பாதுகாப்பான முதலீடு வாய்ப்பை தரும் இந்திய அஞ்சல் துறையின் ஆர்டி வைப்பு கணக்கு
சிறு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அஞ்சல் அலுவலகத்தில் ஆர்டி கணக்கு தொடங்கி முதலீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தவாறும் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கு உகந்தவாறு இந்திய அஞ்சல் அலுவலகம் தேசிய சேமிப்பு தொடர்ச்சியான வைப்பு கணக்கு சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம் சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு கணக்கு தொடங்கி பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்யலாம்.
இந்தச் சேவையை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு சிறு முதலீட்டாளர்கள் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சிறிய தொகையை முதலீடு செய்வதற்கு உகந்தவாறு ஆர்டி கணக்கை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின்படி முதிலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 100 செலுத்தி கணக்கை தொடங்கலாம். இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள்.
தேசிய சேமிப்பு தொடர்ச்சியான வைப்பு கணக்கு பற்றிய கூடுதல் அம்சங்களை பார்க்கலாம்
இந்தக் கணக்கில் தற்போதைய ஆண்டுக்கான வட்டித் தொகையானது 5.8% (காலாண்டுகளின் கூட்டு) உள்ளது. கடந்த 2020 ஏப்ரல் 1 முதல் இந்த தொகை நடைமுறையில் உள்ளது
வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் மேற்கூறிய வட்டித்தொகைக்கு மாதம்தோறும் முதலீடு செய்துவந்தால், வட்டித்தொகையுடன் சேர்த்து பத்து ஆண்டுகளில் அவருக்கு 16 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்தப் பலனை பெற வேண்டுமானால் மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயம்.
வாடிக்கையாளர்கள் தங்களது முதல் பரிமாற்றத்துக்கான பணத்தை ரொக்கமாகவோ அல்லது செக் மூலமாகவோ செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
இந்தக் கணக்கை தொடங்கியவர்கள் அனைவரும் தங்களுக்கான நாமினியை தேர்வு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளரின் இறப்புக்கு பிறகு அவர் நாமினியாக குறிபிட்ட நபர் கணக்கு தொடங்கிய அஞ்சல் அலுவலகத்தில் கோரிக்கை வைத்து நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
அதேபோல் இந்தக் கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் கணக்கை தொடங்கிய அஞ்சல் அலுவலகத்தில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து நீட்டிப்பு செய்யலாம். இந்த நீட்டிப்பு காலத்தில் கணக்கு தொடங்கியபோது வழங்கப்பட்ட வட்டி தொகையை கடைபிடிக்கப்படும்.
இந்த கணக்கு முழுவதும் முதர்வு அடையாதபோதிலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடித்துக்கொள்ளலாம். இதற்கான படிவத்தை அஞ்சல் அலுவலகத்தில் அளித்து இதனை செய்யலாம்.