அட்டர் ஃப்ளாப் ஆன கங்குவா… எங்கடா அந்த சிவா.. இரத்தம் கொதிக்குது... கொந்தளிக்கும் சூர்யா ரசிகர்கள்
கங்குவா படத்தை நெட்டிசன்கள் கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த பதிவுகளை இங்கே பார்க்கலாம்
கங்குவா வசூல்
கங்குவா திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 14.9 கோடி ரூபாயை வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியான 2ம் நாளான நேற்று முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லாமல் வெறும் 3.24 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது. மொத்தமாக படம் 18.14 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்திருந்தது.
அதேபோல இந்திய அளவில் படம் வெளியான 2 நாட்களில் மொத்தம் 31.43 கோடி ரூபாயும், உலக அளவில் படம் 40 கோடி ரூபாயும் வசூலித்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவல் sancnilk.com எனும் வலைதளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே எதிர்மறை விமர்சனங்கள் அதிகளவில் இருந்ததால், படம் பார்க்க செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
கங்குவா ரெக்கார்டு
ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழுக்கும் மேற்பட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகியுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.
எதில் கோட்டை விட்டார் சிவா
நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர்தான் குலத்தொழில்.
வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான். இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று இன மக்கள் கூறுகின்றனர். அதற்கு கங்குவா எதிராக நிற்க, என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி, கங்குவன் கையில் மகனை ஒப்படைத்து விட்டு உடன் கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி.. அதன் பின்னர் என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்ல துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை
படத்தின் ஆகப்பெரும் பலம் படத்தின் கலை இயக்கமும், கிராஃபிக்ஸ் குழுவின் உழைப்பும்; இந்த இரு குழுவின் அர்ப்பணிப்பு மிக்க பணியே, கங்குவாவின் உலகத்தை நிஜத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்து இருக்கிறது. கங்குவாவின் உருவத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சூர்யா. வீரியம் மிகுந்த கண்கள், மிடுக்கான உடல் தோற்றம், துல்லியமாக எமோ ஷனை கடத்தும் திறன் உள்ளிட்டவை வழக்கமான சூர்யாவின் அர்ப்பணிப்பை பறை சாற்றின. கிளைமாக்ஸ் சிக்ஸ் பேக் தோற்றம் அதகளம்.
ஆக்ரோஷ வில்லனாக உதிராவின் உருவத்தில் வரும் பாபி பார்வையாளர்களை நிலை குலைய செய்கிறார். திஷா பதானி வெறும் கிளாமருக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். யோகி பாபு காமெடி எப்போதும் இடம் பெறும் தரத்தில் இல்லை. கிங்ஸ்லி வீண். பழங்காலத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்ளுக்கு அதற்கு உரித்தான நடிகர்கள் நியாயம் செய்திருந்தாலும், எந்த கதாபாத்திரமும் மனதில் தங்கவில்லை.
வெற்றியின் கேமரா ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. பின்னணி இசையில் பிரமாண்டத்தை முன் நிறுத்தி இருக்கிறார் தேவி ஶ்ரீ பிரசாத். இவையெல்லாம் படத்தின் பலமாக இருக்கும் நிலையில், படத்திற்கு ஆகப்பெரும் பலவீனமாக மாறியிருப்பது இயக்குனர் சிவா கதை சொன்ன விதம்.
பிரான்சிஸ் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் செயற்கைத்தனத்தின் உச்சம். பழங்காலத்து கதையை பொறுத்தவரை, அந்த கதை உலகம் நம்பும் படியாக அமைக்கப்பட்டு இருந்தாலும், கதையை இன்னும் ஆழமாக, நிதானமாக சொல்லாமல் விட்டது பார்வையாளர்கள் படத்தோடு எமோஷனலாக கனெக்ட் ஆகமால் பார்த்துக்கொண்டது. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாகவும் அமைந்து விட்டது. இது அடுத்தடுத்து வரும் ஆக்ஷன் காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும், அதனை ரசிக்க விடாமல் செய்து விட்டது. வசனங்கள் பெரிதாக கவனம் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை. மொத்தத்தில் நிதானத்தில் கோட்டை விட்டது கங்குவாவை இறங்கு பாதையில் கை பிடித்து அழைத்து சென்று இருக்கிறது என்பதே நிதர்மான உண்மை!
டாபிக்ஸ்