Amla Curd Pachadi : புளிப்பு, துவர்ப்பு, காரம் மூன்றும் கலந்த வித்யாசமான சுவையில் மனதை அள்ளும் நெல்லிக்காய் தயிர் பச்சடி
Amla Curd Pachadi : நெல்லிக்காயை நேரடியாக எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார். தயிரின் புளிப்பு, மிளகாயின் காரம், நெல்லிக்காயின் துவர்ப்பு என இந்த பச்சடி நிச்சயம் ஒரு வித்யாசமான சுவையில் இருக்கும்.
நெல்லிக்காயின் நன்மைகள்
முடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். மேலும் உடல் நல பிரச்னைகளை குணப்படுத்தும் வைத்தியங்களிலும் நெல்லிக்காய் பயன்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
உடல் எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் ஜூஸ் பயன் தரும். நெல்லிக்காய் துவர்ப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்னைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக நெல்லிக்காய் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் ரத்த சோகை நீங்கும்.
புற்றுநோய் செல்களை அழிக்கும், குடலியக்கத்துக்கு நல்லது. எடை குறைப்பில் உதவும். பார்வை மேம்படும். அல்சருக்கு மருந்து. ரத்த ஓட்டம் மேம்படும். கல்லீரலுக்கு நல்லது. இதய தசைகளை வலிமையாக்கும்.
நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அதன் துவர்ப்பு சுவை சிலருக்கு பிடிக்காது. ஆனால் நெல்லிக்காயை சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்தால் நா இனிக்கும். எனவே ஒரு சில குழந்தைகள் அதை விரும்புவார்கள்.
நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் – ஒரு கப்
நெல்லிகாய் – 6
தேங்காய் – கால் கப் (துருவியது)
பூண்டு – 10 பல் (தோல் நீக்கி சுத்தம் செய்தது)
பச்சை மிளகாய் – 2 (உங்களின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்)
மல்லித்தழை – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
காய்ந்த வர மிளகாய் – 2
சீரகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் நெல்லிக்காய்களை நன்றாக சுத்தம் செய்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த நெல்லிக்காய்களை ஆறியபின், விதைகளை நீக்கி, அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, பூண்டு ஆகிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரவென்று அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, கெட்டி தயிர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
தாளிக்க கொடுத்துள்ள எண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், வர மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, நெல்லிக்காயில் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.
சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடி இப்போது சாப்பிட தயாராக உள்ளது. இதை நீங்கள் அப்படியே சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம்.
சப்பாத்தி, பராத்தா, பூரிகளுக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அனைத்து வகை பிரியாணிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை விருந்தில் பரிமாற வித்யாசமான ஒன்றாக இருக்கும்.
நெல்லிக்காயை நேரடியாக எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார். தயிரின் புளிப்பு, மிளகாயின் காரம், நெல்லிக்காயின் துவர்ப்பு என இந்த பச்சடி நிச்சயம் ஒரு வித்யாசமான சுவையில் இருக்கும்.
டாபிக்ஸ்