Surya On Rolex: மாஸ் இல்ல..மரண மாஸ் “லோகேஷ் உடன் இணையும் ரோலக்ஸ்”-உறுதிபடுத்திய சூர்யா! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறா நடிகர் சூர்யா!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரும் நடிகர் சூர்யாவும் முதலாவதாக ‘இரும்புக்கை மாயாவி’ என்ற திரைப்படத்தில் இணைவதாக திட்டமிடப்பட்டது. லோகேஷின் கனவு படைப்பான அதனை மிகவும் மும்மரமாக உருவாக்கினார் லோகேஷ். எழுத, எழுத கதை மிகப்பெரிய பொருட் செலவைக் கேட்டது. ஆனால் அப்போது லோகேஷூக்கு அதனை கையாள்வதற்கான தைரியம் இல்லை. இதனையடுத்து அந்தத்திரைப்படத்தில் இருந்து விலகினார் லோகேஷ்.
அதற்கு பிராயச்சித்தமாக தன்னுடைய ஆஸ்தான குரு கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை சூர்யாவிற்கு கொடுத்து மிரள வைத்தார் இரத்தமும் சதையுமாக அதிரடி வில்லனாக வந்த சூர்யாவின் அந்த தோற்றம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
சில நிமிடங்களே வந்த கெஸ்ட் ரோலை வைத்து ஒரு முழு நீளத்திரைப்படம் வேண்டும் என்று ரசிகர்கள் சூர்யாவிற்கும், லோகேஷ் கனகராஜிற்கும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தனியார் விருது விழாவில் பேசிய சூர்யா, “வந்தால் நிச்சயம் ரோலக்ஸ் திரைப்படம் செய்யலாம்” என்று கிரீன் சிக்னல் கொடுத்தார்.
இன்னொரு விருது விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனராஜூம் நிச்சயம் நானும் சூர்யாவும் இணைவோம் அந்தத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 150 நாட்கள் நடக்கும் என்று கூற எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டது.
இதனால் இந்தப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி காணப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, இந்தக்கூட்டணி குறித்து பேசினார். அவர் பேசும் போது, “லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு தனிக்கதையை ரெடி செய்து என்னிடம் சொன்னார். எனக்கு அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது. அது விரைவில் நடக்கும்.
அந்தத்திரைப்படம் முடிந்த உடன் லோகேஷ் கனகராஜின் இரும்புக்கை மாயாவி திரைப்படம் தொடர்பான பணிகள் தொடங்கும். விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் முடித்த உடன் வாடிவாசல் திரைப்படம் தொடர்பான பணிகள் தொடங்கும். சுதாகொங்கரா இயக்க இருக்கும் சூர்யாவின் 43 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.” என்று பேசினார்.