Tamizhaga Vetri Kazhagam: ‘புயலுக்கு பின் அமைதி..கெத்தா.. சந்தோஷமா..மாநாட்டில் மொத்தத்தையும் இறக்குறேன்’ - விஜய் பேச்சு!
Tamizhaga Vetri Kazhagam: நம்முடைய முதல் மாநில மாநாட்டிற்கான அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. - விஜய் பேச்சு!
தன்னுடைய கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அந்தக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அலுவலகத்தில் கொடியேற்றி வைத்த நடிகர் விஜய் மேடையில் பேசியதாவது, “இன்றைய நாள் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி, நம்முடைய கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றிலிருந்தே ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
முதல் மாநாடு எப்போது?
ஆம், நம்முடைய முதல் மாநில மாநாட்டிற்கான அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அது எங்கு எப்போது நடக்கும் உள்ளிட்ட விவரங்களை நான் கூடிய சீக்கிரமே அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் ஆகிய உங்கள் முன்னரும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களாகிய அவர்கள் முன்னரும் சரி, இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிகவும் சந்தோஷம். இனி வரும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை நாம் தயார் படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் உயர்வுக்காகவும், நாமெல்லாம் செயல்பட வேண்டும். இணைந்து உழைக்க வேண்டும்.
புயலுக்குப் பின் அமைதி
புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் என்பது போல, நம்முடைய கொடிக்குப் பின்னரும் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. அந்த வரலாற்றுக் குறிப்பை நாம் நடத்த இருக்கும் மாநாட்டில் நான் விளக்கிச் சொல்கிறேன். அந்த மாநாட்டில் நம்முடைய கொள்கைகள் என்ன, நம்முடைய செயல் திட்டங்கள் என்ன உள்ளிட்டவை குறித்தும் நான் அறிவிப்பேன். அதுவரைக்கும் சந்தோஷமாக, கெத்தாக நாம் இதை ஏற்றி கொண்டாடுவோம்.
இதை நான் ஒரு கட்சி கொடியாக மட்டும் பார்க்கவில்லை. நாம் இதை தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான ஒரு கொடியாக பார்க்கிறேன். இதை உங்கள் உள்ளத்தில், உங்கள் இல்லத்தில் நான் சொல்லாமலேயே நீங்கள் ஏற்றுவீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் அதற்கான முறையான அனுமதி அனைத்தையும் வாங்கிவிட்டு, விதிமுறைகளை பின்பற்றி அனைவரிடமும் தோழமை பாராட்டி, இதை நாம் ஏற்றிக் கொண்டாடுவோம். அதுவரைக்கும் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்” இவ்வாறு அதில் அவர் பேசினார்.
முன்னதாக, 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணிக்கும் நடிகர் விஜய் படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையே தான் அரசியலிலும் களமிறங்க இருக்கிறேன் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த நடிகர் விஜய், பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
அதன் வழியாக பல்வேறு நற்பணிகளை செய்து வந்த அவர், கடந்த 2022-ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாகசான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.
இதற்கிடையே,சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் தலைவர் 'தளபதி' விஜய் அவர்கள் இன்று(22-08-2024)கழகக் கொடியை அறிமுகம் செய்து, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்