Lokesh kanagaraj: ‘டரான்டினோ மாதிரி 10 படம் தான்.. போய்ட்டே இருப்பேன்!’ - ஓய்வு முடிவை மறுமுறை உறுதி செய்த லோகேஷ்!
லோகேஷ் கனகராஜ் 10 திரைப்படங்களை இயக்கி விட்டு திரைத்துறையை விட்டு விலகி விடுவேன் என்று மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் ‘கைதி’ ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
இந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அடுத்தாக லோகேஷ் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத்திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்தப்படத்தை புரமோட் செய்யும் வகையில், கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு பேசிய அவர், “10 திரைப்படங்களை இயக்கி விட்டு நான் ஒதுங்கிவிடுவேன்” என்றார்
இது குறித்து பேசிய அவர், “முன்பு இருந்தே நான் அந்த விஷயத்தை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன். ஒரு 10 படம் டைரக்ட் செய்து விட்டு, திரைத்துறையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இயக்குநராக வலம் வரும் குவெண்டின் டரான்டினோவை பார்த்துதான், நான் இந்த முடிவு எடுத்தேன்.
42, 43 வயதில் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு விட்டு சென்று விடலாம் என்று நினைக்கிறேன். கமிட் செய்த படங்களை முடித்து விட்டு, ட்விட்டரில் நான் திரைத்துறையை விட்டு விலகிக்கொள்கிறேன் என்று ட்வீட் செய்து விட்டு பெருமையாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்தேன். அப்போது எனக்கு பிடித்த மூத்த இயக்குநர்கள் சிலர் அப்படி சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டனர்.
என்னுடைய 5 வது திரைப்படம் ‘லியோ’. அடுத்ததாக ரஜினிகாந்தின் 171 வது படம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக நிச்சயமாக கைதி 2 படத்தை இயக்கப்போகிறேன். அதன் பின்னர் விக்ரம் 2, ரோலக்ஸ் இருக்கிறது. பிரபாஸூடன் படம் செய்வதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அத்துடன் ‘எண்ட் கேம்’ என்று போட்டு முடிவு எழுதி விட வேண்டியதுதான். நான் இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸாக இருக்கிறேன். நான் பிறந்ததில் இருந்தே கடைசி பெஞ்ச்தான் என்னை கொண்டு முதல் பெஞ்சில் உட்கார வைத்தால், என்னால் அதையெல்லாம் கையாள முடியாது. ” என்று பேசினார்.
டாபிக்ஸ்