Pa. Ranjith: ‘விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணோம்’ பா.ரஞ்சித் மனைவி அனிதா பேட்டி!
Pa. Ranjith Wife Anitha: ‘காதல் திருமணம் என வரும் போது, எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு யாரும் இல்லை. ஆனால் அம்மாவும், அப்பாவும் என்னை கேள்வி கேட்பார்கள் என்று நினைத்தேன்’
இயக்குனர் பா.ரஞ்சித் மனைவி அனிதா, சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி, கவனம் பெற்று வருகிறது. இதோ அந்த பேட்டி:
‘‘நான் ரஞ்சித்தை பார்த்த நாள் முதல் , அவரை காதலித்த நாளிலிருந்து காதல் மீதான அவரது புரிதல் எனக்கு நன்றாக தெரியும். வெளியுலகத்திற்கு அவர் சொல்றது வேறு மாதிரி புரியலாம். முதல் படத்தில் இருந்தே அவரின் காதல் புரிதல், சின்ன விசயத்தில் கூட இருக்கும். சரியாக கவனத்திருந்தால், அது உங்களுக்கு புரியும்.
காதலித்த நேரத்தில், காதலை வெளியே சொல்வதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. காதலிக்கும் போதே எங்கள் வீட்டிலேயே நானும் ரஞ்சித்தும் இருக்கும் பெயிண்ட்டிங் செய்து, சுவற்றில் மாட்டினேன். சில பேர் டீஸ் பண்ணுவாங்க, சில பேர், ‘இதெல்லாம் ரொம்ப தூரத்துக்கு போகாது’ என்று சொன்னாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்கல, அது என்னோட இயல்பு.
இருவருமே அட்டம்ப்ட் நுழைவுத்தேர்வில் தான் முதன் முதலில் சந்தித்தோம். அவரை பார்க்கும்போது, ஹால்டிக்கெட்டை எடுத்துவிட்டு பயத்தோடு பார்த்தேன், அவர் நான் திமிராக பார்ப்பதாக நினைத்துக் கொண்டார். அவர் சேர்ந்து, ஓராண்டிற்கு பிறகு தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன்.
ஜூனியர் என்பதால் எனது பேட்ஜ்ஜில் இருப்பவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ரேகிங் பண்ணுவாங்க. ரஞ்சித், என்னை ரேகிங் பண்ணவில்லை, மற்றவர்களையும் பண்ணவிடாமல் பார்த்துக் கொண்டார். என்னை பார்க்கத் தான் வருவார் என்று சொல்லமாட்டேன்; என்னைச் சுற்றி உள்ள பெண்களையும் பார்க்கத் தான் ரஞ்சித் அங்கு வருவார். அதன் பின் ஒருவருக்கு ஒருவர் புரிதல் காரணமாக பிடித்தது. எதுவுமே இல்லாமல் பிடிக்கும் அல்லவா, அப்படி தான் எங்களுக்கும் பிடித்தது.
கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் பிரச்னைகள் நிறைய இருக்கும். அப்போது ரஞ்சித் தான் முதலில் நிற்பார். புதுவிதமான போராட்டங்களை முன்னெடுப்பார். பெண்கள் சார்பாக நான் தான் அவருடன் முதலில் நிற்ப்பேன். இறுதி ஆண்டியில் தான், சினிமாத்துறைக்கு போக முடிவு செய்தார். உடனே, வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார்.
வேலையில் நான் அவரை தொந்தரவு செய்யமாட்டேன். எங்களுக்குள் அது தொடர்பாக இதுவரை சண்டை வந்தது இல்லை. அதே மாதிரி நான் ஓவியம் வரையும் போது, அவர் தொந்தரவு செய்யமாட்டார். இது கல்லூரி காலத்திலிருந்தே எங்களுக்குள் வந்த பழக்கம்.
காதல் திருமணம் என வரும் போது, எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு யாரும் இல்லை. ஆனால் அம்மாவும், அப்பாவும் என்னை கேள்வி கேட்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் எனக்கு சரியாக இருக்குமா என்று மட்டும் தான் பார்த்தார்கள். புரிந்து கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் சரி, அவர் வீட்டிலும் சரி புரிந்து கொண்டார்கள்.
என்னுடைய ஆசை, ஒரு கிறிஸ்தவ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. அதை அவரது விருப்பமில்லாமல் செய்து கொண்டேன். அவர் திருமணம், தாலி கட்டுவது போன்றவற்றை விரும்பமாட்டார். ஆனால் நான் சென்டிமென்ட்டா என் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டேன்,’’
என்று அந்த பேட்டியில் அனிதா ரஞ்சித் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்