“அவ்வளவு அழுத்தம்.. அப்பா இதனால்தான் இறந்து போனார்” -மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த சிவகார்த்திகேயன்
‘அமரன்’ திரைப்படத்தின் புரோமோஷனில் தன்னுடைய அப்பா இறந்த காரணத்தை சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
‘அமரன்’ படத்தில் இடம் பெற்ற முகுந்த் கதாபாத்திரத்திற்கும், தன்னுடைய அப்பாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
அப்பா இருக்கிறார்.
இது குறித்து பேசும் போது, “இந்தக்கதையை கேட்கும் பொழுது முகுந்திற்கும், என்னுடைய அப்பாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. படம் வந்ததற்குப் பிறகு அது எந்தெந்த இடங்கள் என்பதை என்னால் சொல்ல முடியும் இப்போது அதை என்னால் சொல்ல முடியாது. அதுவும் இந்தப்படத்தை செய்வதற்கான முக்கியமான காரணம் என்று சொல்லலாம்.
இந்தப்படத்தின் கதையை ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் சொன்ன அடுத்த நாளே ஓகே சொல்லிவிட்டேன். அதை சொல்லும் பொழுதே இந்த படம் நாம் இயல்பாக ஷூட்டிங் சென்று, படப்பிடிப்பு நடத்திவிட்டு வருவது போல இருக்காது என்பதை நான் கணித்து விட்டேன். எனக்கென்று சில நடிப்பு வகை இருக்கிறது. அதை எல்லாம் அப்படியே ஓரம் வைத்துவிட்டு, வேறொரு ஆளாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தக் கதை என்னை தள்ளியது.
இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் உத்வேகம் தரக்கூடிய படமாக இருக்கும். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும், அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த படம் இருக்கும். அந்த உத்வேகம் கதையைக் கேட்கும் பொழுது எனக்கு கிடைத்தது.
உடையை உடுத்திய போது வந்த கெத்து
மிலிட்டரி உடையை அணிந்து நடிக்க வேண்டும் என்ற அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அதற்கான தயார்படுத்தலை நாங்கள் மிக முன்னமே ஆரம்பித்து விட்டோம். எனக்கு டயட், ஒர்க் அவுட் போன்ற விஷயங்கள் எல்லாம் பெரிதாக பழக்கம் கிடையாது.
இந்த கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் படத்தின் போட்டோ, புட்டேஜ் எல்லாவற்றையும் பார்ப்பார் என்ற பயம் எனக்கு இருந்தது. அவர் இதுவரை என்னுடைய படங்களை பார்த்திருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை.. ஆனால் இந்த படத்தை அவர் நிச்சயம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. கமல்ஹாசன் சார் எதை செய்தாலும் மிகச் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.
இன்னொரு விஷயம், இந்த படத்தை ராணுவ அதிகாரிகள் பலர் பார்ப்பார்கள். அந்த பயமும் எனக்குள் உள்ளிருந்தது. முதன்முறையாக அந்த ராணுவ உடையை போட்டுக் கொண்டு நின்ற பொழுது, செம கெத்தாக இருந்தது. ஸ்கிரீனில் நான் வரும் பொழுது, அதைப்பார்த்து ஆடியன்ஸ் கைதட்டுவதை பார்க்கும் பொழுது நாமும் ஹீரோவாகிவிட்டோம் என்று தோன்றும். ஆனால் ராணுவ உடையை அணிந்த மறுகணமே நான் ஹீரோ என்று எனக்குத் தோன்றியது. டீசரில் நீங்கள் பார்க்கக்கூடிய ‘ Who Are We’ ஷாட்டை எடுக்கும் பொழுது சுற்றி இருந்த ராணுவ வீரர்கள்அனைவரும் கையை தட்டினர்.
முகுந்தின் மனைவியை, குழந்தையைப் பார்க்கும்போது எனது அம்மாவைப் பார்ப்பதைப் போலவும், அக்காவைப் பார்ப்பதைப் போலவும் இருந்தது. என்னுடைய அப்பாவும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இறந்துபோனார். ஆனால், என்னுடைய அப்பா போருக்குச் செல்லவில்லை, சண்டையும் போடவில்லை. வேலை அழுத்தத்தினால்தான் இறந்துபோனார்.
அப்பா இறந்த பிறகு எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. எனது அப்பா இறக்கும்போது அவருக்கு வயது 50. அதேபோல் முகுந்த் அவர்கள் இறந்தபோது இந்துவுக்கு வயது 30. எந்த கஷ்டத்தை வேண்டுமானாலும் சமாளித்துவிடலாம், ஆனால் ஒருவர் இல்லை எனும் கஷ்டத்தை சமாளிக்கவே முடியாது. நான் இந்துவிடம் அதிகம் பேசவில்லை. அவரிடம் இருக்கும் சில குணாதிசயங்களை எனது வாழ்க்கைக்கு எடுத்துக்கொண்டேன். இந்தப் படத்தை எனது அம்மாவுக்கும் அக்காவுக்கும் காட்ட காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்