தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  200 எபிசோடு கடந்த பிரியமான தோழியின் ரகசியம் இதுதான் - ரகசியத்தை உடைத்த ஜெ.தீபா

200 எபிசோடு கடந்த பிரியமான தோழியின் ரகசியம் இதுதான் - ரகசியத்தை உடைத்த ஜெ.தீபா

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2023 09:49 AM IST

சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல் 200 எபிசோடுகளை கடந்த நிலையில் திரைக்கதை ஆசிரியர் தீபா அதன் ரகசியங்களை உடைத்துள்ளார்.

பிரியமான தோழி  கோப்புபடம்
பிரியமான தோழி கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெ.தீபா திரைக்கதை எழுதிய பிரியமான தோழி நாடகம் 200ஆவது எபிசோடை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. கே ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் உள்ளிட்டவர்களின் மனம் கவர்ந்த நடிப்பில் ஒளிபரப்பாகும் பிரியமான தோழி நாடகம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரியமான தோழி குழுவினர்
பிரியமான தோழி குழுவினர் (Deepa Janakiraman ( Facebook ))

இந்த நிலையில் பிரியமான தோழி 200 எபிசோடுகளை கடந்திருப்பது குழுவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாடகத்தை எழுதிய தீபா ஜானகிராமன் தனது முகநூலில் ரசிகர்களிடயே தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது,"சன் தொலைகாட்சியில் நான் திரைக்கதை எழுதுகிற சீரியல் பிரியமான தோழிக்கு இன்று 200வது எபிசோட். படப்பிடிப்புத் தளத்தில் இப்போது தான் கொண்டாடினோம். பல வகைகளில் இந்த சீரியல் எனக்கு முக்கியமானது.

சீரியல் என்றாலே பலருக்கும் ஒவ்வாமை உண்டு என்பது தெரியும். ஆனால் இன்று அவற்றின் முகங்கள் மெதுவாக மாறிக்கொண்டு வருவதைத் தொடர்ந்து அதைப் பார்த்து வருபவர்களால் புரிந்து கொள்ள முடியும். பிரியமான தோழியுமே கூட ஒரு பரிட்சார்த்த முயற்சியிலான கதை தான். இதை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் தொடங்கினோம். இன்றைக்கு வெற்றிகரமான சீரியலாகியிருக்கிறது.

இதற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. திரைக்குப் பின்னணியில் ஐந்து பெண்கள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்து வெளிவருகிற சீரியல். பெண்களுக்காகவே மெகா சீரியல் என்றபோதிலும் பெண்களின் பங்கு கிரியேட்டிவிட்டி சார்ந்து குறைவாகவே இருந்தது. இப்போது சில வருடங்களாக அது மாறவும் தொடங்கியிருக்கிறது. அதிகமும் பெண்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். நல்ல மாற்றம் இது.

பிரியமான தோழி (200 எபிசோடு கொண்டாட்டம்)
பிரியமான தோழி (200 எபிசோடு கொண்டாட்டம்) (Deepa Janakiraman ( Facebook ))

பெண்கள் எழுதத் தொடங்கிய பின் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தனியாக எழுத வேண்டும். பிரியமான தோழியைப் பொறுத்தவரை நான் திரைக்கதை எழுதுகிறேன். எழுத்தாளர் தமயந்தி வசனம் எழுதுகிறார். சேனலின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஒரு பெண். இந்த சீரியலின் தலைமை பொறுப்பு திரு. சுஜாதா கோபால் அவர்கள் வசம் உள்ளது. கதையைத் தீர்மானித்து ஒத்திசைவு தரும் பொறுப்பிலும் பெண் தலைமையே. இப்படி ஐந்து பேரின் மேற்பார்வையில் வெளிவருகிற ஒன்றாக இருக்கிறது. இதனால் சிலவற்றை உடைத்து வெளிப்படையாகப் பேச முடிகிறது. “என்னல்லாம் பேசணும்னு தோணுதோ பேசுங்க” என்று எப்போதுமே சொல்வார்கள். இது அவசியமாகக் குறிப்பிட வேண்டியது.

ஐவரின் அனுபவங்களும், எங்களைச் சேர்ந்தவர்களின் கதைகளும் பேசப்படும்போது இன்னும் சொல்ல எத்தனை எத்தனை இருக்கின்றன என நாங்கள் வியந்ததுண்டு. பார்வையாளர்கள் புரிந்து கொள்கிறார்கள். வரவேற்பு தருகிறார்கள், உரையாடுகிறார்கள். ‘எங்கள் கதையை சொல்லியிருக்கிறீர்கள்’ என்கிறார்கள்.

படைப்பு சுதந்திரத்தில் தலையிடாதவர் தயாரிப்பாளர் திரு குருபரன். அதே போல் திறந்த மனதுடன் பாராட்டவும் விமர்சிக்கவும் செய்கிற இதன் இயக்குநர் திரு ஓ.என் ரத்னம் இந்தப் பயணத்தில் குறிப்பிடப்படவேண்டியவர்கள். போலவே , உணர்ந்து உள்வாங்கி நடிக்கிற அத்தனைக் கலைஞர்களும்..

எழுத்து எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நாங்கள் பிரியமான தோழியையும் சொல்வோம்.

நிச்சயமாக சந்தோஷமாக இருக்கிறது.." என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

IPL_Entry_Point