‘நிற்க வைத்து திட்டிய தயாரிப்பாளர்: உடைந்து அழுத அஜித்’ காஜா மைதீன் ஷாக் தகவல்!
Anantha Poongatre: அஜித் உடல் நலம் பற்றி விசாரிக்க போனேன். அஜித் கையில் அந்த அட்டை படம். ‘ஜி, நான் திரும்ப வரமாட்டேன்னு நெனச்சுட்டீங்களா?’ என்று அஜித் கேட்டார். எனக்கு பயங்கர சங்கடம். அவருக்கு அதை விட சங்கடம்.
90களில் பல முக்கிய சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர் காஜா மைதீன். ஆனந்த பூங்காற்றே படத்தை தயாரித்த போதும், அஜித்தை அவர் முதலில் சந்தித்த போதும் நடந்தவற்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் காஜா மைதீன், இதோ அந்த பேட்டி:
முதல் படத்தில் நடிகர் கார்த்திக் உடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. இருந்தாலும், எங்களுக்குள்ளான உறவில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இதற்கிடையில் ராஜ்கபூர் சார் வந்து கதை இருக்கிறது என்றார். கதை கேட்டேன், ரொம்ப நல்லா இருந்தது. அது தான் ஆனந்தபூங்காற்றே.
‘சரி, தலைவா… யாரை வொச்சு பண்ணலாம்’ என்று கேட்டேன். அஜித் பெயரை ராஜ்கபூர் சொன்னார். அப்போது அஜித் ‘அப்கம்மிங் ஆக்டர்’. சரி என்று ரெண்டு பேரும் போய் பார்க்கலாம் என கிளம்பினோம்.
நாங்க போன நேரம், அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் தயாரிப்பாளர், வராத தமிழில், வம்பாக அஜித்தை நிற்க வைத்து திட்டிக் கொண்டிருக்கிறார். அஜித் அப்படியே கண் கலங்கி அவர் முன் நிற்கிறார். ‘என்னங்க, நாம வந்த நேரம் இப்படி இருக்கு?’ என ராஜ்கபூரிடம் கேட்டேன்.
அதன் பின், அந்த தயாரிப்பாளர் போன பின், அஜித்திடம் போனோம். அவர் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘சார், ஒரு படம் பண்ணலாம்னு இருக்கோம்’ என்று தான் கூறினோம். கதை எதையுமே கேட்கவில்லை, ‘எனக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வேணும், கொடுப்பீங்களா?’ என்று கேட்டார்.
அந்த தயாரிப்பாளர் திட்டியதற்கு காரணம் அந்த பணம் தான் என்பதை புரிந்து கொண்டோம். ‘வாங்க சார் நாளைக்கு ஆபிஸிற்கு’ என்று கூறினேன். மறுநாளே அவர் கையில் , 22 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அஜித் சார் படத்திற்குள் வந்துட்டார்.
மீனா ஏற்கனவே எங்களுக்கு படம் பண்ணியவர் என்பதால், அவரை கமிட் பண்ணோம். அஜித்-மீனா இணைந்த முதல் படம் ஆனந்தபூங்காற்றே. மணிவண்ணன் சார், எங்களுக்கு கம்பெனி ஆர்டிஸ்ட் மாதிரி. அவரும் வந்துவிட்டார்.
அப்புறம் கார்த்திக் சாரை கேட்டோம். அவரும் சொல்லி வைத்தது போல, அஜித் கேட்ட அதே 22 லட்சம் ரூபாய் வேண்டும் என்றார். அவருக்கு ஒரே பேமெண்ட்ல கொடுத்தோம். இத்தனைக்கும் அவர் கெஸ்ட் ரோல் தான்.
பாலக்காட்டில் செட் போட்டு ஷூட் எடுத்தோம். வழக்கம் போல, கார்த்திக் சார் 7 வது நாளில் ‘ரொம்ப வெயிலா இருக்கு’ என்று கார்த்திக் ஆரம்பித்துவிட்டார். ‘இன்னும் இரண்டு நாள் தான் ஷூட் இருக்கு, முடிச்சிடலாம் சார்’ என அவரை சமாதானப்படுத்தி, பல இடங்களிலிருந்து ஏர் கூலர்களை வாங்கி வந்து, அவரை சுற்றி வைத்தேன். ஆனால், நடிப்பில் பிச்சு எடுத்துட்டார். அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால், அவர் தான் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.
அஜித் சார் சீன் எடுக்கலாம் என அவரை சந்திக்கப் போனால், அவருக்கு முதுகு வலி, ஆஸ்பத்திரியில் சேர்ந்துவிட்டார். அவர் திரும்ப வரமாட்டார் என என்னுடன் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள். நான், ‘சரி, அவர் குணமாகி வரட்டும், அவரை வைத்து வேறு படம் பண்ணிக்கலாம், இப்போ வேறு நடிகரை வைத்து பண்ணலாம்’ என முடிவு செய்துவிட்டேன்.
தியாகராஜன் சாருக்கு போன் பண்ணேன். அவர் நேர வந்துவிட்டார். ‘சார், ஏற்கனவே ஒரு நடிகரை புக் செய்து விட்டு, அதில் பிரசாந்த் நடிப்பது முறையாக இருக்காது; அதை சொல்வதற்காக தான் வந்தேன்’ என்று தியாகராஜன் சார் சொன்னார். அவரிடம் சூழ்நிலையை விளக்கினேன். வேண்டா வெறுப்பாக அவர் ஒப்புக் கொண்டார். அவர் கேட்ட தொகையை முன் தொகையாக கொடுத்துவிட்டேன்.
மறுநாளே, பிரசாந்த், கார்த்திக், மீனாவை வைத்து அட்டை பட விளம்பரம் ஒன்று வந்துவிட்டது. இதற்கிடையில் அஜித் உடல் நலம் பற்றி விசாரிக்க போனேன். அஜித் கையில் அந்த அட்டை படம். ‘ஜி, நான் திரும்ப வரமாட்டேன்னு நெனச்சுட்டீங்களா?’ என்று அஜித் கேட்டார்.
எனக்கு பயங்கர சங்கடம். அவருக்கு அதை விட சங்கடம். என் கையை பிடித்துக் கொண்டார். அவர் கண்ணீர் என் கையில் விழுகிறது. நான் ஒரே வார்த்தை தான் சொன்னேன், ‘சார், நீங்க வந்து தான் இந்த கதையில் நடிக்கிறீங்க’ என்று. வந்ததும் முதல் நாளே சண்டைக்காட்சி தான். படம் வெளியாகி பெரிய ஹிட்,’’
என்று தயாரிப்பாளர் காஜா மைதீன் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்