HBD Shankar Ganesh: இசை உலகின் நாயகர்..தமிழ் சினிமா கண்ட சங்கர் கணேஷ்
தன் இசை இரட்டையரான சங்கரின் பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டு, மறைந்த அவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ் என்கிற சங்கர் கணேஷ்.
இரட்டையர்கள் கூட்டணியில் தமிழ் சினிமா எத்தனையோ இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரை சந்தித்திருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சந்திரபோஸ்-தேவா என அந்த பட்டியல் பெரிதாக போகும். அந்த வரிசையில் சங்கர்-கணேஷ் கூட்டணி பெரிய பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள்.
தனது இசை கூட்டாளி சங்கர் மறைந்த பிறகும், தனது பெயரை சங்கர் கணேஷ் என பெருமையோடு இன்றும் அழைத்துக் கொண்டு, பிறரையும் அழைக்க வைக்கும் கணேஷ் என்கிற சங்கர் கணேஷின் பிறந்தநாள் இன்று.
79 வயதை கடக்கும் சங்கர் கணேஷ், எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து இசையமைத்தவர். ஆனால் இளமையில் அவர் இசைத்துறைக்கு வந்தது, பேர்விபத்து. பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடனமாடுவதற்கு தலைமை ஆசிரியர் அழைத்ததும், ‘ஓ தேவதாஸ்..’ பாடலுக்கு பெண் வேடத்தில் நடன மாடியதும் தான், கணேஷின் ஆரம்ப கால சினிமா மோகம்.
வீட்டில் எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் கணேஷை, விஸ்வநாதனிடம் சேர்த்து விடலாம் என முடிவு செய்கிறார் அவரது அப்பா. ஒருநாள் விஸ்வநாதனிடம் அழைத்தும் செல்கிறார். விஸ்வநாதன் ஒரு பாடல் பாடச் சொல்ல, ‘அமுதும் தேனும் எதற்கு…’ என்கிற பாடலை பாடியிருக்கிறார் கணேஷ்.
சுமாரான குரலாக இருந்ததால், அங்கிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். தன் பாடலை ரசித்து சிரிக்கிறார்கள் என்று நினைத்து இன்னும் குஷியாக பாடியுள்ளார் கணேஷ். அதன் பிறகு தான், விஸ்வநாதன் அழைத்து, ‘தம்பி முறைப்படி இசை கற்று வா’ என கணேஷிடம் கூறியுள்ளார். அதன் பின் இசை பயிற்சிக்கு சென்ற கணேஷ், முறைப்படி இசை கற்றார்.
அதன் பின் விஸ்வநாதனிடம் சேர்வதற்காக அவர் வீட்டு வாசலுக்குச் சென்று நிற்பதை வழக்கமாக்கினார் கணேஷ். அவரைப் போலவே இன்னொருவரும் அங்கு வாய்ப்புக்காக வந்து நின்றார், அவர் தான் சங்கர். இருவரும் தினமும் நிற்பதும், அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு விஸ்வநாதன் செல்வதும் வழக்கமாகிவிட்டது.
ஒரு கட்டத்தில் சங்கரை விஸ்வநாதன் சேர்த்துக்கொண்டார். சங்கரின் அண்ணன் இசையமைப்பாளர் என்பதால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு, கணேஷிற்கு கிடைக்கவில்லை. சரி ஆளை மாற்றுவோம் என்று, ஜி.கே.வெங்கடேஷிடம் சேர்ந்தார் கணேஷ். இதற்கிடையில் விஸ்வநாதன் பாசமலர் படம் பண்ணும் போது, அவரிடம் இருந்த ரிதம் ப்ளேயர் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு தற்செயலாக உள்ளே வருகிறார் கணேஷ்.
விஸ்வநாதனின் ‘வாராய் என் தோழி வாராயோ’ பாடலுக்கு தான், முதல் முதலில் வாசித்தார் கணேஷ். கணேஷின் வேலையையும், முனைப்பையும் பார்த்து பல வேலைகளை கணேஷிற்கு கொடுக்கத் தொடங்கினார் விஸ்வநாதன்.
அப்போது பஞ்ச் சவுண்ட் எல்லாம் கிடையாது, எம்.ஜி.ஆர்., வீரப்பாவிற்கு சண்டை காட்சிகளுக்கான சத்தத்தை சங்கரும், கணேஷூம் கொடுக்கத் தொடங்கினர். அதுவே அவர்களுக்குள் நெருக்கத்தை தந்தது. இருவரும் இணைந்து இசையமைக்க அதுவே காரணமும் ஆனது. டி.எம்.எஸ்., மற்றும் சுசிலாவிற்கு விஸ்வநாதன் பாடல் சொல்லிக் கொடுக்கும் போது, என்றாவது ஒரு நாள், நாமும் இவர்களுக்கு பாடல் சொல்லித் தர வேண்டும் என்கிற ஆசை கணேஷிற்குள் துடித்திருக்கிறது.
கவிஞர் கண்ணதாசனை பிடித்து, இசையமைக்கும் ஆசையை சொல்ல, ஜெய்சங்கர் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்கள் சங்கர்-கணேஷ். அதன் பின் எம்.ஜி.ஆர், ரஜினி என சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் இசையமைத்து, இரு தலைமுறைகளில் இன்றியமையாத இசையமைப்பாளராக வலம் வந்தனர்.
இயக்குனர்களின் இசையமைப்பாளராக இன்றும் அறியப்படும் சங்கர்-கணேஷ் கூட்டணியில் சங்கர் இறந்துவிட்டாலும், தன் இசை இரட்டையரான சங்கரின் பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டு, மறைந்த அவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ் என்கிற சங்கர் கணேஷ்.
தமிழ் சினிமாவுக்கு தவிர்க்க முடியாத பாடல்களை தந்த சங்கர் கணேஷ், இன்னும் பல ஆண்டுகள் இன்புற்ற வாழ வாழ்த்துகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்