Writer Sujatha Death Anniversary: ஸ்ரீரங்கத்து நாயகன் சுஜாதா நினைவு நாள்!
சயின்ஸ் பிக்சன் (அறிவியல் புனைக்கதை) என்ற புதிய பாணி எழுத்துக்களின் முன்னோடி, ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர், அறிவியலை ஊடகம் மூலம் மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்ற பல்வேறு பெருமைகளை கொண்டவர் இந்த ஸ்ரீரங்கத்து நாயகன், சுஜாதா என்னும் ரங்கராஜனின் நினைவு தினம் இன்று.
காவிரியின் கரையில், அரங்கனின் அருளில் திகழும் ஸ்ரீரங்கத்தில் 1935ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தவர். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு. பின்னர் புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பட்டம் பெற்றார். இவரும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரும், இவரும் இங்கு ஒன்றாக படித்தவர்கள். பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் மின்னணு பொறியியல் படித்தார்.
டெல்லியில் மத்திய அரசுப்பணியாற்றியவர். 14 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, பின்னர் பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப்பிரிவிலும் மற்றும் பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றி அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஆனார். ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்தார்.
இன்றைய தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இவை ரங்கராஜனின் சாதனைகள்.
அவருக்கு சுஜாதா என்ற இன்னொரு முகமும் உண்டு. அவருக்கு விருப்பமான பொறியியல் துறையைவிட எழுத்து அவரை வெளி உலகில் அடையாளப்படுத்தியது. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். இவரது தனிப்பட்ட நடை மற்றும் சயின்ஸ் பிக்சன் கதைகள் அறிவியலை மக்களிடம் எளிதாக கொண்டு சென்றவை. சுஜாதா என்றாலே தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் எழுதுபவர் என்ற அடையாளமும் உண்டு. இவரது காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தையே கலக்கலான கதைக்களமாக்கியவர். இந்த தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம், தொழில்நுட்ப புரட்சி மற்றும் அறிவியல் எழுத்து புரட்சிக்கும் போட்டியே நடந்திருக்கும் என்றால் அது மிகையல்ல. ஆனால், காலம் நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற அனுமதியளிக்காது அல்லவா?
அவரது முதல் கதை 1953ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது. அப்போது துவங்கிய எழுத்துப்பணிகள் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிலும் விரவியிருந்தது.
அறிவியலை ஊடகம் மூலமாக கொண்டு சென்றதற்காக அவருக்கு 1993ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பக்கழகம் விருது வழங்கியது. இவிஎம் இயந்திரத்தை உருவாக்க காரணமாக இருந்ததற்காக, அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. அவரது எழுத்துப்பணிக்காக தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
சுஜாதா ஆன கதை
இவரது கதைகள் ரங்கராஜன் என்ற பெயரில் பிரசுரமாகி வந்த காலத்தில் அங்கு ரா.கி.ரங்கராஜன் என்ற மற்றொருவரும் எழுதி வந்ததால், பெயர் குழப்பத்தை தவிர்க்க இவர் சுஜாதா ஆனார். சுஜாதா என்பது இவரது மனைவியின் பெயர். 80ஸ் கிட்ஸ்களின் பேவரிட்டான இவரை நீண்ட நாட்கள் பெண் என்ற கருதியவர் பலர் உண்டு. அறிவியல், கணிப்பொறி, புதினம், சிறுகதை, இலக்கியம், தமிழ்ச் செவ்விலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கவிதை தொகுப்பும் எழுதியுள்ளார். ஆதலினால் காதல் செய்வீர், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என இவரது புத்தகங்களை குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம்.
டாபிக்ஸ்