Maaveeran Review: ‘கை கொடுத்ததா? கை கடித்ததா?’ SK-வின் மாவீரன் முதல் விமர்சனம் இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maaveeran Review: ‘கை கொடுத்ததா? கை கடித்ததா?’ Sk-வின் மாவீரன் முதல் விமர்சனம் இதோ!

Maaveeran Review: ‘கை கொடுத்ததா? கை கடித்ததா?’ SK-வின் மாவீரன் முதல் விமர்சனம் இதோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 14, 2023 03:31 PM IST

Maaveeran FDFS Review: ‘சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் சற்று முன் வெளியாகியுள்ளது. தியேட்டரில் இருந்து முதல் விமர்சனம் இதோ..’

மாவீரன் படத்தின் போஸ்டர்
மாவீரன் படத்தின் போஸ்டர்

 

கதையின் கரு:

கரையோரம் வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் அமர வைக்கிறது அரசு. அங்குள்ள வீடுகள் அனைத்தும் தரமில்லாதவையாக இருக்க, நிழல் தேடி வந்த அத்துனை குடும்பங்களும் தினம் தினம் ஏதோவொரு பிரச்சினையில் முட்டி நிற்கின்றன.

 

அதில் சத்யாவின் (சிவகார்த்திகேயன்) குடும்பமும் ஒன்று. பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டாலும், அலட்சியப்போக்கான பதில்களே வந்து விழுகின்றன. காரணம் அந்த தரமில்லாத குடியிருப்பிற்கு பின்னால் இருப்பதே அரசு அமைச்சர்தான்.

இந்த பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னாமாகும் சத்யா ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான். அப்போது அவனுக்கு ஒரு குரல் கேட்கிறது. அந்தக்குரல் அதுவரை இருந்த சத்யாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை!

பிரமிக்கவைக்கும் கதைத்தேர்வு 

தன்னுடைய எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு புது முயற்சியை கையில் எடுக்கும் சிவகார்த்திகேயன் இந்தப்படத்திலும் அந்த பரிசார்த்த முயற்சியை தொடர்ந்திருக்கிறார். அந்த முயற்சியின் வெளிப்பாடுதான் அவர் இந்தப்படத்தில் ஏற்று நடித்திருக்கும் சத்யா கதாபாத்திரம். 

அதாவது ஒரு கோழை அவனின் அனுமதியின்றி வீரனாக மாறினால் அந்தக்கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்யுமோ அதைத்தான் சத்யா படம் முழுக்க செய்கிறான். இதுதான் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க். 

 

மிகவும் சிக்கலான அந்த கதாபாத்திரத்தின் மையப்புள்ளியை கனக்கச்சிதமாக பிடித்த சிவா அதன் நேர்கோட்டில் எந்தவொரு பிசிறும் இல்லாமல் பயணித்து இருக்கிறார். அத்துடன் வழக்கம் போல எமோஷன், காமெடி, என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார்.

 

யோகிபாபுவின் காமெடி ஒவ்வொன்றும் அதகளம்.. அவரால் தியேட்டர் முழுக்க சிரிப்பு பட்டாசு. அதிதிக்கும் அழகான கதாபாத்திரம். நன்றாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

வில்லனாக மிஷ்கின் காமெடி கலந்த வில்லனிசத்தை அவர் நன்றாக வெளிப்படுத்தியிருந்தாலும், அவரின் சீரியஸான முகம் சீரியஸான காட்சிகளில் சிரிப்பை வரவழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சுனில் கதாபாத்திரமும் கவனம் ஈர்த்து இருக்கிறது. கறாரும் அன்பும் கலந்த அம்மாவாக நடித்து இருக்கும் சரிதாவின் நடிப்பு யதார்த்த ரகம்.

எழுத்து அபாரம்: 

மிக மிக சவாலான கதையை தன்னுடைய எழுத்து திறமை கொண்டு திரைக்கதையில் சுவாரசியம் குறையாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார் மடோன். அவரின் எழுத்திற்கு தனிபாராட்டுகள். 

எல்லா கதாபாத்திரடமும் இருந்தும் அவருக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகவும் துல்லியமாக வாங்கி இருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம். அவரின் சமூக பொறுப்புணர்வு. பெரிய ஹீரோ கிடைத்துவிட்டார் என்பதற்காக ஆக்‌ஷன் பக்கம் தாவாமல் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளை தெளிவொடு எடுத்து வைத்திருப்பது சிறப்பு. வசனங்களும் அதையே பிரதிபலிக்கின்றன. படத்தின் களமும், அதில் இருக்கும்ஃபேண்டஸியும் புதுமையாக இருப்பதால் படம் நம்மை போர் அடிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பரத் ஷங்கரின் இடையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். மொத்தத்தில் பிரின்ஸை மாவீரன் மீட்டெடுத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.