Paruthiveeran Sujatha; 'எல்லாம் மதுரை மயம்' பிறந்தநாளில் அறிவோம் சுஜாதாவை!
100 படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை சென்னையில் குடியேறாத சுஜாதாவிற்கு ஒரே ஒரு ஆசை முழு நீள காமெடி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதே அது...!
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் சமீபகாலங்களில் அதிகம் நடித்து வருபவர் சுஜாதா. கடந்த 2004ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனின் விருமாண்டி திரைப்படத்தில் பேச்சியாக அறிமுகமானார். அதில் பெரிதாக பேசப்பட வில்லை. பின் 2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது 100வது படத்தை நெருங்கி வந்தாலும் பருத்தி வீரன் சுஜாதா என்றே தன்னை திரையுலகில் இன்றளவும் அடையாளப்படுத்தி வருகிறார். பசங்க, களவாணி, சுந்தரபாண்டியன், சுறா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, விசுவாசம், கோலிசோடா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சுஜாதா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன் குழந்தைகளுடன் இருப்பதே தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இவருக்கு சுருதி பிரியா, சுபிக் ஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னதான் இவர் தன்னை பருத்தி வீரன் சுஜாதா என்று தன்னை அடையாளப்படுத்தி வந்தாலும் இன்று வரை பெரும்பாலான இணையதள ஊடகங்கள் இவரை சுஜாதா சிவக்குமார் என்றே அழைத்து வருகின்றன. உண்மை என்ன வென்றால் இவரது கணவர் பாலகிருஷ்ணன் அரசு பணியில் உள்ளார். இவரது தந்தை பெயரும் பாஸ்கரன் அப்படி இருக்கையில் சிவக்குமார் என்ற பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்றே தெரியவில்லை.
உண்மையில் சுஜாதா விருமாண்டி படத்தில் நடிகை அபிராமிக்கு மதுரை பேச்சு வழக்கை சொல்லிக் கொடுக்க வந்து இன்று அவரே சுமார் 100 ஆவது படத்தில் நடிக்க உள்ளார்.
ஏ முத்தழகு இங்க வாடி கூப்பிடுறது காதில விழுகலையா வாடி இங்க, எனக்கு இந்த கணக்கு வாத்தி எல்லா பிடிக்கவே பிடிக்காது கல்யாணம் ஆகியும் கனவுலையு கம்ப வச்சு மிரட்டிக்கிட்டு இருக்காங்க... அவங்களயெல்லாம் கிண்டல் பண்ணதுக்கு தா எனக்கு ஒரு கணக்கு வாத்தி புருஷனா வாச்சுருக்கு, யோசன மஞ்சு வாண்டுதா, அக்கா நீ பேசாம இருக்கா எப்ப விடணு எப்ப பிடிக்கணுனு எனக்கு நல்லா தெரியு... என்று தொடர்ச்சியாக தனது கீச்சு குரலால் தமிழகத்தை தன் பக்கம் திருப்பினார் சுஜாதா. என்னதான் இன்று விஜய், அஜித், சூர்யா,கார்த்தி, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அஜித் தான் அவரது ஆதர்சன நடிகராம். தன் கல்லூரிக் காலங்களில் நடிகர் அஜித்துக்கு காதல் கடிதம் தீட்டியதாக அவரே சில இடங்களில் சொல்லி உள்ளார். இவரது திறமையை அங்கீரிக்கும் வகையில் விகடன் விருது, விஜய் டிவி விருது, பிலிம்பேர் விருது, கோல்டன் குளோப் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களுடன் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி உள்ள நடிகை சுஜாதாவிற்கு இதுவரை ஒரே ஒரு குறை உள்ளதாம். அது என்ன வென்றால் ரஜினியுடன் நடிக்க வில்லை என்பது தான் அண்ணாத்த படத்தில் வாய்ப்பு கிடைத்தும் ஹால்சீட் பிரச்சனையால் தட்டி போய் விட்டது என்று தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையிலிருந்து விஜய் தொலைக்காட்சியின் மகா நதி தொடர் வாயிலாக தற்போது சின்னத்திரைக்குள் எட்டிப்பார்க்க துவங்கி உள்ளார்.
100 படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வரை சென்னையில் குடியேறாத சுஜாதாவிற்கு ஒரே ஒரு ஆசை முழு நீள காமெடி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதே அது...! இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் உங்கள் ஆசைகளும் கனவுகளும் நிறைவேற ஹெச்.டி தமிழ் சார்பில் வாழ்த்துக்கள் சுஜாதாமேடம்.
டாபிக்ஸ்