Big boss Season 7 : விசித்ரா – ஜோவிகா படிப்பு சர்ச்சை! சமூக வலைதள விவாதங்கள்! சாமானிய பெற்றோர் கூறுவது என்ன?
Bigboss Season 7 : விசித்ரா - ஜோவிகாவின் படிப்பு குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர்கள் அதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
முகநூலில் ஷோபனா நாராயணன் என்பவரின் பதிவு
என் பிள்ளைகள் இருவரும் படிப்பில் படு சுமார் ரகம். பெயில் ஆகும் ரகம். பள்ளியில் இருந்து கூப்பிட்டு என்னை எதுவும் சொன்னதே இல்லை. ஆனால் வீடு தரும் அழுத்தம் மிகப்பயங்கரமானது. எந்நேரமும் குற்றவுணர்வும், ரோஷமும் இன்னபிற அழுத்தங்களுமாக இத்தனை ஆண்டுகள் நகர்ந்திருக்கிறது. இதுபோன்றுதான் பல குடும்பங்களிலும்.
ஆனால் அந்த அனுபவம் எனக்கு கற்றுத்தந்தது வேறு.
என் பிரச்னை, எனது வேகம், எனக்கு ஒரே ஒரு முறை சொன்னால் போதும். பரிட்சை வரை அவ்வளவுதான். படிக்கவோ, எழுதிப்பார்க்கவோ, நெட்டுருவாக்கவோ எதுவுமே இல்லை. கற்பூரம் என்பார்கள் அல்லவா அந்த ரகம். என்னால் வேகம் குறைவாக கற்பவர்களோடு பயணிக்க இயலவில்லை.
எனக்கு கற்பிப்பது கடினம். அதாவது அழகாக விளக்குவேன். புரியவைத்து விடுவேன். எழுதிவிடுவேன். அனைத்தும் பெரியவர்களுக்கு. அதாவது 11வது வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தான் புரிந்துகொள்ள இயலும். குழந்தைகள் விசயத்தில் முடியாது. அவர்கள் லெவலெக்கு இறங்கி வந்து விளையாடவோ பேசவோ தெரியாது.
அதனால் அனைவரும் ஆசிரியர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்தும் எக்காரணம் கொண்டும் ஆசிரியராக மாட்டேன் அது தொழிலுக்கு துரோகம், பல குடும்பங்களுக்கு பண்ணும் பாவம் என கடுமையாக பள்ளி ஆசிரியை பணியை தவிர்த்தேன். எனக்கு படிக்க வராத, மெதுவாக கற்கும் குழந்தைகளைக் கையாளத் தெரியாது என்பதே நிதர்சனம். இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.
இந்திய கல்விச்சூழல் என்பது என் போன்ற கற்பித்தல் குறைபாடு உடைய ஆசிரியர்களையும், என் மகளைப்போன்ற கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளையும் பயந்து தலையெழுத்தே என கற்றுகும் என் மகன் போன்ற குழந்தைகளையும் வெகுசில கற்பூர புத்திக் குழந்தைகளையும் உள்ளடக்கியது.
இதில் அனைவருக்கும் ஒரே பாடம் தான். ஒரே அளவு பாடவேளைகள் தான். எத்தனையோ படித்த பெற்றோர்களுக்கே தங்களது பிள்ளைகளின் கற்றல் திறன் குறித்து ஏற்கும் பக்குவம் இல்லை. கடைசி வரை ஐஐடிக்கு பயில். கிடைக்காவிட்டால் அதுவரை படித்த படிப்பில் ஏதாவது வேறு நல்ல கல்லூரி கிடைக்கும் என்ற கணக்கில் முட்டித்தள்ளுவார்கள்.
பல பெற்றோர்களுக்கு படிப்பறிவே இருக்காது. கற்பூர பிள்கைளாக இருந்தாலும் வாய்ப்பு மறுக்கப்படலாம். கல்வி முன்னேற்றங்கள் தொடர்பான விஷயங்கள் தெரியாமலே தவறிப்போகலாம். இது தவிர ஒற்றைப்பெற்றோர், சிதைந்த குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகள் என நூறு வகை பிரச்னைகள் சமூகத்தில் உள்ளன. எல்லாரும் ஒரே கப்பலில் தான் பயணித்தாகவேண்டிய நிலை.
இதில் ஒருவர் படிப்பு தேவை என்றும் ஒருவர் படிப்புத்தேவை இல்லை என்றும் வாதிடுவது எப்படி அனைவருக்குமான தீர்வாக இருக்க இயலும்?
ஒரு பெண்ணிற்கே ஒரு ஒரு பிரசவமும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பார்கள். அதுபோலத்தான் வாழ்வும். ஒவ்வொரு மனிதரி்ன் வாழ்வும் ஒரு ஒரு வித அனுபவம். அதனை வாழ்ந்துதான் கண்டடைய இயலுமே அன்றி பாடம்போல ஒருவரது பாணியை இன்னொருவருக்கு புகுத்திவிட இயலாது.
ஒரே சூழலை அனைவரும் ஒன்றுபோல கையாள மாட்டார்கள். அனைவருக்கும் சமவாயப்பு என்பது கிடையாது. அனைவருடைய பயாலஜியும் ஒன்றுபோல அல்ல. இவை மூன்றும் சேர்ந்த காம்பினேசன்களில் ஏராளமான ரக மனிதர்கள் தோன்றுவார்கள்
இவர்கள் அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தி காமராசர் படிக்கவில்லை. நீ படிக்காதே என்பது மடத்தனம். படிக்காத அவர்தான் அதன் மதிப்பறிந்து அத்தனை பள்ளிகள் கொண்டு வந்தார்.
அதேவேளையில் கற்றல் குறைபாடு என்றால் பெற்றோர்கள் ஏதோ ஆட்டிசம் உள்ள பிள்ளைகள்தான் என நம்பிக் கொள்கிறார்கள். ஆயிரம் வகை கற்றல் குறைபாடுகள் உண்டு. என் மகளுக்கு அத்தனை விசயங்களும் தெரியும். ஆனால் அவளுக்கு எந்த ஸ்பெலில்லிங்கும் தெரியாது. மிக சிரமப்படுவாள். அவளிடம் உனக்கு திமிர், படி படி, என்றால் அவளது பிடிவாத குணம் அவளை மூர்க்கமாக்குமே தவிர உருப்படவிடாது.
அதேவேளையில் அவளுக்கு அறிவை சோதிக்க வேற எந்த தனிவகை தேர்வு முறைகளும் கிடையாது. கேள்விகளை படிக்கவே தெரியாதவள் என்ன பதில் எழுதுவாள்? முரணாக அவளுக்கு அனைத்து பதில்களும் தெரியும். அதை தெரியவைக்கத்தான் வழியில்லை. இதுபோன்ற பிள்ளைகளை பெற்றோர் உணரவேண்டும். அவர்களுடம் போய் நீட் எழுது, ஐஐடிக்கு படி போன்ற கௌரவ ரக உபதேசங்கள் செய்வது ஆபத்தில் முடியும்.
கல்வி அடிப்படையானது. அத்தியாவசியமானது. அனைவரும் கற்க வேண்டும். கற்கும் முறைகளைத்தான் மாற்ற வேண்டும். கல்வி வியாபாரமவதை, அரசியல்படுத்தப்படுவதை, பிள்ளைகளை இன்வெஸ்மென்ட் போல் கருதி அவர்களுக்கு மன அழுத்தம் தருவதை தவிர்க்க வேண்டும்.
கற்றல் ஒரு அனுபவமாக, இன்பமானதாக, ஒரு விஷயம் புரியும்போது கிடைக்கும் அனுபவத்தை பேரானந்தமாக உணரும் வகையில் அமைய வேண்டும். அதையெல்லாம் விடுத்து பிக்பாசில் பேசப்படும் விசயமாக வைத்திருப்பது, சமூகத்திற்கு, நாட்டிற்கு, அடுத்த தலைமுறைக்கே கேடு.
டாபிக்ஸ்