Benefits of thumbai poo:மழைக்கால நோய், மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் தும்பைப்பூ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Thumbai Poo:மழைக்கால நோய், மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் தும்பைப்பூ!

Benefits of thumbai poo:மழைக்கால நோய், மஞ்சள்காமாலையை குணப்படுத்தும் தும்பைப்பூ!

I Jayachandran HT Tamil
Nov 29, 2022 08:16 PM IST

சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை மருத்துவத்தின் சிகரமாகும்! சிவன் கோயில் வழிபாட்டில் தும்பை பூவுக்கு இன்றும் பெரும் முக்கியத்துவம் உண்டு! தும்பைப் பூவைப் பற்றி சிலாகிக்கப்படும் சில தகவல்களைப் பார்ப்போம்.

தும்பைப் பூ
தும்பைப் பூ

சைனஸ் எனப்படும் பீனிசம் ஏற்பட்டு மூக்கில் ரத்தம் வடிந்தால் தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சம அளவு எடுத்து கசக்கி சாறு பிழிந்து இரண்டு சொட்டு வீதம் காலை, மாலை வேளைகளில் மூக்கின் உள்ளே விட்டு வந்தால் பலன் கிடைக்கும். இல்லையென்றால், ஒரு துணியில் நனைத்து மூக்கில் வைத்து சுவாசிக்கலாம்.

தும்பைப் பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைபாரம், சளி தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம்.

விஷப் பூச்சிகள் கடித்தால் உடனே தும்பை இலை மற்றும் தும்பைப் பூவைக் கொண்டு ஒரு மருந்து செய்து பலன் பெறலாம். இது முதலுதவியாகவோ அல்லது முழு பலன் தரக்கூடியதாகவோகூட இருக்கலாம். கைப்பிடி தும்பை இலை அதே அளவு தும்பைப் பூவை எடுத்து அரைத்து சாறு எடுத்து கால் டம்ளர் அளவு குடிக்க வேண்டும். அதே போல் தும்பை இலை மற்றும் பூவை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். எந்த மாதிரியான விஷப்பூச்சிகள் கடித்தாலும் இதைச் செய்தால் விஷம் முறிந்து விடும். இரவு நேரங்களில் எங்கே போய் தேடுவது என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக எல்லா இடங்களிலும் தானாக வளர்ந்து கிடக்கும் இந்த மூலிகையை முதலில் அடையாளம் காணுங்கள். அதற்கடுத்து அது எந்த இடத்தில் வளர்ந்திருக்கிறது என்பதை தெரிந்துகொண்டால், அவசரத்துக்கு உதவும். பாம்பு கடிக்கும் கூட இதே முறையைப் பின்பற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே சொன்னது போன்று ஒரு முதலுதவியாகக்கூட இதைச் செய்யலாம்.

சொறி, சிரங்கு, நமைச்சல், கொப்புளம் போன்ற தோல் நோயால் அவதிப்படுபவர்கள் தும்பை இலை மற்றும் பூவை சம அளவு எடுத்து கல் உப்பு சேர்த்து மையாக அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும். அதன்பிறகு சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பிரச்சினை சரியாகும். இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்துவந்தால் பலன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலையைக் குணமாக்குவதற்கும் தும்பை பயன் படுத்தப்படுகிறது. தும்பை இலையுடன் கீழாநெல்லி மற்றும் மஞ்சள் கரிசலாங்கன்ணி இலைகளை சம அளவு எடுத்து அரைத்து பாக்கு அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் பலன் கிடைக்கும். அந்த நாட்களில் உப்பு, புளி இல்லாத உணவு உண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தொண்டையில் கட்டியிருக்கும் கோழையை அகற்றுவதற்கு தும்பைப்பூவில் ஒரு மருந்து தயாரித்து கொடுக்கலாம். 25 தும்பைப்பூக்களை அரை டம்ளர் பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொடுத்தால் கோழை அகலும்.

விக்கல் சிலரை படுத்தி எடுத்து விடும். அதற்கு என்னென்னவோ சிகிச்சை மேற்கொண்டும் பலன் தராத நிலையில் தும்பைப்பூ பலன் தரும். தும்பைப் பூவை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் தும்பையின் முழுச் செடியையும் நீர் விட்டு கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் பலன் கிடைக்கும்.

கெட்ட சக்தி அல்லது எதிர்மறை அம்சங்கள் உள்ள இடங்களில் தும்பை வளராமல் துவண்டு விடும்! ஒரு வீட்டில் தும்பை வளர்க்கும் போது நன்கு துளிர்த்து வளர்கிறது என்றால், அங்கு பாசிடிவ் எனர்ஜி சிறப்பாக உள்ளது என அறிந்து கொள்ள முடியும் எனச் சொல்லப்படுவதுண்டு!

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.