Touring talkies: சாதிகளை கடந்த சமத்துவத்தை போற்றிய டூரிங் டாக்கீஸ் வரலாறு இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Touring Talkies: சாதிகளை கடந்த சமத்துவத்தை போற்றிய டூரிங் டாக்கீஸ் வரலாறு இதோ!

Touring talkies: சாதிகளை கடந்த சமத்துவத்தை போற்றிய டூரிங் டாக்கீஸ் வரலாறு இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 12, 2023 07:43 AM IST

பெரிய கீற்று கொட்டகை. நல்ல ஆற்று மணல் பரப்பிய தரையில் அமர்ந்து படம் பார்க்கும் சுகமே தனி என இப்போது நம் தாத்தாக்கள் சிலாகிக்கின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தைப் பொறுத்தவரை அரிதாரம் பூசியவர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற கேள்வி அவ்வப்போது எழுகிறது என்றால் காரணம் இல்லாமல் இல்லை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என 4 முதல்வர்கள் கலைத்துறை சார்ந்தவர்கள். ஆனால் அரசியலுக்கு வந்ததால் மக்கள் மத்தியில் பிரபலமானார்களா? இல்லை சினிமாவால் பிரபலமானார்களா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு இவர்களது வாழ்வில் கலையும் அரசியலும் பிணைந்திருந்தது. ஆனால் இவர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டியது எது என்றால் டூரிங் டாக்கீஸ் என்பதில் ஐயம் இல்லை தான்.

அதுஎன்ன டூரிங்டாக்கீஸ்

திரைத்துறை தொடங்கிய ஆதிகாலத்தில் வெறும் படங்கள் மட்டும்தான் தெரியும் அதை பெரும்பாலானோர் ஊமைப்படம் என்பர். இதையடுத்து சார்லி சாப்பிளின் படங்கள் பிரசித்து பெற்ற நாட்களில் படத்தோடு சேர்த்து பின்னணி இசையும் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் அனைத்து துறைகளையும் போல கலைத்துறையிலும் தொழில் நுட்பம் நுழையத் தொடங்கியது. அதில் படங்களோடு வசனங்களும் பின்னணி இசையும் சேர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. அன்றைய காலத்தில் அதை பேசும் படம் அதாவது டாக்கீஸ் (TALKIES) என்று அழைக்கத் தொடங்கினர். அன்றைய நாட்களில் சினிமாவில் வரும் மனிதர்கள் தங்களை நோக்கி நேரடியாக பேசுகின்றனர் என்பது பொதுமக்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தரும் வகையில் இருந்தது. ஆனால் திரையரங்கங்கள் பரவலாக இல்லாத அந்த நாட்களில் கிராமங்களில் திரையரங்கங்கள் என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. இந்த குறையை போக்க ஒரு பிரம்மாண்ட திரையையும் கூடாரத்தையும் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று கொட்டகை போட்டு படம் காட்டும் வழக்கம் உருவானது. இது அன்றைய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஊர் ஊரா டூர் போயி டாக்கீஸ் அப்டின்ற பேசும் படத்த காட்டினதாலதான் அந்த நகரும் திரையரங்கங்களை டூரிங் டாக்கீஸ்னு சொல்ல ஆரம்பிச்சாங்க

குட்டிவியாபாரம்

குறிப்பாக திருவிழாக்கள், முக்கிய விஷேசங்கள் இப்படியான நாட்களில் ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் நான்கு கம்புகளை நட்டு வைத்து அதன் மையத்தில் ஒரு எட்டு முழ அளவில் வேட்டி கட்டி விட்டுட்டா போதும்... சின்னதாக புரோஜக்டர் இயந்திரத்தை வச்சி இரண்டு மூன்று படங்களை விடிய விடிய ஓட்டி கொண்டாடுவார்கள். இந்த திறந்த வெளி அரங்கில் திரைக்கு இரண்டு பக்கமும் அமர்ந்து கொண்டு பார்த்து மகிழ்வார்கள். பெரும் பாலும் இலவசம்தான், ஆகும் செலவை விழா கமிட்டி பார்த்து கொள்ளும் வகையில் இருந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரிய கீற்று கொட்டகை. நல்ல ஆற்று மணல் பரப்பிய தரையில் அமர்ந்து படம் பார்க்கும் சுகமே தனி என இப்போது நம் தாத்தாக்கள் சிலாகிக்கின்றனர். படம் போரடித்தாலும் மணலில் வீடு கட்டி விளையாடலாம். ஸ்டேட்டஸ் விரும்பும் வசதியானவர்களுக்குச் சாதாரண பெஞ்ச். பேக் பெஞ்ச் (,பேக் பெஞ்ச் என்றால் முதுகு சாய்ந்து கொள்ள பின் புற பலகை பொருத்தி இருப்பார்கள்) மற்றபடி வீட்டில் இருந்து பாய், ஜமக்காளம் சகிதமாக இடம் போட தயாராகி விடுவார்கள் மக்கள்.

இன்று 50 வயதை தாண்டிய எல்லோருக்கும் டூரிங் டாக்கீஸ் என்ற வார்ததையை கேட்டாலே சிலாகித்து விடுகிறார்கள் திரையரங்கு உள்ளே ஆண்கள்... பெண்களுக்கு இடையே தடுப்பு சுவர் கட்டி பிரித்து விடுவார்கள். சினிமாவுக்கு போறது அன்றைய நாட்களில் திருவிழாவுக்கு போற மாதிரி. புடிச்ச பொண்ணு தியேட்டர் போதுனு தெரிந்து விட்டால் பசங்களும் கிளம்பி விடுவார்களாம். ஆனால் பேச முடியாது. பார்க்க முடியாது. சுவர் தான் பிரித்து விடுமே.

இந்த டூரிங் டாக்கிஸ் ன்னு சொல்ற திரையரங்கு பக்கவாட்டில் திறந்தே இருப்பதால் மதிய காட்சிகள்... அதாவது மாட்னி காட்சிகள் நடக்காது. சில முக்கிய நடிகர் படங்களை ஓட்டும் போது இரண்டு பக்கமும் கெட்டியாக உள்ள துணிகளை இழுத்து பிடித்து கட்டி உள்ளே சூரிய வெளிச்சம் வராமல் இருட்டாக்கி சிறப்பு மாட்னி காட்சிகள் நடக்கும்

மழை காலங்களில் தான் பெரிய சிரமம். உள்ளே ஒழுக ஆரம்பித்து காட்சிகள் ரத்து செய்து விடுவார்கள்... சில வசதி படைத்த திரையரங்கு உரிமையாளர்கள் கீற்றை பிரித்து விட்டு சிமிண்ட் அட்டைகளை வைத்து உருவாக்கி விடுவார்கள்

டூரிங் டாக்கீஸ் ஸ்பெஷல்

இன்றைய காலகட்டங்களில் சினிமா தியேட்டர் என்பது ஒரு ஏழைக்குடும்பங்கள் போகவே முடியாத ஒரு சூழலைத்தான் உருவாக்கி உள்ளது. அதேபோல் இன்றைய விலைவாசி உயர்வால் 4 பேர் கொண்ட நடுத்தர குடும்பம் கூட மாதம் ஒன்றிற்கு ஒரு படத்திற்கு செல்வதானால் கூட குறைந்த பட்சம் 1500 ரூபாய் முதல் 2000ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி பார்த்தால் நவ நாகரீக உலகில் வாழ்கிறோம் என்று சொல்லும் நாம் தான் நம் சாமானிய சக மனிதனை சினிமா தியேட்டரில் இருந்து தள்ளித்தான் வைத்துள்ளோம். ஆனால் டூரிங் டாக்கீஸ்களோ அன்றைய காலகட்டத்தில் இருந்த தீண்டாமையை கூட ஓரளவு குறைத்தது என்று சொல்லலாம். ஆம் அங்கு சாதி, மதம், இனம் என்ற கட்டுப்பாடுகளை கடந்து டூரிங் டாக்கீஸில் ஓரளவு சமத்துவம் இருந்தது என்றால் மிகையல்ல. அவ்வப்போது வரும் முறுக்கு, சீடை, என தேவையானதை வாங்கி படுத்துக்கொண்டே படம் பார்த்தவாறு நொறுக்கி இருக்கிறார்கள்.

ஆனால் இன்று பிடித்த நடிகரின் படம் வருகிறது என்றால் விடிய விடிய தியேட்டர்வாசலில் காத்திருந்து பால் அபிஷேகம் கட்டவுட் செலவுகள் என்று பெருங்கூட்டம் தங்கள் வேலையையும் கெடுத்து பணத்தையும் கொட்டி படம் பார்க்கிறது. ஆனால்

ஏசி இல்லை, சவுண்ட் ட்ராக் இல்லை, டெக்னாலஜி இல்லை, புஷ்பேக் சீட் இல்லை, 70 எம் எம் இல்லை, 3 டி இல்லை, VFX எஃபெக்ட் இல்லை, 7.1 டால்பி சிஸ்டம் இல்லை, இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை அதுமட்டுமா, அம்பது பைசா டிக்கெட், அஞ்சு பைசா முறுக்கு, அட்டகாசமா அருமையா, ஆனந்தமா, ஆர்ப்பாட்டமா இப்படியும் படம் பார்த்தோம் ப்பா என்று டூரிங்க டாக்கீஸீல் படம் பார்த்த நம் தாத்தா பாட்டிகள் இன்றும் சிலாகிக்கின்றனர். ஆனால் இன்றளவில் சினிமாவிற்கே போக முடியாதவர்கள் டூரிங்டாக்கீஸாவது இருந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால் எங்கும் மால்களிலும் மல்டிபிளக் தியேட்டர்களிலும் மட்டும் உள்ள காணக்கிடைக்கும் இன்றை சினிமா உலகம் டூரிங்க டாக்கீஸ்ன் கொடுத்திருந்த சமத்துவத்தை அசமத்துவம் ஆக்கி உள்ளது என்பதே உண்மை

குற்றம்

இன்று கடத்தல், வங்கி கொள்ளை போன்ற குற்றங்களில் விசாரித்தால் தன் ஆஸ்தான நடிகரின் திரைப்படத்தை பார்த்தே அந்த முயற்சியில் ஈடுபட்டேன் என்று குற்றவாளிகள் சொல்லும் அளவிற்கு சூழல் உள்ளது.

ஆனால் அன்றைய நாட்களில் கொட்டகை வந்த பிறகு நாட்டில் குற்றம் குறைஞ்சிக்கு என்று டூரிங் டாக்கீஸீன் பெருமையை இளையராஜா குரலில் கேட்கும் போது இதுவரை பார்க்காத அந்த கொட்கையை நாமும் பார்த்து விட மாட்டோமா என்று தோன்றுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.