Healthy Recipe: உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள், பீட்ரூட், கேரட்(ABC) ஜூஸ்
உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள், பீட்ரூட், கேரட்(ABC) ஜூஸ் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
உடல் எடை மற்றும் சுருக்கங்களை குறைக்கவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ் குடிக்கலாம். அவற்றின் செய்முறைகள் குறித்து பார்க்கலாம்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட்டில் ஏராளமான தாதுச்சத்துகள், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றை வைத்து ஜூஸ் செய்து தினம் ஒன்றை குடித்துவந்தால் நமது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ABC ஜூஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களை புத்துயிர் பெற செய்து, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன. இது உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமின்று ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமானம், எடை இழப்பு, கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கிறது.
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு பதிலாக இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையே உள்ள நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ABC ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் செய்யத் தேவையானவை-
தோல் நீக்கிய ஆப்பிள் - 1
பீட்ரூட் - ½
நடுத்தர அளவிலான கேரட் - 1
தண்ணீர் - 1 கப்
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் செய்முறை-
முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி தயாராக வைக்கவும்.
அடுத்ததாக ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிளை முதலிலேயே வெட்டி வைத்தால் அவை சீக்கிரம் கருத்து போய்விடும்.
இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை வடிகட்டாமல், சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு வாயு தொந்தரவு ஏற்படலாம். ஆகையால் உங்களுக்கு வாயு பிரச்னைகள் இருந்தால் இந்த ஜூஸ் அரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்