தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: “நீட் தேர்வால் பாதிப்பு இருக்கு.. இது சத்தியமான உண்மை” - சாட்டையை சுழற்றிய விஜய்!

Thalapathy Vijay: “நீட் தேர்வால் பாதிப்பு இருக்கு.. இது சத்தியமான உண்மை” - சாட்டையை சுழற்றிய விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 03, 2024 10:40 AM IST

Thalapathy Vijay: நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை. நீட் விலக்கே நிரந்தரத் தேர்வு. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் - தவெக தலைவர் விஜய்

Thalapathy Vijay: “நீட்  தேர்வால் பாதிப்பு இருக்கு.. இது சத்தியமான உண்மை” - சாட்டையை சுழற்றிய விஜய்!
Thalapathy Vijay: “நீட் தேர்வால் பாதிப்பு இருக்கு.. இது சத்தியமான உண்மை” - சாட்டையை சுழற்றிய விஜய்!

Thalapathy Vijay: 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இரண்டாவது கட்டமாக பரிசுத் தொகையினை வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்,"நீட் தேர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகவும் அவர் பேசியிருக்கிறார். 

அவர் பேசும்போது, "நான் இன்று எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இங்கு நான் அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருந்தால், அது அவ்வளவு சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது. 

நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது.

நீங்களே என்னவென்று கனத்திருப்பீர்கள். ஆமாம் நான் நீட் தேர்வை பற்றி தான் பேச இருக்கிறேன். நீட் தேர்வை பொருத்தவரை, தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள், குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய ஏழை எளிய மாணவ மாணவிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அந்த தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் சத்தியமான உண்மை.

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்று பிரச்சினைகள்

நீட்டைப் பொறுத்தவரை, நான் அதில் மூன்று பிரச்சினைகளை பார்க்கிறேன். நீட் தேர்வானது, மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, கல்வியானது மாநில பட்டியலில் தான் இருந்தது. ஒன்றிய  அரசு வந்த பின்னர்தான், அது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்போதுதான் அந்தப் பிரச்சினையானது தொடங்கியது. அதன் பின்னர் ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்ற பிரச்சினை வந்து இருக்கிறது. இது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானதாக இருப்பதாக நான் பார்க்கிறேன். 

ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு அந்த பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டும் கேட்கவில்லை. அதில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர பலவீனம் கிடையாது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தேசிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தேர்வு வைத்தால் என்ன நியாயம்?  

மாணவர்கள் பாதிப்பு அடைகிறார்கள்

குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு இது எப்படிப்பட்ட ஒரு கடினமான விஷயமாக இருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில், சில குளறுபடிகள் நடந்ததாக எல்லாம் நாம் செய்திகளை பார்த்தோம். அதன் பின்னர் நீட் தேர்வின் மீது உள்ள நம்பகத்தன்மையே மக்களிடம் இல்லாமல் ஆகிவிட்டது. 

நாடு முழுக்கவே அந்த நீட் தேர்வு தேவையில்லை என்பதே இந்த செய்திகளின் வழியாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக இருக்கிறது. சரி இதற்கு என்ன தான் தீர்வு? நீட் விலக்குதான் இதற்கான ஒரே தீர்வு. நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். 

நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு காலதாமதம் செய்வதாக எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு தமிழக மாணவ மாணவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கு தொடர்பான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். சரி இதற்கு என்னதான் தீர்வு  என்று கேட்டால், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல் இருக்கும் என்றால், அதற்கான இடைக்கால தீர்வாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை  திருத்தி, சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். இப்போதுள்ள பொது பட்டியலில் இருக்கக்கூடிய பிரச்சினை என்னவென்றால், அதில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் இருப்பது போல தெரிந்தாலும், அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது தவிர்க்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும். 

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால், அவர்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும். இது என்னுடைய தனிப்பட்ட ஆலோசனை தான். இது உடனே நடக்குமா? என்பது தெரியாது. அப்படியே நடந்தாலும் அதை நடக்க விட மாட்டார்கள் என்பதும் எனக்கு தெரியும்." என்று பேசினார்