Thalapathy Vijay: ‘விஜயால் விசிகவிற்கு பாதிப்பு.. ஆனால் பாஜக..’ - கஸ்தூரி பேட்டி!-thirumavalavan vck is affected by thalapathy vijay tamizhaga vetri kazhagam says kasturi shankar - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: ‘விஜயால் விசிகவிற்கு பாதிப்பு.. ஆனால் பாஜக..’ - கஸ்தூரி பேட்டி!

Thalapathy Vijay: ‘விஜயால் விசிகவிற்கு பாதிப்பு.. ஆனால் பாஜக..’ - கஸ்தூரி பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2024 06:44 PM IST

இப்படி எல்லாவற்றையும் அவர் சொல்லும் பட்சத்தில் விஜய் எந்த கொள்கையை கொண்டவர் என்ற சந்தேகம் வருகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இது குறித்து நியூஸ் 18 சேனலுக்கு அவர் பேசும் போது, “

விஜயின் அறிக்கையில் காங்கிரஸ் தேசிய அளவில் பேசும் விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறேன். அறிக்கையில் காமராஜ், அம்பேத்கர், பெரியார் ஆகிய மூன்று பேர்களையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் பெரியார் திராவிட சிந்தனை கொண்டவர்களாக இருந்த போதும், வரலாறை பார்க்கும் போது அவர்கள் எல்லோரும் காங்கிரஸ் தலைவர்கள் ஆவர். மேலும் அறிக்கையில், சாதி பேதமற்ற சமத்துவமான ஆட்சி அமையும் என்று கூறியிருக்கிறார்.

இப்படி எல்லாவற்றையும் அவர் சொல்லும் பட்சத்தில் விஜய் எந்த கொள்கையை கொண்டவர் என்ற சந்தேகம் வருகிறது. ஒரு பக்கம் பார்க்கும் போது அவர் காங்கிரஸ் போல தெரிகிறது. அவருடைய ஓட்டு வங்கி விசிகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

அவர் திமுகவையும் எதிர்ப்போம். பாஜவையும் எதிர்ப்போம் என்கிறார். அப்படியானால் இவர் நாம் தமிழர் கட்சி போல செயல்படுவாரா? என்ற கேள்வியும் வருகிறது. இறுதியாக பார்க்கும் போது அவர் கட்சியால், பாதிக்கப்படாத ஒரே கட்சி பாஜகதான். காரணம் விஜய் பாஜகவிற்கு எதிரானவர்களின் ஓட்டுகளைதான் பிரிக்கப்பார்க்கிறார்.” என்று பேசினார். 

விஜய் வெளியிட்ட அறிக்கை இங்கே!

அதில் அவர், “அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.

"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர, ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற ("பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" )

பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய், தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

"எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மையப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு, ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாகசெயல்படுத்தப்படும்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே, தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.

நன்றி.

இப்படிக்கு உங்கள் விஜய்

தமிழக வெற்றி கழகம்

தலைவர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.