Hari Priya: ‘யார் அந்த நாலு பேர்? அவனுக்காக வாழ முடியாது’ -ஹரிப்ரியா ‘நச்’!
மீடியாவில் நிரந்த நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது. இது நான் கற்றுக் கொண்ட விசயம்
தொகுப்பாளராக, நடிகையாக வலம் வரும் ஹரிப்ரியா, சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:
‘‘நடித்துக் கொண்டே இருப்பதால், கல்லூரிக்கு தினமும் போக வாய்ப்பில்லாமல் போனது. எப்போதுமே, தேர்வுக்கு தான் நான் கல்லூரி சென்றிருக்கிறேன். பி.ஏ., சைக்கலாஜி முடித்துவிட்டேன். டிப்ளமோ விஷூவல் கம்யூனிகேசன், எம்.ஏ., நடனம் ஆகியவை முடித்து விட்டேன்.
நான் பாதுகாப்பாக இருப்பதற்கு தான், பி.ஏ., சைக்கலாஜி படித்தேன். யாராவது ஒருவர் என் அருகில் அமர்ந்தால், அவர்களின் பிரச்னையை என்னிடம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அது என்னவென்று தெரியவில்லை. எல்லா இடத்திலும் இதை சந்திக்கிறேன். ஆனால் அதை கேட்க எனக்கு பிடிக்கும்.
பொதுவாகவே என் மூஞ்சியை பார்த்தால் புலம்ப வேண்டும் என்று மற்றவர்களுக்கு தோன்றுகிறது. பி.ஏ., சைக்கலாஜி முடித்ததால் அவர்களுக்கு என்னால் தீர்வு சொல்ல முடிகிறது. என் திறமைகள், என்னை விட என் அம்மாவிற்கு தெரிந்திருந்தது. அவர் தான் எனக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.
மீடியாவில் நிரந்த நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது. இது நான் கற்றுக் கொண்ட விசயம். எல்லாரையும் என் நண்பர்களாக தான் பார்க்கிறேன். வாழ்க்கையில் நல்லது கெட்டது எல்லாமே இருக்கும். எப்போதுமே வாழ்க்கை பாசிட்டிவா இருக்காது.
என்னுடைய அனுபவங்கள் தான், என்னை எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை தந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாலும் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. அழலாம், சிரிக்கலாம். சோஷியல் மீடியாவில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. நல்லதை மட்டும் நாம் எடுக்கலாம்.
சோஷியல் மீடியாவில் விமர்சனம் செய்பவர்களுக்கு நன்றி, அது தான் என்னை மேம்படுத்த வைக்கிறது. அதை தாண்டி, கிரிஞ்சா, பூமரா பண்றவங்களுக்கு பதில் சொன்னால் நாம முட்டாள் ஆகிவிடுவோம். பதில் சொல்லாமல் இருப்பது தான் நல்லது.
ஒரு பெண் ப்ரேக் அப் செய்தால் அதை சமுதாயம் தவறாக பேசினால், அதை எடுத்துக் கொள்ளக் கூடாது. சமுதாயத்திற்கு பழி சொல்லத்தான் தெரியுமே தவிர, வழி சொல்லத் தெரியாது. அதை கடந்து விட வேண்டும். சமுதாயம் என்னை எப்படி பார்க்கும் என்று பயந்து கொண்டிருந்தால், யார் என்று தெரியாத அந்த 4 பேருக்காக பயந்து ஒதுங்க கூடாது. கண்ணு முன்னாடி வராத அந்த 4 பேருக்காக வாழ முடியாது.
நான் கடவுளை நம்புகிறேன். எனக்கு கெட்டது கொடுத்தால் கூட, அதில் ஒரு நல்லது இருக்கும் என்று நான் நம்புகிறேன்,’’
என்று அந்த பேட்டியில் ஹரிப்ரியா கூறியுள்ளார்.