குறைக்க ஐ.நா. அமைப்பு, Lancet மருத்துவ ஆய்விதழ், கட்டுரை வெளியிட்டும் துபாய் COP28 மாநாட்டில் அதற்கான தீர்வுகள் கிடைக்குமா?

புவிவெப்பமடைதலை தடுக்க,

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 3 மடங்கு அதிகரித்தும்,

இருக்கும் ஆற்றல் திறனை இருமடங்காக உயர்த்தியும்,

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை சிறிது, சிறிதாக குறைத்தும்

தீர்வு காண முடியும் என்று மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்