Vijayakanth: ‘அவதான் எனக்கு கண் கண்ட தெய்வம்.. பிரேமா சொன்ன ஒத்த வார்த்தைக்காகத்தான்’ - உருகிய விஜயகாந்த்!
Vijayakanth: என்னுடைய மனைவி எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன். எல்லோரும் கணவன் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, எனக்கு மனைவி தான் எனக்கு கண் கண்ட தெய்வம். - விஜயகாந்த்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு காலமானார். அவர் இறந்த செய்தி அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது என்று சொல்லலாம். அவரது நோய்மை காலங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொண்டது அவருடைய மனைவி பிரேமலதா என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னதாக விஜயகாந்த் கேப்டன் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மனைவி பற்றியும் தன்னுடைய குழந்தைகள் பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே
அம்மாவின் அன்பு
அவர் பேசும்போது," எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே அம்மாவின் அன்பு கிடைத்ததே கிடையாது. அப்பா அன்பாக இருப்பார். ஆனால் அவரை அடிக்கடி பார்க்க முடியாது. அதையெல்லாம் நான் பார்த்துவிட்டு, இன்று நான் என் பிள்ளைகளை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு அம்மாவின் அன்பு அதிகமாக கிடைப்பது தெரிகிறது. அதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது
என்னுடைய மனைவி எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று சொல்வேன். எல்லோரும் கணவன் தான் கண் கண்ட தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, எனக்கு மனைவி தான் எனக்கு கண் கண்ட தெய்வம். என்னையும் என்னுடைய குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்வது அவர்தான். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
கண்பட்டு விடும்
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய மகன்கள் சரியாக படிக்க வில்லை என்றால், அவர்களை போட்டு வெளுத்து விடுவேன். அப்போது என்னுடைய மனைவி ஒரு வார்த்தை சொன்னார். நீங்கள் ஷூட்டிங் இருக்கிறது என்று கூறி, அடிக்கடி சென்று விடுகிறீர்கள்; அப்படி இருக்கும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் பொழுது குழந்தைகளை அடித்தால் அது சரியாக இருக்குமா என்று கேட்டார். அதன் பின்னர் அவர்களை அடிப்பதை அப்படியே நிறுத்தி விட்டேன். உண்மையில் குழந்தைகள் பிறந்து ஆறு ஏழு வயது ஆகும் வரை, அவர் உடன் இருக்கும் காலங்களை மறக்கவே முடியாது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை பொதுவெளியில் சொன்னால், பிரேமலதா தயவு செய்து யாராவது கண் பட்டுவிடும் அப்படி சொல்லாதீர்கள் என்று சொல்வார். ஆனால், என்னை பொருத்தவரை இது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று சொல்கிறேன்.” என்று பேசி இருந்தார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக வாழ்ந்த எம்.ஜி.ஆர், கொடை வள்ளல் எனப் பலராலும் போற்றப்படுகிறார். அதற்குப் பிறகு இன்றுவரை சினிமாவில் மட்டுமல்லாது பொதுமக்களிடத்திலும் கொடை வள்ளலாக வாழ்ந்தவர், நடிகர் விஜயகாந்த். கேப்டன் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் அலுவலகத்துக்குச் சென்றால், எளியவர்கள் யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்னும் நிலையை உருவாக்கி வைத்தார்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக திரையுலகில் ஜொலித்த விஜயகாந்த் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட் ராஜ், கேப்டன் பிரபாகரன் மாநகர காவல், வல்லரசு, வானத்தைப்போல, ரமணா ஆகியப் படங்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. காவல் துறை அதிகாரி வேடமென்றாலே, அது விஜயகாந்த் என்னும் அளவுக்கு நிறையப் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார், விஜயகாந்த்.
இதுவரை இரண்டு தென்னிந்தியாவுக்கான ஃபிலிம்பேர் விருதையும், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்